Monday, December 15, 2014

குலங்கள் எதுவரை?



ஜெ

இடும்பர்களின் அத்தியாயம் முடிந்தபோது ஒரு விசயம் தோன்றியது. இது மகாபாரதத்தில் உள்ள விசயம்தான். நீங்கள் சேர்க்கவில்லை. ஆனால் நீங்கள் அதை விரிவாக எழுதும்போதுதான் கவனத்திலேயே வருகுறது. அதாவது எல்லா அரசகுலத்துக்கும் அசுரர்கள் அரக்கர்களுடன் நேரடியான ரத்த உறவு உள்ளது. சொல்லப்போனால் அவர்கள் அங்கிருந்துதான் உருவாகி வந்திருக்கிறார்கள்.

அஸ்தினபுரிக்கே கூட மூதாதையான யயாதி அசுரமன்னனின் மகள் சர்மிஷ்டையை திருமணம் செய்துகொண்டு மக்கலைப் பெறுகிறான். அவனில் இருந்துதான் வாரிசுகள் வந்து அந்த குலம் அமைந்திருக்கிறது இல்லையா? இப்போது இடும்பி என்ற அரக்கியில் திருமணம் செய்துகொள்கிறான் பீமன். ஜராசந்தனும் அதேமாதிரித்தான். இது நடந்துகொண்டே இருக்கிறது. மகாபாரதம் முழுக்க இந்த குலக்கலப்பு சர்வசாதாரணமாக நடந்துகொண்டே இருக்கிறது.

குலங்கள் கலப்பது அன்றைக்கு அதிகாரத்துக்கான வழியாக கருதப்பட்டது எனறு நினைக்கிறேன். அதிக குலங்கலைக் கலந்து பெரிய படையை அமைத்துக்கொள்பவன் ஜெயிக்கிறான்

ஆனால் கீழ்க்குலங்களில் பெண்ணெடுக்கிறார்கள். அதேபோல கீழ்க்குலங்களுக்கு பெண் கொடுக்கிறார்களா? கீழ்க்குலங்கள் பின்னர் ஷத்ரியர்களாக ஆகியிருக்கிறார்களா?

செம்மணி அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்

அதுவும் நிகழ்ந்துகொண்டே உள்ளது. மகாபாரதம் ஒவ்வொரு நாட்டைச் சொல்லும்போதும் அவர்கள் தொடக்கத்தில் எந்த குடி என்று சொல்கிறார். விராடன் மச்ச [மீனவ] குலத்தில் இருந்து வந்த அரசன். சேதிநாடு யாதவர்களில் இருந்து உருவானது, இப்படி. கிருஷ்ணன் மகாபாரத காலத்திலேயே பெரிய ஷத்ரிய மன்னராக ஆகிவிட்டார்

அரக்கனாகிய கடோத்கஜனே கூட நாககுலப்பெண் ஒருத்தியை மணந்து அவன் வாரிசுகள் ஷத்ரிய மன்னர்களாக ஆனார்கள் என்று கதை செல்கிறது

ஜெ