அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
“போதி” சிறுகதையில் வந்த ஆலமரம் காட்சி இன்னும் இருக்கிறது இனியும் இருக்கும். எத்தனையோ ஆலமரங்களைப்பார்த்தபோதும் ஏன் அப்படி பார்க்கவில்லை என்று எண்ணிக்கொள்வது உண்டு. //ஆலமரம் அப்படித்தான் இருக்கிறது . ஆனால் அன்று வந்துநுழைந்தபோது இது அளித்த பிரமிப்பை இப்போது தரவில்லை .ஜடையை அவிழ்த்துப்போட்ட கிழ ராட்சசி போல பயமுறுத்தும்கம்பீரம்.//
ராட்சசி, கம்பீரம் அனைத்தையும் தாண்டி கிழவி என்றபோது வரும் அந்த தாயின் பிம்பம் மனதின் ஓரத்தை தொட்டும், தடவியும், கனியவைக்கும் அந்த நெகிழ்வில் இளைப்பாறுதலை உணர்ந்தேன். ராட்சசிக்குள் இருக்கும் அந்த அம்மா காரணமாக இருக்கலாம். ஜடையை அவித்திப்போட்ட அவளின் தனிமையும் ஒரு சோகமாய் நிழல்போல கூடே வருவதை உணர்ந்த தருணங்கள் உண்டு. இதற்கு முன் பார்த்த ஒவ்வொரு ஆலமரமும் ஒரு தாயாய் நினைவில் வந்துவந்துபோனது. அவள் கைகளில் ஆடிய சுமமெல்லாம் ஒரு பேரனின் சுகம்தானோ?
துருவன் தவம் செய்ய கண்டடைந்த ஆலமரம் ஆயிரம் கிளைகளும் ஐயாயிரம் விழுதுகளும் கொண்டதாக இருந்தது. அவன் சடைகளும் ஆலமரத்தின் விழுதுகளும் பின்னிப்பிணைந்துக்கொண்டன அதனால் அவனே ஒரு ஆலமரபோல் ஆகி நிற்கின்றான். இந்த காட்சிக்கு பின்னால்வரும் காட்சியில் உறைந்துநின்றேன். //அவன் சித்தமேயாகி எழுந்துகிளைவிரித்த ஆலமரம் பல்லாயிரம் நாக்குகளால் “வருக வருக” எனவிண்ணுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தது//-பி ரயாகை-3
துருவன் மட்டும் அல்ல நானும்கூட பல்லாயிரம் எண்ணங்களால் கிளைவிரித்த ஆலமரம்தான். பல்லாயிரம் எண்ணங்களும் பல்லாயிரம் திக்குகளில் பல்லாயிரம் தேவைகளை நோக்கி நாவசைத்துக்கொண்டு இருக்கிறன. துருவன் போன்ற ஆலமரத்தின் பல்லாயிரம் நாக்கும் ஒன்றையே அழைக்கின்றன. ஒரு நாக்கில் எழும் பல்லாயிரம் பிராத்தனையும், பல்லாயிரம் நாக்கில் எழும் ஒரு பிராத்தனையும் இந்த ஆலமரத்தில் இருந்து கிடைக்கும் காட்சி.
சாலிஹோத்ரசரஸின் கரையில் நின்று சிறிய குளத்தைப்பார்க்கும் பீமன் அதை கொதிக்கும் சமையற்கலம் என்கிறான் இது ஒரு கிட்டப்பார்வை காட்சி. அற்புதமான காட்சி. சிறிது சிறிதாக விரிந்து பெரிதாகும் ஒரு பெரும் சமையற்கலம். அவனே ஒரு ஆலமரத்தைப்பார்க்கிறான் அது தூராப்பார்வைக்காட்சி //மிகஅப்பால் சாலிஹோத்ரர்களின் தெய்வவடிவமான ஒற்றை ஆலமரம்ஒரு சிறுகாடு போல விழுதுகள் பரப்பி நின்றிருந்தது. அதற்குள்அவர்களின் தெய்வமான ஹயக்ரீவரின் சிறிய ஆலயம் இருந்தது.அதன்மேல் விழுதுகள் விழுந்து கவ்வியிருக்க ஆலமரம் கையில்வைத்திருக்கும் விளையாட்டுப்பொருள் போலிருந்தது ஆலயம்)//
இங்கு காட்டப்படும் ஆலமரம் முற்றிலும் மாறிய ஒரு அகத்தை பிரதிபளிக்கின்றது. பச்சைப்பட்டுப்பாவடை உடுத்தி கையில் விளையாட்டுப்பொம்மை வைத்திருக்கும் சிறுமியை காட்டுகின்றது. ஆனால் அவளே ஒரு தெய்வடிவமும் ஆகி கோயிலை பொம்மையாக்குகின்றாள். அவளுக்குள் ததும்பிம் அழகையும், குறும்பையும், இனிமையையும் தந்து அதற்கும் அப்பால் இயற்கைக்கு முன்னால் கோவில் எல்லாம் பொம்மைகள் என்ற நிமிர்வும் காட்டுகின்றாள். இந்த குழந்தையிடம் இருக்கும் தெய்வீக தாய்மையும் வண்ணம்கொள்ள வைக்கின்றது.
ஆலம் ஒன்றுதான். இன்று மூன்று ஆலமரமாகி நிற்பதை பார்க்கின்றேன். ஒன்று முதியவளாய் தனித்தவளாய், கம்பீரமாய்,கிழவியாய் ஆனாலும் அன்னை என்னும் காட்சி பொலிவு. இரண்டுவது மரம் நிறைந்ததாய், பரந்ததாய், உயர்ந்ததாய், சொல்கொண்டாய், தியானத்தில் இருப்பதாய் ஆனாலும் பிராத்திக்கும் மனிததாய் என்னும் காட்சிக்கனிவு. மூன்றாவது ஆலமரம் காடாய் இருந்தாலும் களித்தோழி அதற்கும் அப்பால் தெய்வத்தாய் என்னும் சகலகாலவல்லி.
மூன்று ஆலமரங்கள் நடுவில் நின்ற ஒரு ஆனந்தம், மூன்று தாய்களின் நடுவில் நின்ற ஸ்பரிசம் ஜெ. நன்றி.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.