இனிய ஜெயம்,
வேட்டை வழிகள் துவக்கத்தில் வரும் சூதன் பிரமதன் மீண்டும் என் நினைவுகளை பின் நோக்கி அழைத்து செல்கிறான். நினைவில் தீர்க்க சியாமர் எழுந்து வருகிறார். தீர்க்க சியாமர் கையில் இருக்கும் யாழுக்கும் பிரதமன் கையில் இருக்கும் யாழுக்கும் எத்தனை பண்பு பேதம்.
தீர்க்க சியாமர் தான் கைக்கொண்ட யாழுக்காக தன்னை தகவமைத்துக் கொண்டவர். அவற்றின் தந்திகளை மீட்ட கட்டை விரலுக்கு இடையே தசையை கிழித்துக் கொள்கிறார். பெண்கள் குரல் மட்டுமே எட்டு கட்டை எனும் சுருதியை எட்டக் கூடியது. ஆண்களால் இயலாது. அந்த சுருதியை எட்ட சியாமர் 'காம விலக்கம்' [விதைகளை நீக்கிக் கொள்வது வழியாக இருக்கலாம்] கொள்கிறார். அவரது சொல்லில் பரவும் கதைகளை இந்தப் பின்புலத்தில் பிறந்த அவரது இசையுடன் இணைத்தே புரிந்து கொள்ளப் படவேண்டும்.
பிரமதனின் யாழ் நேர் எதிர். அதில் ஒரே ஒரு தந்தி. அதன் முதல் மீட்டலிலேயே பார்வையற்ற திருதா 'சூதரே அது என்ன இசைக் கருவி' என்று வினவுகிறார். இந்த கருவி பிரமதனுக்காக தகவமைன்தது. அவனது கீழ் ஸ்தாயி [பெண்களால் இது முடியாது] குரலுக்கு இசைந்து வருவது. வண்டின் ரீங்காரம் போல இசை எழுவது. பிரமதன் சொல்லும் பகனின் வீழ்ச்சியை இந்த பின்புலத்துடன் இணைத்தே சபை கேட்கிறது. எனில் ஒரு சூதன் பாடலில் வரும் முக்கிய பாத்திரத்தின் எழுச் சியும் வீழ்ச்சியும் அவர்கள் முன் வைக்கும் இசையுடன் கலந்து முற்றிலும் புதிய பரிமாணத்துடன் மிளிர்கிறது.
பிரமதன் பாடும் பகனின் கதை துவக்கமே வீழ்ச்சியின் சித்திரத்துடன் தான் துவங்குகிறது. ரா வணனின் கொடி வழி அவர்கள். அவர்க்களின் வாழ் இடம் உஷ்ணம் கொண்ட உலோகப் பரப்பில் விழுந்த நீர் சொட்டு போல சத்ரியர்களால் சுருங்குகிறது.
பகன் தன மூதன்னை கதை வழியே தான் ராவணன் கொடி வழி என உணர்கிறான். அதை உணரும் கணம் அவன் அடிப்படை ஆளுமை விழித்துக் கொள்கிறது. [ பைமி அனுமன் கதை கேட்டு முடியும் கணம் அவனுக்குள் உரையும் அவனது அடிப்படை ஆளுமை விழித்துக் கொள்வதைக் காண்கிறோம்].
பகன் தன உயிர் ஆற்றல் அத்தனையும் திரட்டி ராவணன் விரலின் வைர மோதிரத்தை பற்றிக் கொள்கிறான். இங்கே இந்த வைரம் மூதன்னை உடையில் பொதிந்து வைக்கப் பட்டிருக்கிறது. அங்கே ஹஸ்திநாபுரியின் அஸ்வதந்தம் எனும் வைரமும், அது வைக்கப்படும் இடமும் அதை நோக்கிய விதுரரின் அசைவும் இப்போது கூடுதல் பரிணாமம் பெறுகிறது.
பகன் பலராமர் வசம் சீடனாக சேருகிறான். பலராமர் அவன் தனது சீடன் என ஒரு முத்திரை மோதிரம் அளிக்கிறார்.பகன் தனக்கென சிறிய அரசு அமைக்கிறான். அது அஸ்வத் தாமனால் முற்றிலும் அழிக்கப் படுகிறது. தவறாக பகனின் குடியில் பெண்களும் குழந்தைகளும் யுத்த நெறிக்கு புறம்பாக அஸ்வத்தாமனால் கொல்லப் படுகிறார்கள்.
இயற்க்கை கழித்த குழந்தை அதை மறைக்க அதிலேயே அமர்ந்திருக்கும் அது போல அஸ்வத்தாமன் தன் பிழையை மறைக்க பகனின் நிலம் மொத்தத்தையும் தீக் கிரை ஆக்குகிறான்.
பகனின் குடியில் ஒரு பெண், ஒரு குழந்தை உயிருடன் இல்லை. பகன் மனம் திரிபடைக்கிறான். இங்கு வரும் சித்திரம் முக்கியமானது. பகன் தனது ராவணன் மோதிரம், குருவின் இலட்சினை இரண்டையுமே தூக்கி வீசி விடுகிறான். இப்போது அவன் வெறும் 'கொல்லும் மிருகம்' மட்டுமே. ஆக பீமன் பலராமரின் சீடரை கொல்ல வில்லை. இயல்பால் மிருகமாகத் திரியும் ஒருவனை மட்டுமே கொல்கிறான்.
அங்கே வனத்தில் பீமன் பைமியைக் காணும் தோறும் திருதாவை எண்ணிக் கொள்கிறான். இங்கே திருதா பகனின் 'வதம்' வழியே எங்கோ பீமன் 'உயிருடன்' இருக்கிறான் என்று உணர்ந்து ஆறுதல் கொள்கிறார்.
வேட்டை வழிகள் முற்றிலும் தனித்துவம் கொண்ட அத்யாயம்.
கடலூர் சீனு