Wednesday, December 31, 2014

பிரயாகை-61-அப்பாக்களின் அகம்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அன்னை முரண்களால் ஆனவள், அவள் சுமப்பாள்,பிறப்பிப்பாள், உணவூட்டுவாள், வளர்ப்பாள், அதற்கும்மேலாக விழுங்கியும் விடுவாள். எப்படி விழுங்குவாள்? நம்மைபோல சிறுசிறு உருண்டையாக பிடித்து மென்று தின்பதல்ல அவள் வேலை. பெரும் கவளமாக விழுங்கிவிடுவாள். பூமாதேவியையும் அவளின் பூகம்பத்தையும் நினைத்து கொள்வோம் அன்னையின் முரணுக்கு சாட்சியாக.

தந்தைக்கு இந்த முரண் இருக்கிறதா? இருக்கிறது என்றுதான் காட்டுகின்றான் வாயுபகவான். தந்தை சுமப்பதோ, பிறப்பிப்பதோ, உணவூட்டுவதோ, வளர்ப்பதோ, விழுங்குவதோ வெளியில் தெரிவதில்லை ஆனால் அத்தனையும் அவன் செய்கின்றான்.

அன்னையின் முரண் பூகம்பம் என்றால் தந்தையின் முரண் அசைவின்மை. அன்னை பக்தி மார்க்கத்தில் செய்யும் அனைத்தையும் தந்தை ஞானமார்க்கத்தில் செய்கின்றான். அன்னை செய்வது ஞானத்தில் வந்து நின்றுவிடுகின்றது. தந்தை செய்வது பக்தியில் வந்து நின்றுவிடுகின்றது. 

இடும்பி தன் மகனை காட்டைவிட்டு வெளியில் அனுப்பினால் அவன் ஏளனப்படுத்தப்படுவான் என்பதை அறிந்து இருக்கிறாள். பீமன் தன் மகன் காட்டில் இருந்தால் பறக்கமுடியாததால் ஏளனப்படுத்தப்படுவான் என்பதை அறிந்து இருக்கிறான். அன்னை அறியும் உண்மையை தந்தை அறியாமல் இருப்பதும், தந்தை அறியும் உண்மையை தாய் அறியாமல் இருப்பதும் இயற்கைாக அமைந்த முரண். இடும்பி அறிந்திருக்கும் உண்மை முகக்கண் கண்ட உண்மை. பீமன் அறிந்து இருக்கும் உண்மை அகக்கண் கண்ட உண்மை. இடும்பி காட்டின் இருட்டில் இருந்து நாட்டின் வெளிச்சத்தைப்பார்க்கிறாள். பீமன் நாட்டின்வெளிச்சத்தில் இருந்து காட்டின் இருட்டைப்பார்கிறான்.  நாட்டுக்கும் செல்ல முடியாமல் காட்டிலும் வழமுடியாமல் புள்வெளியில் வாழும் ஒரு வாழ்க்கை கடோத்கஜன்முன் நிற்கிறது. அன்னை, தந்தை மனதில் என்ன வேண்டுதல் இருக்கும்?  

பீமன் அகம்படும்பாடு எப்படி இருக்கும்?. பீமன் நீள்மூச்சுடன் “இன்றுஅவனை கொண்டுசென்று காட்டவேண்டும்அன்னைநாலைந்துமுறை கேட்டுவிட்டாள்” என்றான்.-பிரயாகை-60ல் வரும் இந்த வரிகள் வழியாக பீமன் குந்தியின் உள்ளத்தை  நமக்கும் காட்டுகிறான். ஆனால் குந்தியின் பெயரையோ, அண்ணன் பெயரையோ தம்பிகள் பெயரையோ பாண்டுவின் பெயரையோ தனது குழந்தைக்கு பழக்காமல் ஏன் திருதராஷ்டிரன் பெயரைப்பழக்குகின்றான்?

காட்டு வாழ்க்கைதான் பிடிக்கிறது என்றும் அரசின் எந்த முறைமையும் பழகிக்கொள்ளாமல், நல்லுடை உடுத்தாமல் காட்டுவேடன்போலவே வாழும் பீமன். எளிய மனிதர்கள்தான் தன்னை தேடுபவர்கள் என்று எளிய மனிதர்கள் உடன் அமர்ந்து உண்டு பேசி சிரிக்கும் பீமன் வாரணவதம் வந்த அன்று அனைத்து தளைகளும் விடுபட்டதுபோல் உணர்ந்து நிம்மதி அடையும் பீமன் என்று பீமனின் தனித்தன்மைகள் கூடிக்கூடி அற்புதமாக உள்ளது. ஆனால் தந்தையானபின்பு மகனை பேரரசன், சக்ரவர்த்தி என்றே கொஞ்சுகின்றான். இந்த இடத்தில் பீமன் தன்னை கண்டுகொண்டது திருதராஷ்டிரனாக.

அப்பாக்கள் எல்லோருமே கண்ணில்லாத திருதராஷ்டிரன்தான். இது அப்பாக்களின் முரண்.

யானைக்கட்டி ஆண்ட பரம்பரையில் ஒரு காடுகூட சொந்தம் இல்லாமல் வாழ்க்கை வாழும்  பீமன் மனிதில், மகன் பேரரசன், சக்கரவர்த்தி என்ற எண்ணம் வரும் என்றால் திருதராஷ்டிரன் நினைவுக்கு வரவேண்டிய தருணம்தான் இது. அற்புதம் ஜெ. பெரும் உடலுக்காக மட்டும் இல்லை பெரும் தந்தைபாசத்திற்காகவும் திருதராஷ்டிரன் இங்கு நினைவுப்படுத்தப்படுகின்றான்.

தந்தை பாசத்தில் ஆடிப்பிம்பங்களாய் நிற்கும் பீமனையும், , திருதராஷ்டிரனையும் விஞ்சும் ஹனுமானின் தந்தை வாயுவின் தந்தைப்பாசம் அதிர வைத்தது. பிள்ளைப்பாசத்தில்  வாயுவாகிய தந்தை பாதாளத்திற்கு செல்கிறான்.உலகத்தில் அசைவின்மை உண்டாக்குகின்றான். நிகரற்ற காட்சி, நிகரற்ற உண்மை ஜெ.   

//வாயுவில் ஏறிய ஹனுமான் ‘தந்தையேபாதாளத்துக்குச்செல்லுங்கள்’ என்று ஆணையிட்டான்மைந்தனைத் தூக்கிக் கொண்டுகாற்று பாதாளத்திற்குள் சென்றுவிட்டதுபூமியில் எங்கும் காற்றேஇல்லைகடல்கள் அசையாமல் துணிப்பரப்பு போல ஆயின.கிளைகளும் இலைகளும் அசையவில்லைநெருப்புகள்அசையவில்லைதூசி அசையவில்லைபூச்சிகளின் சிறகுகள்அசையவில்லைஉலகமே அசைவிழந்தது ஆகவே மக்களின்உள்ளங்களும் அசைவிழந்தனவிளைவாக சிந்தனைகள்அசைவிழந்தனஇறுதியில் பூமியே செயலற்றது.//

அன்னைகள் விழுங்குபவர்கள் என்றால் தந்தைகள் அசைவின்மையை உண்டாக்குபவர்பகள். பூமியில் பூகம்பம் வருவதும், அசைவின்மை வருவதும் ஒன்றுதான்.

அன்னைகள் அனைவரும் பூமாதா. தந்தைகள் அனைவரும் வாயுபகவான்.  பிள்ளைகள் அனைவரும் வானரங்கள்.  வானில் பறந்து சூரியனை பிடிக்க நினைக்கிறது, அருகில் சென்றதும் ராகுவை பிடிக்கப்போகின்றது, அங்கு சென்றதும் சிந்தை மாறி கேதுவைப்பிடிக்கப்போகிறது அதையும் பிடிக்காமல் வாலில் தட்டுப்படும் ஐராவதத்தை பிடித்து ஊதலாக நினைத்து ஊதுகிறது. சென்றவிடத்தில் அறிவை செலவிடக்கூடாது என்கின்றார் வள்ளுவர். சென்றவிடத்தில் எல்லாம் அறிவை செலவிட்டு செலவிட்டு செல்வதுதான் பிள்ளைகளின் விளையாட்டு அந்த பிள்ளைக்காகத்தான் தந்தை உலகத்தை அசைவிடாமல் செய்கிறான். 

சென்ற இடத்தால் செலவிடா தீதொரிஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு-திருக்குறள்.


பீமன், திருதராஷ்டிரன், வாயு மூன்று தந்தைகளும் ஒரு கோட்டில் வந்து நிற்கும்போது அகமும் முகமும் ஒன்றாய் இருப்பது அழகு. மூன்றுதந்தைகள் ஆனால் மூவரும் ஒருவர்.

திருதராஷ்டிரன் என்ற பெயர் கேட்டதும் கடோத்கஜன் அமைதிஅடைவதும், பின்பு பேச்சை மாற்றுவதும் அற்புதம். குழந்தையும் தெய்வதும் ஒன்று என்று சொல்வார்கள். பிடிக்காதவர்களை குழந்தைகள் புறக்கணிப்பது தெய்வம் அறிந்த கலை ஆகும். பாண்டவர்களுக்கு தீமை செய்பவன் திருதராஷ்டிரன் என்று அந்த பிஞ்சு உள்ளம் எப்படி அறிந்தது.?

ஹனுமான் கதையில் தர்ப்பை படுக்கையில் தீ என்ற உவமை வந்தபோது கடோத்கஜன் “திருதராஷ்டிரர்“ என்று பெயர் சொல்வது  வாசக உள்ளத்தை அதிரவைக்கும் குறியீடு ஜெ. அவனே “திருதராஷ்டிரர்..திருதராஷ்டிரர்” என்று பீமனை வெறுப்பு ஏற்றுவது உச்சம். தந்தைகளைக்கண்டு தந்தைகள் பயப்படும் இடம்.  மீண்டும் குழநதைகள் தெய்வம் என்ற குறியீட்டை நிறுவுகின்றீர்கள்ஜெ.
ஹனுமான் கதை கற்பனை வளத்தில் குழந்தைகளின் உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும் விதத்தில் அமைந்து பறக்க செய்துக்கொண்டே பெரியவர்கள் உள்ளத்தை சிந்தனையில் துவைத்து காயவைக்கிறது.

கதைதான் என்று நினைக்கின்றோம் அது வாழ்க்கையையே மாற்றி அமைத்துவிடுகிறது. ஹரிச்சந்திரன் கதை காந்தியை மாற்றி அமைத்ததுபோல ஹனுமன் கதை கடோத்கஜன் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது. குந்தியின் கதை பீமனை மாற்றி அமைத்துவிட்டது. பறக்கதெரியாத கடோத்கஜன் மாருதிபோல் பறப்பது அவன் இடும்பர்களின் இடும்பன் என்பதை காட்டுகின்றது. இடும்பன் பீமன் வேண்டுதல் பலித்துவிட்டது.
//ஒருகட்டத்தில் அவன் பறவைபோல காற்றில் பறந்து பறந்துஅமைந்தான். பீமன் எழுந்து நின்று கைவீசி நகைத்தான்.இடும்பர்களிலேயே கூட எவரும் அப்படி மரங்கள் மேல் பறப்பதைஅவன் கண்டதில்லை//
பிள்ளைகளுக்காக அம்மா, அப்பா வேண்டகூட தேவை இல்லை நினைத்தாலே வேண்டுதலை இறைவன் நிறைவேற்றிவிடுகிறான். இறைவன் அம்மையப்பன்.

அன்புள்ள ஜெ பிரயாகை-61ல் ஒரு கடலை அண்ணாந்துப்பார்த்தேன். அண்னாந்துப்பார்த்துக்கொண்டே இருக்கும்போதே வானவெளியில் நின்று கடலை குனிந்தும் பார்த்தேன். மேலே பறக்கும் பறவைகளையும், கடலுக்குள் நீந்தும் மீன்போன்ற குரங்குகளையும் பார்த்தேன். இது அற்புமான காட்சி. இணையற்ற அனுபவம். //காற்றில் இலைக்கடல் அலையடித்தது.அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்துசுழன்று இறங்கி அமைந்தனபச்சைவெளிக்கு அடியில் இருந்துபறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது.
தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்றுஅவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச்சொறிந்தபின்னர் கிளைகளில் தாவி மேலேறி வந்து சற்று அப்பால்அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்றது. 
   
காடு இனி காடு அல்ல அண்ணாந்துப்பார்க்கும் பச்சைக்கடல்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.