Sunday, December 28, 2014

கிரிஷ்ண சமர்



ஜெ,

விதுரர் இதுவரை கிருஷ்ணனை அறிய முடியாமல் இருந்தது அவரது ஆணவத்தால்தான். அந்த ஆணவம் நன்மை செய்து அதன் மூலம் வந்த ஆணவம். நான் நன்மை செய்தவன் என்கிற நினைப்பினால் வந்த ஆணவம் அது.  அந்த நன்மை செய்த என்னை எல்லாரும் மதிப்பார்கள் என்று எண்ணுவதே ஆணவத்தால் வருகிற வீழ்ச்சி. ஆகவேதான் கிருஷ்ணனை அவர் அறியமுடியவில்லை

இந்த ஆணவம் தவிர அவருக்கு வேறெந்த சுயநலமும் இல்லை. காமகுரோதமோகம் இல்லை. ஆகவே அதை மட்டுமே கிருஷ்ணன் குறி வைத்து உடைத்துவிட்டுச் செல்கிறான். அதுதான் முதல் அடி. அது அவருக்கு பிராணவேதனையைக் கொடுத்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலே உழன்று மேலே வந்துவிடுகிறார். அதை வென்றுவிடுகிறார். கிருஷ்ணனை கண்டுகொள்கிறார்

சேவை என்று செய்யக்கூடிய எவருக்கும் அடையவேண்டிய ஞானம் இது. சேவை செய்கிறேன் என்ற கர்வம் இருந்தாலே அவமதிப்புதான் வரும். மக்கள் என்பவர்கள் விதியின் விராடவடிவம். அவர்களுக்கு நிஷ்காம கர்மமாக பயன்கருதாது கடன் செய்பவனே நிறைவாக வாழமுடியும். இன்னதைச் செய்தேன் என்று நினைத்தாலே போச்சு. அந்த இடம் அருமையாகச் சொல்லப்பட்டிருந்தது

விதுரரின் மனசிலே நிகழ்ந்துகொண்டிருந்த கிருஷ்ணனுக்கும் அவனது அகங்காரத்துக்குமான போர் முடிந்துவிட்டது. ரத்தம் பெருகினாலும் ஒளி தோன்றிவிட்டது

சாரதி