அன்புள்ள ஜெ.
சமீபத்தில் சென்றிருந்த கருத்தரங்கு ஒன்றில், 2025 வரை வாழ்ந்து விட்டீர்கள் எனில், நீண்ட காலம் (200 அல்லது 300 வரை கூட) வாழலாம் என்பது அறிவியல் கற்பனையிலிருந்து நகர்ந்து, கைகூடும் அருகே உள்ளது - என ஒரு சாத்தியம் பேசப் பட்டது. ஆதரித்தும் விமர்சித்தும் பல கருத்துக்கள் பரிமாறப் பட்டன. நான் பகிர வந்தது அந்த கருத்துக்களைப் பற்றி அல்ல. எனது எண்ணங்களையும் நாட்களையும் இனிதே ஆக்ரமித்துக் கொண்ட வெண் முரசு சார்ந்து.
காலமும், அதனைக் குறித்து ஒரு சில கட்டுப்பாடுடனும் எழுதி வரும் உங்கள் முயற்சியில் - அதில் ஒரு சில சலுகை பெற்ற மனிதர்கள் - முனிவர்கள் - அரக்கர்கள் - சாதாரண காலங்களை விட கூடுதல் காலம் வாழ்ந்து பயன் தருவது - ஒரு இனிய கற்பனையாகவும், முரணாகவும் - அதே சமயம் காலத்தே சற்றும் முன் சென்ற (பின் சென்ற என்றும் கொள்ளலாம்) அதீத எண்ணங்களாகவும் விரியலாம்.
ஒரு சிலர் போரில் மட்டுமே இறப்பார்கள் என - அல்லது - அவர்கள் உயிரை வலிய பறித்தால் அன்றி உயிர் விட மாட்டார்கள் என - சூழலின் இயல்பை உணர்ந்தவர்கள் - சூழலுக்கு கூடுதல் பளு ஏதுமின்றி வாழ்ந்தால் - நீண்ட ஆயுள் கை கூடலாம்.
நீண்ட ஆயுளுடன் - அல்லது விவரிக்க முடியாத கால வரையுடன் உலாவும் சில பாத்திரங்கள் - அப்படியே வருவது - இப்போது புதிராக இருந்தாலும், பிற்காலத்தில் அந்த முடிச்சு அவிழலாம். (அவிழாமலும் போகலாம்)
அது உங்கள் முயற்சிக்கு அழகூட்டும் என்றே நினைக்கிறேன்
அன்புடன்
முரளி
அன்புள்ள முரளி
இப்போதைக்கு வியாசர் ஒருவரை மட்டுமே நீணாள் வாழும் ‘மாயம்’ கொண்டவராக வைத்திருக்கிறேன். புனைவு எப்படி மாறும் என தெரியவில்லை
ஆனால் இந்த சிரஞ்சீவிகள் என்ற கருத்துரு என்னை எப்போதுமே கவர்ந்திருக்கிறது. விஷ்ணுபுரத்தில் கூட காசியபர் சிரஞ்சீவியாகவே இருக்கிறார்
ஜெ