Wednesday, December 17, 2014

சுருதையின் மனம்



ஜெ,

இன்றைய வெண்முரசில் [ பிரயாகை 57- 58 ] சுருதைக்கும் விதுரருக்குமான உறவின் நுட்பத்தைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இலட்சிய உறவு. விதுரரை மிக நன்றாக புரிந்துகொண்ட பெண் சுருதை. முதல் நாளில் இருந்தே அவர்களுக்குள் நல்ல உறவு உருவாகிவிடுகிறது. அவர் அவள் படுத்த அந்த படுக்கைக்குழியில் படுப்பதை அவள் பார்த்து கண்ணீர் விடும் இடமே மிகச்சிறந்த சித்தரிப்பு

அதன்பின் அவளுடைய மனசில் அவர் தெரிந்துகொள்ளாத இடமே இல்லை. திரும்பியும் அப்படித்தான். ஆனால் இதோ ஒரு கசப்பு வெளியாகியிருக்கிறது. எந்த இலட்சிய உறவுக்கு உள்ளேயும் இப்படி ஒரு சின்ன கசப்புக்கு இடமுண்டு. சொல்லப்போனால் இது ஒரு  balancing.  இது இல்லாவிட்டால் உறவின் வலிமை நிற்காது

தன்னிச்சையாக அந்த கசப்பு வெளிப்படுவதும் உடனே மறுநாள் அது நடக்காதது போல அவர்கள் சமரசமாகிவிடுவதும் அற்புதமான இடம். குடும்பத்தில் எங்கும் நிகழக்கூடியது. மிக இயல்பாக அதுவெளிவருகிறது. சுருதை மட்டும் அல்ல. பெண்களுக்கே அந்தக்கசப்பு இரண்டு இடங்களில்தான் வர வாய்ப்பு. அவர்களின் குடும்பம், அவர்களின் பிள்ளைகள். இரண்டுமே அவர்கலுக்கு personal ஆனவை. அதில் கணவனின் இடம் அவர்கள் ஒப்புக்கொள்ல மாட்டார்கள்

சிவம்