Saturday, December 20, 2014

பிரயாகை-52-சிரிப்பு வெடிகள்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

பீமனின் உடம்புபோலவே அவன் பகடியும் பெரிதாக இருக்கிறது. யானைவெடி வெடித்ததுபோலவே வெடித்து சிரிக்கவேண்டி உள்ளது. மெல்லிய புன்னகையோடு அவன் பகடியை கடந்துபோக முடியவில்லை.

பீமனின் வெடி சிரிப்புகள் என்று  ஒரு பட்டியலே போடலாம் என்றாலும் பிரயாகை-52ல் இந்த இடத்தை படித்தபோது என்னால் சிரித்தப்படி அமர்ந்து இருக்க முடியவில்லை.
//உண்ணும் நிலையில் உணவு உள்ளதா இளையவனே,இல்லையேல் மூதாதையருக்குப் படைப்பதுபோல எனக்கும்படைத்து மலரிட்டு வணங்கிவிடு…” என்றான் பீமன்//

அர்த்தமுள்ள பகடி செய்ய அறிந்தவன்போல பெரும் ஞானி இருக்கமுடியாது. தன்னை, சூழ்ந்திருப்பவர்களை, சூழ்நிலையை அவன் கலைக்கூடமாக்கிவிடுகின்றான்.  அர்த்தமுள்ள பகடியில் ஞானத்தின் கனிகள் உதிர்ந்துக்கொண்டே இருக்கின்றன. ஞானம் பகடியின் மூலமே முழுமை அடைகின்றது.

மிருகம், மனிதன், முனிவன் என்ற ஒரு சாயலை ஒற்றை உடம்புக்குள் இந்த பகடியின் மூலம் பீமன் கொண்டுவந்து நிருத்திவிடுகின்றான்.

பெரியக்குரங்கு பீமன்தான் இப்படி என்றால் அந்த சின்னப்பயல் சூரணன் வெடிக்கும் வெடிகள் சீனிவெடியாக இருந்தாலும் சத்தத்தில் யானைவெடியை மிஞ்சுகின்றான்.
//உணவுண்பதற்காக அவர்கள் வட்டமாக அமர்ந்துகொள்ளபின்பக்கம் வழியாக பீமனின் மடிமேல் ஏறி மறுபுறம் குதித்து வந்தசூர்ணன் நடுவே நின்று சுற்றி இருப்பவர்களை நோக்கிதிகைத்தபின் “என்ன செய்கிறீர்கள்” என்றான். “உண்ணப்போகிறோம்” என்றான் பீமன் “அதற்கு ஏன் இப்படிஅமர்கிறீர்கள்வானைநோக்கி ஊளையிடப்போகிறீர்கள்என்றல்லவா நினைத்தேன்”//

அறிவாளிகள் உலகத்தில் மூடிசூடா மன்னனாக இருக்கலாம், சாமனியர்களின் உலகில் அவன் செல்லாக்காசு என்பதை சூரணின் பேச்சு எடுத்துக்காட்டியது. கற்றவர்கள் நீதியும், நெறியும், ஒழுக்கமும், பழக்கவழக்கமும் அர்த்தமற்று போகும் ஒரு தருணம் உண்டு என்பதை காட்டிப்போகும் குறிப்புகள் அற்புதம்.

குரங்குகளின் வழியாக உணவுப்பொருள் இன்று மிதமிஞ்சி இருப்பதையும், அதை இளைய சமுகத்தினர் வீணடிப்பதையும் சுட்டிக்காட்டும் இடத்தில் பாரநாட்டின் பஞ்சக்காலத்தையும், இன்றைய நுகர்வோர் கலாச்சாரகாலத்தையும் கண்முன் கொண்டுவந்து திருத்தியது. சரவெடிகள் வெடித்து முடித்தபின் தோன்றும் அமைதியும் வெறுமையும் தோன்றி உள்ளத்தை அழுத்தியது. இத்தனை பகடியும் இந்த இடத்தில் வந்து அமைதி அடைந்து திகைக்கவைத்தது.
முதியவர் துயரத்துடன் தலையை அசைத்து “உணவுபெருகிவிட்டது… ஒழுக்கம் அழியாமலிருந்தால்தான் வியப்புஎன்றார்”.-இந்த சொற்களுக்கு பின்னால் உள்ள நிகழ்கால நிஜம் சுடுகின்றது.

தருமன் தான் யார் என்பதை முழுவதும் கண்டுபிடித்து இன்று வெளிவிட்டு அதில் நிற்கின்றான். அதற்காக தோற்றுப்போகவும் சித்தமாக இருக்கும் அவன் அகம் அற்புதம். அறம் வெல்வதற்காக அறம் கடைப்பிடிப்போன் தோற்கவும் சாகவும் சித்தமாக இருக்கிறான். //அறநூல்கள் சொல்லும் வாழ்க்கையைஅன்றி பிறிதை ஏற்கமாட்டேன்இறுதிக்கணம் வரை//

மனிதர்கள் பிறக்க வயிறுபோதும், மகாத்மாபிறக்க வாழ்க்கை வேண்டி உள்ளது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.