Friday, December 19, 2014

பிரயாகை-51-அறம் பிறந்துவிட்டது.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வாழ்வில் தோன்றும் பெரும் சிக்கள்களும் அந்த சிக்கலான கணத்தில் வாழ்க்கையை கடக்கநினைக்கையில் மனிதன் மனதில் எழும்கேள்வி அறத்தை மிதிப்பதா? அறத்தை தூக்கிப்பிடிப்பதா? என்பதுதான். இந்த கேள்விகள் நாளுக்கு நாள் கூடிவருகின்றன பிரயாகையில்.

பிரயாகை அதிக ஈர்ப்பும் களியும் சிந்தனையும் கொண்டு பிணைந்து செல்கின்றது. நாளுக்கு நாள் அது கூடிக்கூடி நெஞ்சை துடிக்கவைக்கிறது. துடிக்கும்போது வலியும் இருக்கிறது ஆனந்தமும் இருக்கிறது.
  
வாரணவத அரண்மனை எரிந்த பின்பு மறுபிறப்பு எடுக்கிறார்கள் குந்தியும் பாண்டவர்களும்.  எந்த மாற்றமும் இல்லாமல், மீண்டும் பிறக்காமல் இருப்பவன் தருமன் மட்டும்தான். பிரயாகை-51ல் தருமனை பேசவிடும் நேரத்தில் உள்ளத்தை உளுக்கி எடுத்துவிட்டீர்கள் ஜெ. அறம் பிறந்துவிட்டது, பிறந்ததும் பேசிவிட்டது.

குந்தியின் கதையைக்கேட்டு கதை என்று தூங்கிப்போகும் நகுல சகாதேவர்கள் சித்திரம் ஒருபுறம் இருக்க, அந்த கதையைக்கேட்டப்பின்பு குறட்டைவிட்டு தூங்கும் தருமன் சித்திரம் முற்றும் வேறு மாதரி இருக்கிறது. அறம் கதை கேட்பதில்லை கதைக்கு அப்பால் உள்ளதை கேட்கிறது. 

எப்போதும் பதட்டமும் தவிப்பும் நிறைந்த தருமன், உள்ளம் உருக்கும் பொறாமையை மையமாகக்கொண்ட சகோதர உறவின் கதையில் தாயின் தவிப்பை உணர்ந்தும் எந்த மாற்றமும் இல்லாமல் எப்படி இவ்வளவு ஆழமாக தூங்குகின்றான் என்று நினைத்துப்பார்த்தேன். அர்ஜுனன் மனதில் உள்ள வெறுமையோ? பீமன் மனதில் உள்ள அறம் என்றால் என்ன? என்ற கேள்வியோ தருமன் மனிதில் எழாமல் போனது எப்படி?

குந்தியின் கதையைக்கேட்கும்போதே கத்ரு வினதையைத்தாண்டி காசியபரின் இருப்பை உணர்ந்துக்கொண்ட தன்மையில் அறத்தில் நிற்கின்றான் தருமன் என்பதை இன்று அவன் பேசும் தருணத்தில் உணரமுடிகின்றது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு-என்கின்றார் வள்ளுவர்.

குந்திப்பேசப்பேச நானும் வாயூற, கண்நனைய, குந்தியையும்,காந்தாரியையும்,கௌரவரையும், கர்ணனையும், பாண்டவர்களையும்தான் நினைத்தேன். ஏன் திருதராஸ்டிரனை நினைக்கவில்லை?. திருதராஸ்டிரன் எந்த தவறும் செய்யவில்லையே. அவனுக்காக ஏன் வருந்தவில்லை என் அகம்?

அறம் சொல்லுக்கு அப்பால் சொல்லமுடியாத இடத்தில் இருக்கிறது. தான் இருக்கிறேன் என்ற அடையாளம்கூட இல்லாமல் இருக்கிறது. இல்லாமல் இருக்கும் அறத்தை அதன் இடத்தை அறிந்தவன் மகத்தானவன். சராசரிகளால் அதை உணரவோ, நினைக்கவோ முடிவதில்லை. 

மனம் கலங்கும் தன்மை உடையது. எதனால்  கலங்குகின்றதோ அதே நிறத்தை அடைந்துவிடும். அந்த நிறத்தோடு பின் உலகம் தெரியும்.

குந்தியின் மனம் கலங்கிவிட்டது. பாவம் ஒரு பக்கம், பழி ஒருபக்கம் என்பதுபோல திருதராஸ்டிரன் வஞ்சமில்லாத வாழ்த்துக்கூட வஞ்சம் என்று நினைத்துவிட்டாள்.

என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி  “இனி இவ்வாழ்வின்ஒவ்வொருகணமும் நான் எண்ணி வெறுக்கும் மனிதர் இவர் என்று மனக்கலக்கத்தின் உச்சிக்கு சென்றுவிட்டாள். அவள் நிற்கும் நிற்கதியில் அவள் திருதராஸ்டிரனை கொல்வதுகூட சரியாகத்தான் இருக்கும், பீமனை அனுப்பி யாருக்கும் தெரியாமல் கொல்ல சொன்னாலும் சொல்வாள். பீமனும் செய்வான் ஆனால் அது உண்மையா? குந்தியின் மனக்கலக்கம் தவறென்றும், திருதராஸ்டிரன் நல்லவன் என்றும் யார் சொல்லமுடியும். திருதராஸ்டிரனே சொன்னால்கூட நம்பமுடியாது. இந்த சிக்கலில் தருமன் அறம்பேசுவது என்பதுதான் அற்புதம்.

 //தந்தையையும் அரசரையும் குழப்பிக்கொண்டுவிட்டேன்//அற்புதமான சொல்லாட்சி ஜெ. அறத்தை இந்த நுண்ணிய சிக்கலில்தான் ஒவ்வொரு மனிதனும் கைவிடுகின்றான். அந்த சிக்கலின் நுண்ணுமை என்ன? அந்த நுட்பத்தில் இருப்பவன் அறத்தை துள்ளியமாக கணித்துவிடுகின்றான். அந்த நுண்ணிய இடத்தை தொடும் தருமன்தான் அறவான். மற்றவர்கள் எல்லாம் அரவான். இந்த மூன்று சொற்களைக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன்னை தன்னுடைய உலகத்தை ஆராய்ந்துப்பார்க்கலாம். இப்படி ஒரு மெல்லிய சொல்லாட்சியில் அறத்தின் மென்மையையும், கூரையும் செதுக்குவீர்கள் என்று கற்பனைக்கூட செய்யமுடியாது. எவ்வளவு ஆழத்திற்கு செல்கி்ன்றோமோ அவ்வளவு ரத்தினங்கள் என்பர் மகாத்மா. ஆழத்திற்கே செல்வது தெரியாமல் செல்கின்றீர்கள் ஜெ.

// அன்னையேஉங்கள் உணர்வுகளை நான் அறிவேன்” என்றான். “ஆனால் குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லைஎங்களைஅவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள்விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றனஎங்களுக்குஇன்றிருக்கும் தந்தை அவரேஅவரை வணங்காமல் இளையோன்அவளை கைப்பிடித்தல் முறையல்ல.”// 

இந்த சொற்களின் வழியாக அறத்தை பிடிக்கும் தருமன் அரசியல் சூதுக்கு அப்பால் இருக்கும் மானிட தருமத்தை நிருத்திவிடுகின்றான். குந்தி என்ற அரசியின் பிம்பத்தை உடைத்து அதற்குள் இருக்கும் குருகுலத்தின் மருமகள் பாண்டுவின் மனைவி, பாண்டவர்களின் தாய் என்பதை நினைக்கவைத்துவிடுகின்றான். குந்தியின் அகத்தில் இருக்கும் பேரரசி என்ற பெரும் வெள்ளத்தை அறம்கொண்டு கட்டிவிடுகின்றான். இந்த தருமன் முற்றும் புதிதாக பிறந்தவன். ஆனாலும் கட்டுப்பட்ட வெள்ளம் ஓய்ந்துப்போகாமல் கரைகளை உடைக்கவே நினைக்கிறது. கைவிடப்பட்ட அன்னை என்ற புதிய அலைமுகம் கொண்டு.

அறத்தை கைக்கொண்டு எழும் தருமனும். பிள்ளைப்பாசத்தை கைக்கொண்டு முன்னேறும் குந்தியும் முட்டிக்கொள்ளும் தருணத்தில் அறம் வளைந்துவிடுகின்றது. கண்ணீர் சொட்ட வைக்கின்றது.  அறம் அத்தனை மென்மை. அந்த மென்மைதான் பாசத்தை வளைத்து பக்கத்தில் வரவைத்துவிடுகின்றது.

கண்ணீரின் விலை அறிந்தவனே அறம் அறியமுடியும் என்று காட்டும் இடம் நெகிழச்செய்கின்றது. தன்கண்ணீர், பிறர் கண்ணீர் கனம் அறிந்து எளிய மனிதர்கள்மீது கருணைக்கொள்ளாத மனிதனிடம் அறம் வசப்படுவதில்லை என்பதை காட்டும் இடத்தில் உடல் வளர்ச்சி அல்ல உள்ளவளர்ச்சியின் நுட்பத்தை பேசிகின்றீர் ஜெ.

தருமனுக்கும் குந்திக்கும் நடக்கும் உரையாடலில் பார்த்துக்கொண்டே இருக்கும்போதே தருமன் கிடுகிடுவென்று வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துவிடுகின்றான்.  

போருக்கு போவதற்கு முன்னால் தூங்கி எழும் மனிதன்போலவே அறத்திற்கு போகும் மனிதனும்  முன்னால் தூங்கி எழுவான் என்று நினைக்கிறேன். தருமன் குறட்டைவிட்டு தூங்கி நிகழ்ச்சி வேறு ஒரு யோகத்தை காட்டுகின்றது.  அறக்களம்கூட ஒரு யுத்தக்களம்தான். யுத்தகளத்தில் எதிரியை குத்தினால் மட்டும்போதும், அறக்களத்தில் தன்னைத்தான் அதிகமாக குத்திக்கொள்ளவேண்டும்போல் உள்ளது. அதற்கு இன்னும் ஆழமாகத்தான் தூங்கவேண்டி உள்ளது. 

அவன் ஒரு சிறியபாறைமேல் தலைகுனிந்து அமர்ந்து சுள்ளிஒன்றால் தரையில் கோடுகளை இழுத்துக்கொண்டிருந்தான்.-என்ற இடத்தில் ஒரு விண்மீன் எழுந்து வழிசொல்லியது  புதியபாதையில் பயணிப்பவன் பிறந்துவிட்டதை தெரிவிக்க. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.