Saturday, December 20, 2014

பசுமையின் துளி




இனிய ஜெயம்,

பிரயாகைக்கு இணையாக அவ்வப்போது வேறு பல புனைவுகளும் வாசித்து வருகிறேன். பஷீரின் புனைவுகள்  வெண் முரசின் ஒளியில் மேலும் துலக்கம் பெறுகின்றன.

அணில் ஆடு யானை  என பஷீரின் உலகில்தான் எத்தனை சக உயிர்கள். அனைத்தும் அவற்றுக்குரிய ஆளுமையுடன் தனித்தன்மையுடன் வருகிறது. எளிய உலகம் போல பஷீரின் படைப்பு உலகம் தோற்றம் அளித்தாலும், பதித்துளியின் இருப்பும்   எளிமையும் இந்த பிரபஞ்சமளவே வசீகரமும் மர்மமும் கூடியது அல்லவா?

வெண் முரசு  மிருகங்களின் கதைகளால், அவற்றின் தனித்துவமான  ஆளுமைகளால் நிறைந்து கிடக்கிறது. இன்று வனத்துக்குள்  யானைகளும் குரங்கும் கடோத்கஜன் குறித்து பேசுகையில்  மனிதன் எத்தகு பிரும்மாண்ட உயிர் வலையில் ஒரு கண்ணி என உவகை எழுகிறது.

வர்ணனைகள் ஒன்றை ஒன்று முந்துகிறது. கடந்த அத்யாயம் பாம்பு போல நெளிந்து செல்கிறது நதி. இந்த அத்யாயம் நதியின் பிரதிபலிப்புடன் ஊர்ந்து வருகிறது ஒரு பாம்பு.

நரி ஒன்று பதறி புல் வெளிக்குள் ஓட, அதில் பதறி இன்னொரு ஜீவன் புல்வெளியில் இருந்து வெளியில் ஓடுவது....  வான் மறைக்கும் பச்சைக் கடலில், பீமன் பாய்ந்து விழுந்து திளைப்பது,,, அவன் உடலில் பதியும் நீருண்ட இலைகளின் பச்சையம்  என காடு  காட்சியாகவும், உணர்வாகவும் கண் முன் திகழ்கிறது.

இடும்பிபீமனிடம்  சொல்கிறாள் 'உன்னை வயிற்ரால் அல்லவா சுமக்கிறேன்' ஆம் எந்த அன்னையும்  மகனை  பிறந்த பின்னும் கண் அறியா தொப்புள் கொடி ஒன்றால் பிணைத்தே வைத்திருக்கிறாள். 

பசுமையில் நீந்தி பீமனும் குந்தியும் தரை இறங்குகிறார்கள். தரையில் கடோத் கஜன்.    அவன் காட்டாளனும் அல்ல மனிதனும் அல்ல.  அவனுக்கு  காடோ நாடோ சொந்தமல்ல, புல்வெளியில்  உழலப் பிறந்தவன்.  பீஷ்மன் நீந்திக் கடந்து தனது அடையாளத்தை அடைந்தார்.  கடோத் கஜன்  நீந்த வேண்டிய வானம்?  கருவில்  வரமாக வாங்கி வந்த அடையாளச் சிக்கல்.

பீமன் மகனை தோளில் ஏந்தி கனித்து நினைக்கிறான் 'நான் உன்னிடம் மட்டுமே தோர்ப்பேன்' . இந்த வரி என்னை எங்கெங்கோ அழைத்து செல்கிறது.

கடலூர் சீனு