Wednesday, December 24, 2014

பிரயாகை-56-சேர விழையும் உருவம்



அன்பள்ள திரு.ஜெ வணக்கம்.

அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ-என்கிறான் பாரதி.

இதைத்தான் பீஷ்மர் சொல்கின்றார்  //மாவீரர்கள் நெருப்புபோலஅவர்களை எங்கும் ஒளித்துவைக்க முடியாதுஅவர்கள்இருக்கும் இடம் விரைவிலேயே தெரிந்துவிடும்அப்போதுஅவனும் அறிந்துகொள்ளட்டும்” என்றார் (பீஷ்மர்)-பிரயாகை-55

தழலின்  மூல ஆற்றலால்  குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை, இரண்டும் ஒன்றுதான்  என்று நாம் சொன்னாலும், ஒரு அகல்தீபம் கொடுக்கும் வெளிச்சமும் ஒரு அண்ணமாலைதீபம்கொடுக்கும் வெளிச்சமும் வேறு வேறு. வெளிப்படும் ஆற்றலால் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது. இந்த மிஞ்சல்தான் ஒரு மனிதனின் சக்தி என்கிறோம். திறமை என்கிறோம், ஆற்றல் என்கிறோம் அதைக்கொண்டுதான் அவன் நமக்குள் இருக்கிறான். 

விதுரரும், பீஷ்மனும்  மதி ஆற்றலின் மூலத்தில் ஒருவரேதான் அதுவெளிப்படும் விதத்தில் வேறுவேறாக இருக்கிறார்கள். பீஷ்மர் என்னும் அண்ணமலை தீபத்தின் முன் நிற்கும் அகல்தீபம்போல வீதுரர் ஆகிவிடுகின்றார். ஜெவின் அற்புத பாத்திர படைப்பு. மூலம் மாறுபடமல் வெளிப்படும் ஒளியால் இருவரும் ஒளிர்வதை இன்று அற்புதமாக வடித்து உள்ளார்.

பீஷ்மர் பன்னிரண்டு ஆண்டுக்கு பிறகு அஸ்தினபுரம்  வந்தாலும் விதுரரைப்பொருத்தவரை பீஷ்மர் எப்போதும் அங்கு இருக்கும் பாவனையுடனே இருக்கின்றார் என்பதும், அதற்கு தகுந்ததுபோல் பீஷ்மர் “யாதவன் என்ன செய்கிறான்“ என்பதும் அற்புத காட்சி. கண்ணனால் விதுரர் அவமதிக்கப்பட்டு வெளியேறிய அன்று விதுரர் பீஷ்மரைத்தான் நினைத்து இருப்பார். அன்று அவருக்கு போக்கிடம் அவர் ஒருவர் மட்டும்தான். அதற்கு மருந்துபோடுவதுபோன்ற காட்சிகள் கிளைத்துவரும் அழகே அழகு. அன்று கண்ணனால் விதுரரின் அகத்தில் தோன்றிய அகவெற்றிடம் இன்று பீஷ்மரால் கண்ணன்..கண்ணன்..என்று நிரப்பப்படுகின்றது. 


ஒரு மனிதன் ஒரு இடத்தில் இருக்கின்றானா இல்லையா என்பது அல்ல அவன் வாழ்தலி பொருள். அந்த பாவனையை உருவாக்குபவன் அந்த இடத்தில் நீங்காமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான் என்பதை அறியமுடிகின்றது.

பீஷ்மனின் பாவனை மூலம் இன்று அறியமுடிவது கண்ணனின் பாவனையைத்தான். பீஷ்மர் பன்னிரண்டு ஆண்டுகள் அஸ்தினபுரியில் இல்லை என்றாலும் அவர் பாவனைகள் மூலம் அஸ்தினபுரியில் இருப்பதாகவே காட்டுகின்றார் அதனால்தான் பீஷ்மர் என்ற ஒற்றை பெயர்மூலம் அஸ்தினபுரியை பாரதம் அஞ்சுகின்றது. இந்த பாவனையை உலகம் முழுவதும் கொண்டு செல்பவன் கண்ணன். அந்த பாவனையை பாவனை மூலம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பீஷ்மர் இடத்திலியே நிலைக்க வைத்ததன் மூலம் கண்ணன் உயர்ந்துபோகின்றான். //நெறிசார்ந்த போரைவிட சற்று நெறிமீறிய வெறும் அச்சம்நல்லதுஅது எவரையும் கொல்வதில்லை” என்றார்//

கண்ணின் பாவனை என்ன என்பதை துள்ளியமாக விளக்கும் இடத்திலிருந்து கண்ணன் எப்படி சகுனியில் இருந்து மாறுபட்டவன் என்பது துள்ளியமாக விளங்கு கின்றது. கண்ணனும் சூது செய்கின்றவன், சகுனியும் சூது செய்கின்றவன் என்பது சரியா என்ற வினாவை எழுப்பிவிட்டு நம் மனசாட்சியில் கைவைக்க வைத்துவிடுகின்றார் ஜெ. இத்தனைநாளும் இந்த வினா இரட்டைகள்போல சமமாக சரியாக இருந்தன இன்று அதில் ஒன்று தனது வெளிப்படும் சக்தியால் மாறி அண்ணாமலைதீபமாகிறது. 

பீஷ்மர்போன்ற மகாஞானி, மாபெரும் வீரர், கண்ணனை ஏன் கடவுளாக காண்கின்றார் என்ற கேள்விக்கான விடையை இன்று அறிந்தேன். 
//அவன் சீற்றமே போர் என்றபேரில் மக்களையும் மண்ணையும்சிதைக்கும் அரசுகளுக்கு எதிராகத்தான்// இந்த இடத்திற்கு பிறகு உள்ளே வந்த துரோணரைக்கண்டபின்பு விதுரன் அகம் அடையும் மாற்றம் கவனிக்கவேண்டியதாய், பெரும்பொருள் கொண்டதாய் இருக்கிறது. ஒரு சொல்தரும் பொருளும், அந்த பொருளுக்கான பருப்பொருள் விளக்கமாய் காட்சி மாறிவிடுகின்றது. போர் என்ற பெயரில் மக்களையும், மண்ணையும் சிதைத்தவர் துரோணர் என்பதை அறிந்த விதுரர் அகம்படும்பாடுதான் அது. அவர் இன்று அஸ்தினபுரியில் இருக்கிறார். குருசேத்திரம் இருக்கு ஆனால் இல்ல என்ற காட்சி வந்துவந்துபோகின்றது.// விதுரர் எழுந்து சாளரத்தின் ஓரமாக நின்றுகொண்டார். தன் கால்கள் ஏன் நடுங்கிக்கொண்டிருக்கின்றன என எண்ணிக்கொண்டார். வசைபாடப்பட்டவர் போல, தீயசெய்தி ஒன்றைக் கேட்டவர் போல அகம் கலங்கி இருந்தது// ஒரு சிறிய காட்சிக்குள் ஒரு பெரும்போரை நடத்தி விட்டு செல்கின்றீர்கள் ஜெ. கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச்சொல்ல கல்லும் முள்ளும் பூவாய்மாறும் மெல்ல மெல்ல. 

நேற்று பீஷ்மர் வாயால் கேட்ட தூயதீமை என்ற இந்த சொல்லே அதிரவைக்கின்றது. இந்த சொல்லுக்கு உரிய கணிகர் போன்றவர்கள் பிறக்கும்போது அதற்கு மாற்றாக பிறக்கும் தூயநன்மை எதுவாக இருக்கும் என்று தனக்குள் வினா தொடுத்து அதை கண்ணன் என்று கண்டுக்காண்டு அதை பார்ப்பதற்கு முன்பே புகழும் பார்க்க விழையும் பீஷ்மனை வணங்குகின்றேன். பீஷ்மருக்கு இணையாக கண்ணனும் பீஷ்மரைப்பார்க்கமல் புகழ்வதும் உள்ளம் அறிந்த உள்ளங்களின் நட்பு.  நல்ல நட்பும், பக்தியும் இப்படித்தான் உள்ளத்திலேயே தழைக்க ஆரம்பித்துவிடுமோ? சாத்யகி. “தங்களைப்பற்றி பெருமதிப்புடன் அவர் பேசுவதைகேட்டிருக்கிறேன்.” பீஷ்மர் நகைத்து “இருவரின் விழைவையும்தெய்வங்கள் நிகழ்த்திவைக்கட்டும்” என்றார். 

பீஷ்மரைப்பற்றி விதுரர் சொல்லும் இந்த சொல் இந்த இடத்தில் நினைக்கையில் எத்தனை பெரும் பொருள் கொண்டது. //தான் சென்று சேரக்கூடும் உருவம்உடனேமீண்டும் அகத்தில் எழுந்த புன்னகையுடன் சென்று சேர விழையும்உருவம் என எண்ணிக்கொண்டார்//
மீண்டும் மீண்டும் பலரும் சென்று சேரவிழையும் உருவமாக பீஷ்மர் இருப்பது அற்புதம் அதை கணம்தோறும் கணம்தோறும் செதுக்கி செல்லும் ஜெ பாராட்டுக்கு உரியவர். அந்த பீஷ்மர் சென்று சேரவிழையும் உருவமாக கண்ணன் வந்துக்கொண்டு இருப்பது அற்புதத்தின் அற்புதம். 

அன்புள்ள ஜெ. பாஞ்சாலியிடம் அழகிருந்தும் இருந்தும், அறிவிருந்தும் இருந்தும், அற்புதம் இருந்தும், தெய்குணம் இருந்தும்..ஆயிரம் இருந்தும் பிதாமர் பீஷ்மர் //அவள்கூந்தலைப்பற்றியே நிறைய கவிதைகளைபாடிக்கேட்டிருக்கிறேன்நேரில் அந்தக்கூந்தலைபார்க்கவேண்டும்” என்றார்//

பெரியோர்களின் சொற்கள் பலித்துவிடுகின்றன ஆனால் ஏன் அவை பலித்தன? என்று நொந்துக்கொள்ளவேண்டிய காலமும் வருகின்றன. சந்தோஷத்தில் சொல்லும் சொற்கள் என்றாலும், பிழைக்கொண்ட பொருள்தரும் சொற்கள் நெஞ்சத்தில் அறைகின்றன.  காலமே! நீ ஏன் சில பெரியோர்களின் நாவில் சொற்களாகிவிடுகின்றாய். நீ அழிந்துப்போவாமல் நிலைபெறுவதற்காகவா?

சிலநேர சொற்கள் அசையும் ஒலியல்ல, அசையா காலக்கல்.  “யாகாவாராயினும் நா காக்க” என்ற வள்ளுவன் வாழ்க! 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.