'தன் வாலை தானே உண்ணும் நாகம்'
இதை பற்றி கொஞ்சம் யோசித்து பார்த்தேன். இது எதை குறிக்கிறது. தன்னை தானே உண்டு வளரும் அன்னம் என்று புரிந்து கொள்ளலாம். இல்லை தானே தனக்கு உணவாகி வளருவதால் எந்நாளும் அழியாதது. காலத்தில் அழியாதது தான் காலத்தை வெல்வதா? காலத்தை வென்றது காலத்தின் வெளியே - அகாலத்தில் வாழ்கிறதா? சிந்தனையை தூண்டுகிறது.
பிறகு அதை பற்றி தேடி படித்து பார்த்தேன். இந்த ஆழ்படிமம் கிட்டத்தட்ட எல்லா மரபுகளிலும் இருக்கிறது. மானுடர்களுக்கு பொதுவான ஒரு ஆழ்படிமம் போலும். பிளாட்டோ முதல் யுங் வரை விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு விஞ்ஞானிக்கு கணவில் வந்து அவர் கண்டுபிடிப்பிற்கு உதவியிருக்கிறது.
கால சுழற்சி, ஒருமை - முழுமை என்று பல கருத்துகளை விளக்குவதற்கு இது பயன்படுத்தப்பட்டிருக்கறது. இந்து மரபில் இது குண்டலினியை குறிக்கிறது என்று கூறப்படுகிறது. ஏன் இத்தனை மரபுகளும் இந்த பொதுவான படிமத்தை கையாள்கிறது. ஏன் சக்கரத்தை வைத்து இதே கருத்துகளை விளக்க முடியாதா?
ஆதி மனிதனுக்கு பாம்பிடம் ஒரு பிரமிப்பும் பயமும் இருந்திருக்க வேண்டும். கை கால் எதுவும் இல்லாத ஒரு ஜந்து. ஆனால் ஆளை கொல்லும் திறனுடையது. வாய் ஒரு முனை வால் ஒரு முனை நீண்ட உடம்பு வேறு எந்த பாகமும் இல்லை. இருந்தும் வேகமாக நகர கூடியது. விரும்பிய வடிவில் வளைய கூடியது. பாம்பு தானே தன் வாலை எடுத்து உன்ன கூடிய இயக்கம் கொண்டது. சக்கரம் அப்படி அல்ல இன்னொருவரால் உருவாக்கப்பட்ட உயிரற்ற பொருள். இதனாலயே இந்த நாகத்தை ஒரு குறியீடாக வைத்திருக்கலாம்.
இந்த குறியீட்டை மேலும் எப்படி விளக்கி கொள்ளலாம்?
ஹரீஷ்
http://en.wikipedia.org/wiki/
வெண்முரசு விவாதக்குழுமத்தில் இருந்து