Thursday, December 25, 2014

அஸ்தமனம்


இடும்பி அழகிய சூரியன்” என்றாள். அந்திச்செம்மையில் அவள் முகம் அனல்பட்ட இரும்புப்பாவை போல ஒளிர்ந்தது. அப்பால் மரங்களின் மேல் குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து வந்தன. கைகளை மார்பின் மேல் கட்டியபடி அமர்ந்து சூரியன் அணைவதை அவை நோக்கின. அவற்றின் தலையிலும் கன்னங்களிலும் மெல்லிய மயிர்கள் ஒளியில் ஊறி சிலிர்த்து நின்றன.செம்மை படர்ந்த மேகங்கள் சிதறிப்பரந்த நீலவானில் பறவைக்கூட்டங்கள் சுழன்று கீழிறங்கிக் கொண்டிருந்தன. காடுகளுக்குள் அவை மூழ்க உள்ளே அவற்றின் குரல்கள் இணைந்து இரைச்சலாக ஒலித்தன.

செங்கனல் வட்டமாக ஒளிவிட்ட சூரியன் ஒரு பெரிய மேகக்குவையில் இருந்து நீர்த்துளி ஊறிச் சொட்டி முழுமைகொள்வதுபோல திரண்டு வந்து நின்றபோது இலைப்பரப்புகளெல்லாம் பளபளக்கத் தொடங்கின. பீமன்பெருமூச்சுடன் பார்வையை விலக்கி அப்பால் சிவந்து எரியத் தொடங்கிய மேகத்திரள் ஒன்றை நோக்கினான்.
அந்தியின் செம்மை கனத்து வந்தது. மேகங்கள் எரிந்து கனலாகி கருகி அணையத் தொடங்கின. தொடுவானின் வளைகோட்டில் ஒரு சிறிய அகல்சுடர் போல சூரியன் ஒளி அலையடிக்க நின்றிருந்தான். செந்நிறமானதிரவத்தில் மிதந்து நிற்பது போல. மெல்ல கரைந்தழிவதுபோல. செந்நிறவட்டத்தின் நடுவே பச்சைநிறம் தோன்றித்தோன்றி மறைந்தது. ஏதோ சொல்ல எஞ்சி தவிப்பது போலிருந்தான் சூரியன். பின்னர் பெருமூச்சுடன் மூழ்கிச்சென்றான். மேல்விளிம்பு கூரிய ஒளியுடன் எஞ்சியிருந்தது.

சூரியனில் இருந்து வருவதுபோல பறவைகள்வந்துகொண்டே இருந்தன. மேலே பறக்கும் வெண்ணிறமான நாரைகள் சுழற்றி வீசப்பட்டமுல்லைச்சரம் போல வந்தன. அம்புகள் போல அலகு நீட்டி வந்த கொக்குகள். காற்றில் அலைக்கழியும் சருகுகள் போன்ற காகங்கள். கீழிருந்து அம்புகளால் அடிக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுபவை போல காற்றிலேயே துள்ளித்துள்ளி தாவிக்கொண்டிருந்தன பனந்தத்தைகள். காட்டுக்குள் பறவைகளின் ஒலி உரக்கக் கேட்டது. இலைத்தழைப்புக்குள் காடு முழுமையாகவே இருண்டு விட்டது. மேலே தெரிந்த இலைவிரிவில் மட்டும் ஒளி பரவியிருந்தது. கூரிய அம்புமுனைகள் போலஇலைநுனிகள் ஒளித்துளிகளை ஏந்தியிருந்தன.

இலைக்குவைகளுக்குள் இருந்து கரிய வௌவால்கள் காட்டுத்தீயில் எழுந்து பறக்கும் சருகுக்கரித் திவலைகள் போல எழுந்து வானை நிறைத்துச் சுழன்று பறந்தன. சூரியவட்டம் முழுமையாகவே மறைந்தது. மிகச்சரியாக சூரியன் மறையும் கணத்தில் ஏதோ ஒரு பறவை ழாக்!என்று ஒலியெழுப்பியது. மேலுமிரு பறவைகள் குரலெழுப்பி எழுந்து காற்றில் சுழன்று சுழன்று செங்குத்தாக காட்டுக்குள் இறங்கின.

மேகங்கள் துயரம்கொண்டவை போல ஒளியிழந்து இருளத் தொடங்கின. அவற்றின் எடை கூடிக்கூடி வருவதுபோல் தோன்றியது. அனைத்துப்பறவைகளும் இலைகளுக்குள் சென்றபின்னரும் ஓரிரு பறவைகள் எழுந்து சுழன்று இறங்கிக்கொண்டிருந்தன. பீமன் செல்வோம்” என்றான். கடோத்கஜன் பெருமூச்சுவிட்டான். மெல்லிய ஒலி கேட்டு திரும்பி நோக்கிய பீமன் இடும்பி அழுவதைக் கண்டான். ஏன் என்று கேட்காமல் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான்” [பிரயாகை 63]


அந்தி சாயும் பொழுதை அனுபவிப்பது பெரும் துயர் தான், எந்த இன்னல்களும் நிலையில் கூட இல்லாத போது கதிர் சாய்ந்து சென்று மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மனதைத் துயரம்  ஆட்கொள்கிறது.

சற்று முன்தானே உடல் களைத்துப் போகும் வரை விளையாடினார்கள். ஏன் நிறுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது? ஏன் அத்தனை குரங்குகளும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தன? ஏன் ஒரு சொல் கூடப் பேச முடியாது போகிறது? அந்த வெளி முழுவதும் துயரம் ஆட்கொண்டது போல, அவர்கள் முழுமையாகத் தம்மைக் கொடுத்து அதில் தம்மை இழந்து விடுவதுதான் எதற்காக?

அந்தத் துயரம் அறியாதவர்கள் இருப்பார்களா?  உங்கள் இந்த அந்திப் பொழுது என் துயர் மிகுந்த அந்திப் பொழுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது.

அப்பா இலங்கையின் வெவ்வேறு நகர்களில் வேலை பார்த்தார். அம்மா வாழ்வின் பெரும்பகுதியை தனியாகத்தான் வாழ வேண்டியிருந்தது. பதினைந்து நிமிட நடையில் இருக்கும் வெள்ளவத்தைக் கடற்கரைக்கு  அம்மா என்னையும் தம்பி, தங்கையையும் அழைத்துச் செல்வார். அந்தி சாயும் வரை அலைகளில் நனைந்து நனைந்து விளையாடுவோம். சூரியன் செந்நிறமாக விளையாட்டு நின்று விடும். பெரிய பாறைகளில் அமர்ந்து கதிர் சாய்வதைப் பார்ப்போம். ஒரு நாடகம் பார்ப்பது போல. ஒரு சிறு துளியாகக் கடலில் சூரியன் கலந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்போம். சூரியன் கடலில் ஆழ்ந்த பின் நீர்ப்பரப்பில் கொஞ்சம் ஒளி மீதம் இருக்கும்.  பேசத் தோன்றுவதே இல்லை. பேச முடிவதே இல்லை. இங்கே இத்தனை பெரிய ஒளிப்பிழம்பு ஒன்று இருந்ததா என்று நினைக்க வைக்கும் இருள் கடலைச் சூழ வீடு திரும்புவோம். அம்மாவின் மனதில் என்னவொரு தனிமை இருந்திருக்கும்?

இதில் விசித்திரம் என்னவென்றால், அப்பா வீட்டில் இருக்கும் நாட்களில் அதைக் கொண்டாட நாங்கள் கடற்கரைக்குப் போனதே இல்லை. அம்மாவுடன் நாங்கள் கடல் பார்த்தது அவருக்குத் தெரிந்திருக்குமா என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு விடுமுறைக்கு அம்மம்மா வீட்டுக்குச் சென்றிருந்த போது அப்பாவுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. காலை முதல் கைமருந்துகள் முயற்சி செய்து எதுவும் பலிக்காமல் மாலையில் யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு வாடகை வண்டியில் ஏற்றிக் கொண்டு  சென்றார்கள். எனக்குத் துணையாகத் தாத்தாவை மட்டும் விட்டு மற்றவர்கள் போய் விட்டார்கள். முன் முற்றத்தில் நின்று வண்டி ஒழுங்கையில் சென்று மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பா திரும்பி வருவாரா என்று எதுவுமே தெரியவில்லை. முழங்கால்களைக் கட்டிக் கொண்டு முன் வளைந்து மணலில் அமர்ந்திருந்த தாத்தாவும் நானும் சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டு பேசாதிருந்தோம். தென்னோலைகள் நடுவே சிவந்த வானம். காகங்கள் சத்தமிட்டுக் கூட்டம் கூட்டமாக கூடு திரும்பிக் கொண்டிருந்தன. சூரியன் மறைந்து விட இறுதியாக ஓரிரு காகங்கள் சத்தமின்றிப் பறந்து கடக்கும். அதே “ழாக்” ஏதோ ஒரு தனிப் பறவையிடம் இருந்து. அப்பா நலமாகித் திரும்பி வந்தார். ஆனால் அந்த மாலைப் பொழுதை மறக்கவே முடிவதில்லை.

செந்நிற வட்டத்தின் நடுவே அந்தப் பச்சையைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன். கண்களை விலக்கவே முடிவதில்லை.

நீண்ட இரவுகளும் குறுகிய பகல்களுமான இந்த குளிர்காலத்தில் நாலு மணிக்கே இருள் கவிகிறது. மின்விளக்குகளை ஏற்றி திரைச்சீலைகளை இழுத்து மூடும்போது தற்செயலாகச் செவ்வானம் கண்ணில் பட, ஒரு பெரும் வெறுமை ஏற்படுகிறது. வலுக்கட்டாயமாக என்னை மீட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒளியற்ற மேகங்கள் எடை கூடியவையாய்த் தான் தோன்றுகின்றன. ஒளி கொண்டபோது மிதப்பவை, ஒளி இழந்து அழுத்துகின்றன.

சுயம்வரத்துக்கு மைந்தர்களை அழைத்துச் செல்லக் குந்தி முடிவு செய்கிறபோது பீமன் இடும்பியைப் பிரிகிறான். உண்மையில் இந்த மாலைப் பொழுதில் அவர்கள் பிரிந்து விடப் போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எப்போதும் பிரிவுகளை இரண்டாக அனுபவிக்கிறோம். முதல் முறை பிரியப் போகிறோம் என்று உணர்கிற போது, மறுமுறை சம்பிரதாயமாக உறவுகளின் முன்பு.

அழத்தான் தோன்றும், மாலை நேரங்கள் பிரிவுகளையே நினைவு படுத்துகிறது, கூடியிருக்கிறபோது கூட.

பீமனும் இடும்பியும் அதைத்தான் நினைக்கிறார்கள். அவன் அதை உணர்ந்துதான் அவளை அணைத்துக் கொள்கிறான். அந்தப் பிரிவு இருவருக்கும் வேறு வேறு விதமானது. ஒரே நேரம் நிகழ்கிறதே தவிர அது ஒரே விதமான துயர் அல்ல. ஆயினும் அதற்குள் ஆழ்ந்து போவதற்கும் அனுபவிப்பதற்கும் வெளியே வருவதற்கும் அந்தத் துணை தேவைப் படுகிறது. பிரியும் துணை கொண்டே பிரிவைக் கடக்க முயல்கிறோம் என்பதே பெரிய வரம்தான்.

 ரவிச்சந்திரிகா