Tuesday, December 30, 2014

பிரயாகை-60-அப்பா
அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

புராணயுகம் முதல் இதோ இந்த புதுயுகம் வரை எத்தனை எத்தனையோ அப்பாக்கள். எத்தனை எத்தனை உருவங்களில் பிறந்து வாழ்ந்து இறந்து பிறந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அப்பாவின் அகம் மாறி இருக்கிறதா? மாறுமா?

ஐம்பத்தாறு தேசத்தின் அதிபதியாக இருந்து வாய்மைக்காக மகனோடு மனைவியை விற்று அந்த மகனை எரிக்கும் சுடுகாட்டில் அந்த தந்தையே பிணம்சுடுபவனாக நிற்கும் ஒரு காட்சி. அந்த தந்தையை நினைக்கும்போதெல்லாம் உருகி உருகி ஓடி கங்கையில் கலந்து அவன்பெயரில் நிற்கும் ஹரிசந்தஹாட் படித்துறையை தொடுவதன் மூலம் அவன் பாதம் தொடமாட்டேனா என்று ஏங்குவது உண்டு.

நித்தம் ஒரு சிவனடியாருக்காவது அமுது படைத்து அதன் பின் உண்பேன் என்ற அடியவரின் அகம் அறிய எழுந்த சிவனையே தன்முன் குந்தவைக்க பெற்ற பிள்ளையை அறிந்து சமைக்கும் தந்தை ஒரு காட்சி.
வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.-பட்டினத்தார்.  

வைகுந்தம் தருபவனை பிள்ளையாக பெற்றும் அவனுக்கு நாட்டில் ஒரு வீடுகூட கொடுக்க முடியாமல் மனைவிச்சொல்லில் மாண்டுபோன தந்தை ஒரு காட்சி.  

இந்த தந்தைகளின் செயலுக்கும் பின்னால் இருக்கும் தந்தையின் அகம்  படும்பாடு வார்த்தையில் வடிக்கும் வண்ணம் இருப்பது இல்லை. புராணங்களும் கதைகளிலும்தான் இந்த தந்தைகள் உள்ளனரா? என்றால் இல்லை என்று ஒவ்வொரு தந்தையும் சொல்வார்கள். இன்றும் தந்தைகள் உள்ளம் அதேதான். தந்தைகள் நினைவில் வாழும் புராணங்கள் ஆகும்போதுதான் அதை அறிய முடிகின்றது.

நண்பனின் தந்தை பெயர் புருஷோத்தமன். வெயிட்லிப்டிங்க் சாம்பியன். குட்டி ஜமின்தார்போல் வாழ்ந்தவர்.  நண்பனின் உடன் பிறந்தவர்கள் இரட்டை இலக்கம் உடையவர்கள். கடைசித்தம்பியின் பெயர் அலெக்ஸாண்டர். எனது தந்தை அந்த பெயர் முரணை என்னிடம் அவிழ்த்தார்கள். அவரை வெல்லும் யாரும் இருக்கக்கூடாது என்று எண்ணத்தில், மகனிடம் தோற்றவன் என்ற நினைவுத்தோன்ற அந்தபெயரை கடைசி மகனுக்கு வைத்துள்ளதாய் அப்பாவிடம் சொல்லி உள்ளார். மாவீரன் அலெக்ஸாண்டரிடம் தோற்றவன் போரஸ் என்னும் புருஷோத்தமன். ஒரு வரலாறு ஒரு குடும்பத்தில் அப்பாவும் மகனுமாக அவர்களின் பெயருக்கு இடையில் வாழந்துக்கொண்டு இருப்பதை அப்பா காட்டினார்கள். அது அப்பாவுடன் சிரித்து பறந்த கணத்தில் ஒன்று. 

மகனிடம் தோற்றுப்போகவேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்? ஏன் குழந்தையை தனக்கு எதிராக நிறுத்தினார்? அதுதான் அவருக்கு கடைசி மகன் என்று யார் சொன்னது? நண்பனும் நண்பனின் தந்தையும் நினைவுக்கு வரும்போது இந்த கேள்வியும் வருகின்றது.  பலம் இழந்த தருணம் கண்டுகொண்டாரா? தோல்வியின் சுவையை அஞ்சினாரா? 

தோற்காத அப்பாவிற்கும் எங்கோ தோற்றுவிடுவோம் என்ற பயம் வருகின்றது அல்லது அப்பாவானபிறகு தோல்வியைப்பற்றி ஒரு பயம் வருகிறது. மகன் வெல்லவேண்டுமே என்ற ஆசையே பயமாக மாறுகின்றது. தான் தோற்காதவன் என்பதை விட தனது மகன் வென்றவன் என்பதில் இருக்கும் சுகம்தான் பெரிது அதுதான் அந்த புருஷோத்தமன் அலெக்ஸாண்டர் பெயர் நினைவு படுத்துவது. 

இடும்பவனத்தில் எதையும் பகடியின் மூலம்தாண்டிப்போகும் பீமனின் நஞ்சு நெஞ்சை அசைத்துக்கொண்டு அசையவிடாமல் அமைதி நெஞ்சாக்கியது எது? எதையும் கதாயுதத்தின் மூலம் பொடியாக்கி, சீறும் நாகமாக எழும் பீமன் கைகளை அசையவிடாமல் செய்தது எது?. முது இடும்பன் தன் மகனைப்பற்றி பேசும் வார்த்தையை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த  பீமன் அங்கு இல்லை அங்கு இருந்தது பீமன் என்னும் பெயரில் ஒரு அப்பா. அப்பா மட்டும்.

ஒரு ஆண் தந்தையானபின்பு அவன் ஒரு பெருவானம். அந்த வானம்தான் குழந்தைகள் பறக்க துடிக்கும் வெளி. அவர்கள் தொட நினைக்கும் எல்லை. ஆனால், தந்தை மகனின் காலுக்கு கீழே பூகம்பத்திலும் அசையாத மண், மண் மட்டும். சொந்த காலில் பிள்ளைகள் நடக்கவேண்டும் என்று அப்பாக்கள் புலம்பிக்கொண்டே இருந்தாலும் தன் காலை இழுத்துக்கொண்டு பிள்ளையை மண்ணில் இறக்கிவிடும் தந்தைகள் உண்டா மண்ணில்?  மகன் ஒரு நாள் வானம் தொடும்போதும். மகன்கள் இன்னும் பறக்கவே இல்லை என்றபோதும் அப்பாவின் அகம் அறியமுடியுமா? மகனுக்கு அப்பா ஒரு பிம்பம் மட்டும்தான். அப்பாவை மகன் அறியும்போது அப்பா அகம் மட்டும்தான் உடம்புகூட இல்லை.  இன்று பீமன் அப்பாக்களின் அக அடையாளமாக நிற்கின்றான் ஜெ.

//என் செல்லமேஎன் அரசனேஎன் பேரழகனே” என்று சொல்லி பீமன்அவனை முத்தமிட்டான். ”பறக்க மாட்டாயா நீஎங்கே பற” என்றுஅவனை தூக்கி வீசி பிடித்தான்//

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்ற பழமொழியையும்,
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்-என்ற திருக்குறளையும் வாழ்ந்து காட்டிய பீமனின் அகத்தில் அப்பாவைப்பார்க்கின்றேன். பிள்ளை நிலைக்கவேண்டும் என்று என்னும் அம்மாவின் கண்ணீரை மண்ணறிகிறது. பிள்ளை பறக்கவேண்டும்  என்று என்னும் அப்பாவின் கண்ணீரை வானம் அறிகிறது. அப்பாவின் பாதம் போற்றி.

பீமன் அகம் ஆயிரம் பாடுகள் படுகின்றது என்றாலும், இடும்பியின் ஒற்றை பதிலில் அவள் அன்னையாக வென்று நிற்கின்றாள். தான் அம்மாவாக இருப்பதாலேயே வென்று விடுகிறாள். இடும்பி “நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், அவன் இந்தக்காட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது. அவனுடைய பெருந்தோற்றமே அவனை அங்கெல்லாம் அயலவனாக்கிவிடும். அரக்கன் என்ற சொல் அச்சத்துடன் மட்டுமே சொல்லப்படவேண்டும். ஒருபோதும் ஏளனத்துடன் சொல்லப்படலாகாது” என்றாள். அப்பாக்கள் மகனிடம் மட்டும் இல்லை மனைவியிடமும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள் அப்பாவாக இருப்பதற்காக. 

அப்பா என்றதும் முதலில் நினைவில் வந்துபோகும் திருதராஷ்டிரன் நினைவில் வந்துபோகின்றான் //இருகைகளையும் ஓங்கி அறைந்து அவன் மட்டும் வைசியமகன் இல்லை என்றால் யுயுத்சுவை அரசனாக்கியிருப்பேன். பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த நாட்டை ஒருநாள் அவன்தான் ஆளப்போகிறான் என்று கூவியபடி தேரில் ஏறிக்கொண்டார்//-பிரயாகை-58. தன்னை மறந்து எத்தனை உயரம் சென்றுவிட்டான் இந்த திருதராஷ்டிரன். அப்பாவாக இருக்க அவன் அத்தனை உயரத்தில் இருந்து விழும் கொடுமையை நினைக்கையில் திருதராஷ்டிரன் மேல் கருணைவந்தது. விதுரர் இந்த கதையை கேட்டது அப்பாவாக தான் தனது மனைவியிடத்தில் தோற்றபிறகு என்பதை நினைக்கையில் சிரிக்கதோன்றிது.  ஆனால் சிரிக்கக்கூடாது. அம்மாக்கள் எல்லோரும் ஒரே மாதரி அம்மாவாக மட்டும் இருக்கையில் அப்பாக்கள் மட்டும் எப்படி   ஒரே மாதரி  அப்பாவாக இல்லாமல் இருக்கமுடியும்.   

இடும்பர் குலத்தில் எல்லோரும் இடும்பராகவும், இடும்பியாவும் இருக்க முதன் முதலில் ஒரு புதுப்பெயர் “பானை மண்டையன் என்னும் கடோத்கஜன்“  மாற்றம் ஒன்றுதான் மாறாதது. 


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.