Wednesday, December 17, 2014

பிரயாகை-49-தாமரைப் பூத்தத்தடாகம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

பிரயாகை-49 எனக்கு மிகவும் பிடித்தது. இது மிகவும் பிடித்தது என்றால் மற்றவை குறைவாக பிடித்து என்ற எண்ணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை. இந்த பகுதி வாழ்க்கையை திருப்பி நிறுத்துகின்றது. எண்ணம், சொல், செயல், விதி, காலம், அறிவு, ஆற்றல் அனைத்தையும் திருப்பி வைக்கின்றது. திருப்பி வைப்பதாலேயே உயிருடன் உயிர்ப்புடன் இருப்பது தெரிகின்றது. கதை அல்ல வாழ்க்கை என்று காட்டுகின்றது. வாசித்துக்கொண்டு இருக்கும்போதே கதைக்குள் வாழ்ந்துக்கொண்டு இருப்பதுபோல் உள்ளது. 

கண்ணுக்கு தெரியாத விதி மனித வாழ்க்கையோடு விளையாடிக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத விதி என்றாலும் யாரோ ஒருவருக்கு தெரிந்ததுதான் அது.

உச்சைசிரவஸின் வால் கருமையாக இருந்தது வினிதையின் வாழ்வில் வந்த விதி ஆனால் கத்ருவின் வாழ்வில் அது விதியல்ல செயல்.

ஒரு செயல் ஒருவனுக்கு கடமையாகவும் ஒருவனுக்கு விதியாகவும் ஆகிவிடுகின்றது. நாகங்களுக்கு அது கத்ருவின் கட்டளையால் கடமையாகிறது. கருடனுக்கு அது அடிமை என்னும் விதியாகிறது.

இவ்வளவுதான் கதை, இவ்வளவுதான் வாழ்க்கையும் என்று ஓய்ந்துப்போகும் தருணத்தில் எழுந்துவரும் குந்தியை இன்று ஒரு குருவின் இடத்தில் வைத்துப்பார்க்கின்றேன். பெரும் பாறையை முட்டி வெளிவரும் சிறுசெடியின் விடுதலையை காண்கின்றேன். ஜெவின் ஞானம் கண்டு மகிழ்கின்றேன். இந்த இடத்தில்தான் இந்த கதை மிகவும் பிடித்தது.

கதையின்படி மறதியை உருவாக்கும் விஸ்மிருதியும், மரணத்தை உருவாக்கும் மிருதியுத்தான் இனி பாண்டவர் வாழ்க்கைக்கு இடமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பாண்டவர்கள் இடத்தில் நானே நிற்கின்றேன். எல்லாவற்றையும் மறந்துப்போதல், மறந்துபோவதன் மூலம் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இறந்துபோதல் அன்று வேறு என்ன இருக்கு? பிணம் அல்லது நடைபிணம் இதுதான் இனி வாழ்க்கை. கதைமட்டும் அல்ல வாசகன் வாழ்க்கையும் இங்கு நின்றுவிடுகின்றது. 

பெரும் சதியில் இருந்து உயிர் தப்பித்து வந்தாகிவிட்டது இது போதும். இனி ஒரு சதியில்லாத நல்ல அமைதியான நல்ல வாழ்க்கையை வாழ்ந்தால்போதும் என்பதைதான் எளிய தூய எந்தவித விஷமும் இல்லாத மனம் விரும்பும். தாயின் மனமும இதைத்தான் விரும்பும் கதையின் படம் சுருங்கி நாகம் தனது ஆடலை நிறுத்தி படுத்துவிட்டது. வெண்முரசு தொடங்கியதில் இருந்து கதை இப்படி தனது ஆடல் முழுவதையும் நிறுத்திக்கொள்ளவது எங்குமே இல்லை. புயலுக்கு பின்பு அமைதிபோல கதையில் அமைதி வந்து குடிக்கொண்டுவிட்டது. நாடகமேடை இருண்டுவிட்டது. இனி எப்படி நாகம் எழுந்து தனது படத்தை எடுக்கும் என்று நினைத்துக்கொண்டு நிற்கும்போது. கர்மம்வேறு, கர்மயோகம் வேறு என்று கோடு கிழித்து வேற்றுமையை காட்டும் இடத்தில் கதை துள்ளி எழுந்து ஒளிவிடுகின்றது. தமோகுணத்தில் உள்ள வாழ்க்கை வாழ்க்கையாக இருந்தாலும் அது மனித வாழ்க்கைதானா? என்று வினா எழுப்பும்போது “நான்“ என்னும் நாகம் விழித்து படம் எடுக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் வாழ்கையின் நாகப்படம் தாழ்ந்துபோகும்போது நினைத்துப்பார்க்கவேண்டிய படிப்பினை இன்று.குந்தியின் ஒற்றை வரி நாகத்தின் படத்தை விரிய வைக்கிறது. 

“இருக்கலாம். ஆனால் அதில் கர்மயோகம் இல்லை. ஆகவே அது தமோகுணம் நிறைந்த வீண் வாழ்க்கையே” 

//“அதுதான் உன் சாரம்நாகம் நஞ்சாலேயே நாகமாகிறது.இல்லையேல் அது புழுதான்” என்றாள் குந்தி//

//வாழ்க்கை என்பது எதற்கு எதிராகவும் அடையப்படுவது அல்ல.இங்கே இந்தச் செடிகள் முளைப்பதுபோல நீ எழுந்தால் அதுஉனக்கு நிறைவளிக்கும்ஆனால் நீ அங்கே என் வயிற்றில்அரசமைந்தனாக பிறந்துவிட்டாய்.”//

பீமன் மட்டும் அல்ல என்னை நானும் கண்டுக்கொண்ட இடம். எதையும் மறந்துப்போகவோ, இறந்துப்போகவோ மனிதன் பிறக்கவில்லை. தமோ குணத்தில் வீழ்ந்துவிட பிறக்கவில்லை. தனக்குள் எழும் ரஜோகுணத்தை கர்மயோகத்தால் சத்வகுணமாக கனிய வைக்க பிறந்து உள்ளேன்.

வாழ்க்கையின் சூத்திரம் வெளிப்படும் இடம் ஜெ. வாழ்க்கை என்பது ஒன்றுக்கு எதிராக அடையப்படும் ஒன்று என்றுதான் மனிதன் நம்பிக்கொண்டு இருக்கிறான். அதை நம்பும்வரை அவன் ரஜோகுணத்தால் எரிகின்றான். கர்மம் அவனுக்குள் யோகமாக மாறவில்லை. அப்படி கர்மம்யோகமாக ஆகாததால் சத்வக்குணம் அவனுக்கு கைக்கு எட்டத்தூரத்திலேயே இருந்துவிடுகின்றது.

துரியோதனனும், பீமனும் ஆடிப்பிம்பங்கள் இன்று இந்த இடத்தில் ஆடிப்பிம்பங்களின் உள்ளீடு என்ன? என்ற வினா எழுந்து பீமனை அதன் அடர்த்தியோடு காட்டுகின்றது.

பீமன் துரியோதனனில் இருந்து ஒருபடி கனத்தோடு உயர்ந்து நிற்கும் இடம். பீமனுக்கு கர்மயோகம் கைக்கு எட்டும் தூரத்திலும், துரியோதனனுக்கு கைக்கு எட்டா தூரத்திலும் இருக்கின்றது.

குந்திப்போன்ற ஒரு தாய் துரியோதனனுக்கு கிடைத்திருந்தால் அவன் வாழ்க்கையின் வடிவமே மாறி இருக்கும்.. ஒரு கல்லின் இருபாதிகள் இருவேறு சிற்பிகள் கையில் கிடைத்து ஒன்று பரிசுக்கு உரியதாகி கவனம்பெறுவதும், ஒன்று கவனிப்பின்றி ஒதுக்கப்படுவதும் கண்டு வியக்கின்றேன். 

கர்மம் ஒருவனுக்கு யோகமாகவும், ஒருவனுக்கு பொறமையாகவும் ஆகும் தருணத்தின் விதை விழும் கணம். 

மனிதன் புறமும் அகமும் உடையவன். புறத்தை நாம் கட்டமைக்க பலவழிகள் உள்ளன ஆனால் அகத்தை கட்டமைக்க குருபோன்று ஒருவர் வாய்க்கும்போதுதான் முடியும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசை சொல்வார்கள். இந்த இடத்தில் குந்தி பீமனுக்கும் எனக்கு குருவாகி நிற்பதை காண்கின்றேன். குரு என்பது அந்த கணம்தான். அந்த கணத்தை பீமன் கண்டு கொள்வது அற்புதம். கர்மயோகத்தைவிடவும் பெரும் ஞானம் ஒன்று நோக்கி இருக்கும் பார்த்தனுக்கு அந்த இடம் வெறுமனே கேட்டுக்கொண்டு கிடக்கும் இடம் மட்டும்தான் என்பதை காட்டி அர்ஜுனன் அகத்தை விரிவுப்படித்தயவிதம் அழகு. //அர்ஜுனன் மழையை கேட்டுக்கொண்டே கிடந்தான்// அர்ஜுனன் அகம் கேள்வி மழையில் நினைந்துக்கொண்டு இருக்கிறான் ஆனால் அவன் கேள்விகள் குந்தியிடம் இல்லை.  
  
வாழ்க்கையின் பல மைய இருள் முடிச்சிகளை இன்றைய பகுதியில் அவிழ்த்து உள்ளீர்கள் ஜெ. அத்தனையும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை ஆனால் அவை எல்லாம் புரிந்துக்கொள்ளவேண்டியவை என்பதை புரிந்துக்கொள்கின்றேன்.

இந்தப்பகுதி ஒரு தாமரைப்பூத்த தடாகம், மனித அகத்தின் விதை கிடக்கும் சகதிபோன்ற இடமும், மனித அகம் மலர்ந்து நிற்கவேண்டிய நீர்மட்டத்திற்கு வெளியே உள்ள வெளியும் ஒரே இடத்தில் காணக்கிடைக்கின்றது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.