Monday, December 22, 2014

பிரயாகை-54-இணைப்புஅன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

சூரணன் என்ற இளைய குரங்கு ஏளனம் செய்யும் அளவுக்கு தருமன் உள்ளான். வேடிக்கையானவன். விசித்திரமானவன்.

பலமில்லாத ஒருவன் எப்படி அரசனாக இருக்கமுடியும் என்பதுதான் அதன் கேள்வி? மிருகங்களின் வழக்கம் அதுதான். யார் பலமுடைய விலங்கோ அதுதான் தலைவன். அந்த முறைதான் மனிதர்கள் இடமும் உள்ளது. அது மாறுகின்றது தருமனின் மூலம் அதனால் தருமன் வேடிக்கையானவன், விசித்திரமானவன்.

தருமனின் மூலம் ஒரு மிருகவழக்கம் மாறுகின்றது அதனை ஒரு மிருகத்தால் அதுவும் எளிய சிறுமிருகத்தால், நாளை மன்னனாகநினைக்கும் மிருகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மீண்டும் மீண்டும் அது தருமனை சீண்டிக்கொண்டே இருக்கிறது. தருமன் மிருகமாவானா? 

மிருகம் என்பது இங்கு குரங்கு, குரங்கு முன்னோர்களின் வடிவம். 

தருமனின் அகத்திற்குள் எத்தனை பெரியபோர் நடந்துக்கொண்டு இருக்கும். அறம் பயில்பவன் எளிய உயிர்களின் ஏளனத்தில் தோற்றால்கூட தன்னை வெல்வதில் இருந்து தோற்றுப்போகக்கூடாது அல்லவா?. முன்னோர்கள் அனைவரும் குரங்குபோல தருமனை சீண்டிக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த இடத்தில் காந்தியை நினைத்துக்கொள்கின்றேன். தன்னை “கழுத காது” என்று திட்டிவனிடம் பரிவுடன் நடந்து கொள்ளும் காந்தியின் மனநிலை. ஒரு பழம் வழக்கு முடிந்து புதுவழக்கு வரவேண்டும் என்றால் அறம் கற்பவன் தன்னை பலிக்கொடுக்க தயாராக இருக்கவேண்டும். தன்மீது உள்ள அதே பரிவை அன்பை எதிர்ப்பவனிடமும் காட்டவேண்டும் தருமன் ஓரு காலம்முடிந்து புதிய காலம் தோன்ற பாதை போடுபவன் என்பதை அறியமுடிகின்றது. 

தனது கிராமத்திற்கு பாண்டவர்களை அழைத்து செல்லும் இடும்பி முதன் முதலாக பாதையே இல்லாத பாதையில் நடந்துப்போகின்றாள். இங்கு இரண்டு காலச்சாரங்களுக்கு இடையில் இடும்பி பாதை போடுகின்றாள்.

இடும்பி பழைய காலச்சாரத்தில் இருந்து புதிய கலாச்சாரத்தின் வாயிலாக நிற்கின்றாள். பீமன் நமது மொழிக்கு உரியவன் இல்லை ஆனால் அதை எப்படி கற்றான் என்று இடும்பர்கள் ஐயுறும் இடத்தில் வெளியே உள்ள காடுகளிலும் நமது மொழியை சிறிது மாற்றத்துடன் பேசுகிறார்கள் என்பதின் வழியாக இடும்பி கலாச்சாரம் மாற்றத்திற்கு உரியது என்பைத அறிந்து இருக்கிறாள் என்பதும், சிந்திக்கின்றாள் என்பதும் தெரிகின்றது. கலாச்சாரம் மாறக்கூடியது இல்லை அதைப்பற்றி சிந்திக்கவேண்டி தேவை எதுவும் இல்லை என்ற பிடிவாதம் கொள்ளும் இடும்பன் போன்றவர்கள் கொல்லவோ கொலைப்படவோ விழைகின்றார்கள்.

காலம் காலமாக பெண்கள்தான் புதிய கலாச்சாரத்தின் வாசல்படியாகவும் பாதைகளாகவும் இருக்கிறார்கள் என்பதை இடும்பி கதை காட்டுகின்றது. அதற்காக இடும்பிகள் கொடுக்கும் விலை மிகபெரியது. குறிப்பாக தருமன் படும் அகப்போராட்டத்தைவிட அதிகம் என்றே சொல்லலாம். தருமன் அகத்தில் தாக்கப்படுகின்றான். இடும்பி அகமும் புறமும் தாக்கப்படுகின்றாள். 

இறந்த அண்ணனுக்காக தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டு ஓடுவதும், அண்ணனைக் கொன்ற கணவனை தாங்கிக்கொள்ள ஓடிவந்து தாங்கிக்கொண்டு அழுதப்படி செல்வதும் நெஞ்சை உருக்கி சமகால வாழ்க்கையில் வைக்கின்றது.

எங்கெல்லாம் பழமைகள் கொல்லப்பட்டு புதுமைகள் வரவேற்கப்படுகின்றதோ அங்கெல்லாம் அழுதுக்கொண்டும், சுமந்துக்கொண்டும் நிற்கும் ஜீவன்கள் பெண்கள் என்னும் இடும்பிகள்தான். கலப்பு திருமணம் கண்கூடு.

அன்புள்ள ஜெ. பீமனும் இடும்பியும் மற்போர் புரிந்து பலபரிட்சை செய்ததால் இனி இடும்பன் சண்டை தேவையா? என்று நினைத்தேன். ஒற்றைவரியில் இடும்பனை பீமன் கொன்றான் என்று எழுதி விட்டு சென்றால்போதும் என்று நினைத்தேன். ஆனால் இடும்பன் பீமன் சண்டை ஒரு அற்புதம். மரங்கள்மீதே நடக்கும் ஒரு அற்புத சண்டைக்காட்சி காலத்தை  வெல்லும். மரங்களின் கிளைகள் வழியாகவே சண்டையை நடக்கும்போது இடும்பனின் வல்லமையை அங்குதான் உணர்ந்தேன். இந்த இடும்பன் தரையில் சண்டைப்போட்டு இருந்தால் அவன் உருவும் வலுவும் வாசகனுக்கு இத்தனை தெளிவாக தெரிந்து இருக்குமா?  பலமும் ஆற்றலும் பெருகி பெருகி வந்து சண்டையிடும் இடும்பனை பீமன் வெல்லவே முடியாது என்று நினைத்துவிட்டேன். ஒரு குரங்கு வந்து பீமனுக்கு யுத்த நுணுக்கம் சொல்லிக்கொடுப்பதுபோல் அமைத்த இடத்தில் ஜெவுக்கு கைத்தட்ட தோன்றியது. பீமன் காற்றின் மைந்தன். மாருதியின் இளையவன் என்னும் புரணம் எல்லாம் ஒன்றாக வந்து கதையை பெரும் காடாக்கிவிட்டது ஜெ. பீமனை பலமுறை அறைந்து இரத்தம் கக்க வைக்கும் இடும்பன் குரங்கை ஒருமுறைக்கூட அறையமுடியாமல் தோற்பது கதையின் உச்சம். //கரிய முதுகுரங்கு ஒன்று மண்ணில் தாவிபீமனை அணுகி இருகாலில் எழுந்து நின்று நாய்க்குட்டியின்குரைப்பு போல ஒலியெழுப்பியதுஇடும்பன் கிளைவழியாக வந்துஅதை அறைந்தான்ஆனால் தலையைக் கூட திருப்பாமல் அதுஅவன் அடியை தவிர்த்ததுசீற்றத்துடன் அவன் திருப்பித்திருப்பிஅடித்தான்அது அவனை ஒரு பொருட்டாகவே நினைக்காமல்பீமனை நோக்கி ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது//

காற்றை யார் அடித்து வீழ்த்த முடியும்?மாருதியின் வடிவமா அந்த முது குரு குரங்கு? புரணம் உயிர்பெறும் கட்டம். 

இந்த கொடும் சண்டையில் தருமன் அறம் மறந்தது, ஒற்றையர் சண்டையில் அர்ஜுனனை ஏவியது. யதார்த்தத்தின் யாதார்த்தம். இயல்பாக வரும் பாசமும், கடைபிடிக்கவேண்டிய அறமும் முட்டிக்கொண்ட இடம். தருமனின் அறமாணியின் பாதரச மட்டம் சர்ர்ர்…என்று கீழயிறங்கிவிடும் தருணம்.//அவர்கள் மாயம் தெரிந்தவர்கள்… நான் பார்க்கும்போதேகண்ணிலிருந்து அவன் மறைந்துவிடுகிறான்… அவன் என்இளையோனை கொல்வான்அவன் இறந்தால் அதன்பின் நான்உயிருடன் இருக்கமாட்டேன்” என்றான் //

நேற்று சூரணனைப்பற்றி பீமன் சொன்ன வார்த்தைகளை இன்று நினைக்கும்போது அது அப்படியே தருமனுக்கு பொருந்துகின்றது. தனது தம்பி இடும்பனை கொன்றுவிடுவான் என்று நம்பி சிரித்து மகிழ்ந்த தருமன் இன்று தனது தம்பி இறந்துவிடுவானே என்று நினைக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்று சொல்வது எத்தனை பெரிய சுயநலம். இதைத்தான் பீமன் சூரணனைப்பற்றி சொல்வதுபோல் சொன்னானோ? //பீமன் நகைத்து “ஆம்அவன் இப்போதேஅரசனாக வளர்ந்துவருகிறான்” என்றான். “பிறரது இறப்புஅவனுக்கு ஆழ்ந்த உவகையை அளிக்கிறதுபோரைத்தொடங்கிவிட்டு தான் சாகாமலிருக்கவும் இதற்குள்கற்றுக்கொண்டிருக்கிறான்.”//-பிரயாகை 53.

நம்ம நாயகன் வில்கூட இல்லாமல் நிற்கின்றானே என்ன செய்வான்? என்று ஏக்கத்தோடு பார்க்கும்போது தனது ஆளுமையை தூக்கி வைத்து அந்த முழு போரையும் தன் பக்கம் இழுத்தான் பாருங்கள் அது அர்ஜுனன். //எனக்கு வில்தேவையில்லைஇந்த உடைந்த கிளைகளே போதும் அவனைவீழ்த்தஅஞ்சாமலிருங்கள்” என்றான்// வில்லுக்கு விஜயன் என்னும் காட்சி எழுந்து வந்து கண்முன் நிற்கிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.