Thursday, December 18, 2014

திருதராஷ்டிரனின் குரல்


ஜெ

திருதராஷ்டிரர் கோபத்துடன், "ஆம். இருகைகளையும் ஓங்கி அறைந்து அவன் மட்டும் வைசியமகன் இல்லை என்றால் யுயுத்சுவை அரசனாக்கியிருப்பேன். பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த நாட்டை ஒருநாள் அவன்தான் ஆளப்போகிறான் என்று கூவியபடி தேரில் ஏறிக்கொண்டார்." இதில் காந்தாரியரை அகமிழக்கச் செய்ய 'யுயுத்சுவை அரசனாக்கியிருப்பேன்' என்று சொல்ல்வது புரிகிறது. [பிரயாகை 58]

ஆனால் அடுத்து அவர் சொல்லும், "பார்த்துக்கொண்டே இருங்கள், இந்த நாட்டை ஒருநாள் அவன்தான் ஆளப்போகிறான்" என்பது இந்த இடத்துக்கு சரியாக பொருந்தவில்லை என்றே படுகிறது. ஒரு விதத்தில் முடிவு தெரிந்த ஆசிரியரின் குரலாக எனக்கு அது பட்டது. ஏனென்றால் திருதராஷ்டிரருக்கு சினம் இருந்தால் கூட அது காந்தாரியரிடம் தானே ஒழிய துரியோதனனிடம் இருந்திருக்காது என்றே நம்புகிறேன். இது தங்களைக் குற்றம் கண்டுபிடிக்க சொல்லவில்லை. எனக்கு வெண்முரசு தெரிந்த அளவுக்கு பாரதம் தெரியாது.  

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.
‘அன்புள்ள மகராஜன்,

 பத்து காந்தாரிகளும் ஒருவரே. ஒரேமனம். அவர்களின் ‘கண்மூடித்தனம்’ திருதராஷ்டிரனை கோபம் கொள்ளச் செய்கிறது. அவர்கள் அனைவர்மேலும் வரும் எரிச்சலே திருதராஷ்டிரரை வைசியபெண்ணை நோக்கி செல்லவைக்கிறது. ஆரம்பம் முதலே அவள்தான் அவரது உள்ளத்தின் அரசி. இசை மட்டும் அல்ல அவரை புரிந்துகொள்வதே அவள்தான். இவர்கள் அவரிடம்  எதையோகேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்

யுயுத்ஸுவை அரசனாக்குவேன் என அவர் கூறுவது ஏன்? அவர்கள் கௌரவரை முடிசூட்டுவதை அல்லாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூட பேசாமலிருக்கிறார்கள். அவரது காதலை அது அவமதிக்கிறது

யுயுத்ஸு தான் நாடாளப்போகிறான் என்பது அந்தக் கோபத்தில் சொல்லப்பட்ட  ஒரு வாய்தவறிய கூற்று. நிறைய தருணங்களில் நம் வாழ்க்கையில் ‘அறம்பற்ற’ கூடிய அத்தகைய பேச்சுக்களை அறியாமலேயே சொல்லிவிடுவோம் இல்லையா?

ஜெ