Tuesday, December 23, 2014

பிரயாகை-55-இரண்டு தந்தைகள்அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அஸ்தினபுரம் என்னும் குழந்தைக்கு இப்போது இரண்டு தந்தைகள். ஒருவர் பீஷ்மர் மற்றவர் திருதராஷ்டிரன்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் நீங்கள் படைக்கும் முழுமையால் கவரப்பட்டாளும் திருதராஷ்டிரன் இடம் பொங்கிபொங்கி வரும் தந்தை உணர்வால் பெரிதும் ஈர்க்கப்படுகின்றேன்.  தன்நிகர் இல்லாத தனிப்பெரும் தந்தை உணர்வால் நிரம்பியவன் திருதராஷ்டிரன்.  பீஷ்மரின் பார்வையில் கிடைக்கும் திருதராஷ்டிரன் //(பீஷ்மர்)தாடியைத் தடவியபடி “இக்குடியின்மூத்தார் அனைவரும் திரண்டு உருவெடுத்தவன் அவன்.ஆலயக்கருவறையில் அமர்ந்திருக்கும் பெருங்கற்சிலைஎன்றார்//

இக்குடியின் மூத்தார் அனைவரும் திரண்டு உருவெடுத்தவன் திருதராஷ்டிரன் என்று கூறும் பீஷ்மர் எப்படிப்பட்டவர் என்பதை முதற்கனல்-8ல் பார்த்தோம்.
//அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறிமுதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதேஅந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவுஎன்று உணர்ந்தனர்.-முதற்கனல்-8//

குலமூதாதைகள் குழந்தைகள் ஆகி, அந்த குலத்தின் தந்தைகளாக இருக்கும் பொற்தருணம் இது. அஸ்தினபுரியே ஒரு குழந்தையாகி இருதந்தைகளின் நெஞ்சத்தில் தவழ்வதுபோல் உள்ளது. தந்தை என்றால் அவர்கள் அல்லவா தந்தை. காலத்தால் வென்று மறக்க அடிக்கப்படாத தந்தைகள். மலைபோன்ற பலமும், பனிபோன்ற அன்பும். இருவருமே பாண்டவர்களின் இறப்பை எண்ணி..எண்ணி கண்ணீர்விடும் கருணை உள்ளம் கொண்டவர்கள். நினைத்து நினைத்து நெஞ்சம் விம்மி விரிகிறது. அவர்களின் உள்ளத்தில் ஒரு துளியையாவது அள்ளி எனதென்று சொல்லிக்கொள்ளமுடியுமா? எத்தனை பெரிய வான்வெளி.  

பாண்டவர்கள் இறப்பு செய்துக்கேட்டு எட்டுமாதமாக துயிலாமல், சிவமூலிகைப்புகையிலும் மயங்காமல் வலிகொண்டு துடிக்கும் திருதராஷ்டிரன் பலமும் அவ்வளவு பலம்கொண்டவனை குழந்தையை தூக்கி செல்வதுபோல தூக்கி சென்று மஞ்சத்தில் கிடத்தும் பீஷ்மனின் பலமும் காட்டி அவர்களின் இருவரின் கண்ணீரை காட்டும்போது மலையும் மலையின் நீர்கசிவும் கண்டு சிலிர்க்கின்றேன். திருதராஷ்டிரன் ஊறி ஊறி நிரம்பும் கருணை என்றால், பீஷ்மர் துளியாகி பெய்து மூழ்கடித்துவிடும் வானம்.

பீஷ்மரின் உயரத்தை காட்ட முதற்கனலில் பயன்படுத்திய வரிகளையும், பிராயகையில் பயன்படுத்திய வரிகளையும் பார்த்து மகிழ்கின்றேன். காட்சிகள் மாறுவதுன் வழியாகவே பீஷ்மரின் உயரம் வந்துவிடுகின்றது.
//அவரது உயரத்துக்கு அரண்மனையின் அத்தனைநிலைவாயில்களும் சிறியவை என்பதனால் ஒவ்வொருவாயிலுக்கும் அவர் குனிந்துகொள்ள வேண்டியிருந்தது-முதற்கனல்-8//

//பீஷ்மர் நடந்தபோது அவரது தலை அரண்மனையின்உத்தரங்களை தொட்டுத்தொட்டுச்செல்வதுபோல விதுரருக்குத்தோன்றியது//-பிரயாகை-55

இன்று காணும் பீஷ்மர் இன்னும் சன்று வளர்ந்து இன்னும் நிமிர்வுக்கொண்டு நிற்பதை காண்கின்றேன். பெரும் துன்பதில் எழுந்துவரும் நிமிர்வா இது?. சகுனி இந்த ஆளுமையைப்பார்த்து என்ன நினைத்து இருப்பான்? “பீஷ்மன்” என்னும் ஒரு பெயரே அஸ்தினபுரம் என்னும் நாட்டை ஆளும் வல்லமை உடையது என்பது இதுதானா? வழக்கம்போல படிமை மிதிக்காமல் இரத்தில் ஏறினார் என்றபோது அவர் எனது பாட்டன் என்று நினைக்கும்போது எத்தனை பெருமையாக இருக்கிறது. 

முதற்கனல்-8ல் பீஷ்மர் சத்தியவதியை சந்திக்கச்செல்கின்றார் அதனால் அவர் தலை குனிந்து குனிந்து சென்றார் என்ற காட்சியும், இன்று திருதராஷ்டிரனை காணச்செல்கின்றார் அதனால் அவர்தலை உத்திரங்களை தொட்டுச்தொட்டுச்செல்கின்றது என்ற காட்சியும் எத்தனை பொருளும் உயர்வும் உடையது. ஒரு காட்சியை உவமையாக்கும்போது அதற்கு பின்னால் உள்ள மனநிலையும் வந்து அந்த காட்சிக்குள் அமைந்து கதையை காவியமாக்குகின்றது ஜெ. முதற்கனல்-8ல் உள்ள இந்த காட்சியும் பிரயாகை-55ல் உள்ள இந்த காட்சியும் திட்டமிட்டு ஒப்பிட்டு எழுதப்பட்டது இல்லை ஆனால் அது எப்படி அந்த அளவுக்கு பொருத்தமாக அமைந்தது வியக்காமல் எப்படி இருக்க? நீங்கள்தான் இந்த கதையை எழுதுகின்றீர்களா?

திருதராஷ்டிரன் அனுபவிக்கும் துக்கத்தை பார்த்தபோது இந்த விதுரர் கொடுமைக்காரர் “உண்மை“யை இப்போதாவது சொல்லிவிட மாட்டாரா என்று நினைத்தேன். அவர் சொல்லவில்லை என்று அவர்மீது சற்று வெறுப்பாகவும் இருந்தது. அதை திருதராஷ்டிரனிடம் சொல்லக்கூடாது என்று பீஷ்மர் சொல்லும் இடம்தான் அற்புதம்.

//“இன்று அரசரின் கடுந்துயரைக் கண்டதும் சொல்லிவிடலாம்என்று என் அகம் எழுந்தது…” என்று விதுரர் சொன்னதுமேசொல்லாதேஅவன் அறிந்தால் துரியோதனனைகொன்றுவிடுவான்ஐயமே இல்லைநான் அவனை அறிவேன்என்றார் பீஷ்மர்//

உணர்ச்சியில் சிக்கித்தவிக்கும்போது மேலெழுந்துவரும் உணர்ச்சிகளுக்கு சாதகமாக இருக்க நினைக்கும் மனிதன் தன்னை முழு அறிவாளி என்றுதான் நினைக்கிறான். ஆனால் உண்மையான அறிவு என்பது உணர்ச்சிகளின் பின்னால் உள்ள விளைவை அறியும் தன்மையது என்பதை காட்டிப்போகும் பீஷ்மர், ஏட்டுக்கல்விக்கும் அனுபவ அறிவுக்கும் உள்ள நுட்பத்தை விளக்குகின்றார். உணர்ச்சிகள் கொந்தளிக்கும் இடத்தில் நின்றுக்கொண்டு விளைவை அறியும் தன்மையை நோக்கச்சொல்லும் ஆளுமையில் பீஷ்மரின் படைப்பு உச்சம்.

அஸ்தினபுரியின் அரசியலில் காந்தாரத்தின் அமைச்சர் தலையிடத்தேவை இல்லை என்று வெளியேற்றும் அந்த உடனடி நடவடிக்கைதான் அரசியலின் வல்லமை. அதே நேரத்தில் கணிகன் யார்? எப்படிப்பட்டவன் என்று ஒரு கணத்தில் விளக்கிவிடும் அந்த ஞானம். அந்த ஞானத்திற்கு அப்பால் உண்மை உறையும் இடம் அறியும் விவேகம். கணிகரைக்கண்டவுடனே அதற்கு மாற்றான தெய்வம் எது என்று தேட ஆரம்பித்த அவரின் இதயத்தைப்போற்றுகின்றேன்.

//அவரை முதலில் பார்த்ததுமே அறிந்துகொண்டேன்அவர் தூயதீமை உறைந்து உருவான ஆளுமை கொண்டவர்பொறாமை,சினம்பேராசைகாமம் என்றெல்லாம் வெளிப்பாடு கொள்ளும்எளிய மானுடத் தீமை அல்ல அதுஅதற்கெல்லாம் அப்பாற்பட்டதெய்வங்களுக்குரிய தீமைதீமை மட்டுமேயான தீமைநோய்,இறப்பு போல இயற்கையின் கட்டமைப்பிலேயே உறைந்திருக்கும்ஆற்றல் அதுஅவரது விழிகளில் வெளிப்படுவது அதுவேஅதைமானுடர் எதிர்கொள்ள முடியாது//

கண்ணனை ஏன் பீஷ்மர் கடவுள் என்கின்றார் என்பதற்கான விதை விழும் நாள். நன்றி ஜெ.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.