Friday, December 19, 2014

குதிரைப்பல்



பிரயாகை - 57 ல்  வரும் இன்னொரு படிமம் அஸ்வதந்தம் என்ற வைரம். இதற்கு முன்பு வந்த அத்தியாயங்களிலும் இதே வைரம் அதே ஆமாடப் பெட்டியில் தான் இருந்தது. ஆனால் அது எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறோம். "விதுரர் எழுந்து அகல்விளக்கை எடுத்துக்கொண்டு அருகிருந்த சுவடி அறையை அடைந்தார். தன் இடையிலிருந்த சிறு திறவியால் ஒரு பெட்டியைத் திறந்து உள்ளிருந்து பெரிய தாழ்க்கோலை எடுத்தார். அறையின் தாழ்த்துளைக்குள் விட்டு இருமுறை வலமும் ஒருமுறை இடமும் மீண்டும் ஒருமுறை வலமும் மீண்டுமொருமுறை இடமும் சுழற்றி அதை திறந்தார். இருளில் தன் நிழல் துணைவர கைவிளக்குடன் நடந்து குனிந்து ஆமையோட்டு மூடியிட்ட சுவடிப்பெட்டியைத் எடுத்தார். அதற்குள் சுவடிகளுக்கும் சுருட்டிய பட்டு லிகிதங்களுக்கும் நடுவே இருந்த சிறிய தந்தப்பேழையை எடுத்து மெல்ல மூடியை அகற்றினார். உள்ளே அஸ்வதந்தம் என்ற அந்த சிறிய வைரம் இருந்தது. எளிய வெண்கூழாங்கல் போலத்தான் தெரிந்தது. செம்பழுப்புநிறம். அதில் அகல்சுடரின் ஒளி ஒரு நுனியில் பிரதிபலித்தது. வேல்நுனியின் குருதிப்பூச்சு போல."

இது வரை அந்த வைரம் அவருக்கு குந்தியை நினைப்பதற்கான ஓர் குறியீடு என்றே நான் நம்பி வந்தேன். மழைப் பாடலின் தனிப்புரவி நூலின், நான்காவது அத்தியாயத்தில், பராசரரின் தேவிஸ்த்தவம் நூலைப் படிக்கும் விதுரன் அந்நூலைப் படிக்கத் தூண்டிய உணர்வாக இருந்தது குந்தி என்று நினைவுறுகிறான். அதிலும் அது குந்தி அல்ல, அவளின் வெண்ணிற பாதங்கள் மட்டும் தான். அதே நினைவோடு தான் அவன் அந்த வைரத்தை எடுத்துப் பார்க்கிறான். பின்பு அவ்வைரம் அங்கு இருக்கிறது என்ற நினைவிலேயே வாழத் துவங்குகிறான். அவன் அவ்வைரம் மூலமாக நினைவுறும் குந்தி, 'அனைத்துலகிலும் ஆற்றல் நிறைந்த தேவி, சர்வகல்விதமேவாஹம் என்று அவனுலகெங்கும் நிறைந்திருக்கும் சக்தி'. அப்படித் தான் நான் புரிந்து கொண்டேன். ஏன், விதுரன் கூட அதை அவ்வாறு தான் புரிந்து வைத்திருக்கிறான்.  இன்று சுருதையை வெறுப்பேற்ற, தான் அவ்வைரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாகச் சொல்கிறான். 

ஆனால், சுருதை இன்னும் ஆழமாக விதுரனைப் புரிந்து வைத்திருக்கிறாள். அவ்வைரம் அவனுக்கு அஸ்தினபுரியின் குறியீடு என்கிறாள். அவ்வைரத்தை விதுரன் தனக்களிக்கப் பட்ட அரசாகவே பார்க்கிறான் என்கிறாள். அதையே தான் பீஷ்மரும் சொல்கிறார், கிருஷ்ணரும் சொல்கிறார். மீண்டும் சுருதை என்னை ஆச்சரியப் படுத்திய இடம் இது. 

அது தனக்களிக்கப்பட்ட அரசு அல்ல, அது பாண்டு தன் மீது வைத்திருக்கும் வாஞ்சை தான் என்பதை விதுரன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் விதுரனே தனக்குள் அப்படி ஓர் எண்ணம் இருப்பதைத் தெரிந்து கொள்ளவில்லையே!!! அந்த சார்வாகன் விதுரனிடம், "அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் விழைவின் மேல் மானுடன் பூசிக்கொள்ளும் மாசுகள்தான். அதைக்களைந்து உண்மையைக் காண்பதே ஞானம். அதுவே மகிழ்வுக்கான வழி. உண்மையின் மகிழ்வே வீடுபேறு எனப்படும்." என்று அவன் இளமையிலேயே சொல்கிறான். விதுரனுக்குள் சிவையின் தன் மகன் அரசாள வேண்டும் என்ற விருப்பு அவனறியாமலேயே குடியேறி இருக்கிறது. அந்த விழைவின் மீது அவன் ஏற்றிக் கொண்டது தான் இந்த தலைமை அமைச்சன் என்ற பதவி. ஆம், அந்த விழைவின் மீது அவன் பூசிக்கொண்ட மாசுக்களே இவை. 

மானுட மனம் தன் ஆழத்தைத் தனக்கே மறைத்துக் கொள்ள என்னவெல்லாம் நாடகம் இடுகிறது. அதன் உச்சம் தான் அவ்விழைவின் நேரடிக் குறியீடை, குந்தியின் மீதான விழைவாக விதுரனையே எண்ணச் செய்திருக்கிறது. இன்று சுருதை சொல்லும் போது தான், அவ்வைரம் பாதி அரசிற்கு இணையாகத் தரப்பட்டது என்பதும், மிக நேரடியாகவே அது அரசைத் தான் குறிக்கிறது என்பதும் நமக்கு மட்டுமல்ல, விதுரனுக்கும் தெரிந்திருக்கும்.

அதை உணர்ந்து, அதைக் கடந்து, அதைத் துறக்கும் போது தான் விதுரன் மீட்பு அடைய முடியும். அதைத் தான் பீஷ்மர் "இறந்தாய், பிறக்கவில்லை" என்கிறார். மார்க் ட்வைன் சொல்லியது போல, "வாழ்வில் இரு தினங்கள் முக்கியமானவை. ஒன்று பிறந்த நாள். மற்றொன்று ஏன் பிறந்தோம் என உணர்ந்த நாள்." விதுரனுக்கு அந்த இரண்டாவது நாள் சுருதையின் மூலம் சித்திக்கும் என நினைக்கிறேன். 


மிக நுட்பமான அக வெளிப்பின்னலை உருவாக்கியிருக்கிறீர்கள் ஜெ. நானும் சிக்கியிருக்கிறேன். வெளிவந்து விடுவேன் என நினைக்கிறேன்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.