Thursday, December 18, 2014

அன்பெனும் உடைவாள்




இனிய ஜெயம்,
பிரியம் எனும் எந்த முத்தும் மையத்தில் வெறுப்பு எனும் உறுத்தலால் உருவானதுதானா?   பதுமை நாடகத்தில் பேசப் படும்  அப்பா மகன் உறவாகட்டும்  நேற்றைய  விதுரர் சுருதை  கணவன் மனைவி உறவாகட்டும்  .. இன்றைய  கூடல்   மற்றும்  பெண்களாகிய நாங்கள் அனைவரும்  அடிப்படையில் அன்னையர் எனும் கூற்று இவை எல்லாமே  இந்த உள்ளார்ந்த  வெறுப்பை  மறைக்கும் பாவனையா  அல்லது  மீட்சிக்கான வழியா? [பிரயாகை 58]
சுருதை , துரோணர், காந்தாரி  அனைவரும் அவர்களது மகனை வைத்திருக்கும் நிலையில்தான்  எத்தனை கோணம்.


காந்தாரி வசம் விதுரரின்  கேள்விகளில்  உண்மையில்  காந்தாரியை வதைக்கும் நோக்கே  அரசு சூழ் நிலையைக் காட்டிலும் முந்தித் தெரிகிறது. இதில் விதுரருக்கு  இரண்டு பலன்  ஒன்று  சதி மீது  காந்தாரியின்  எதிர்வினை எவ்வாறு இருக்கும் என அறிந்து  வரும் காலத்தில்  அவளைக் கையாளலாம். இரண்டு  சதி  வெளியாகும் பட்சத்தில்  அது இனி காந்தாரிக்கு இரண்டாம் நிலை அதிர்ச்சிதான்.


துரியன் குறித்த காந்தாரியின் நம்பிக்கை, அது உடையும்போது  என்ன ஆவாள்?  ஹச்தினாபுரியின் அரசியாக  இருப்பாளா? அல்லது சுருதை  சொன்னதுபோல  அன்னையாக மாறி  அனைத்து சிறுமைகளையும் உண்டு செரிப்பாளா ?


அரசன் அற்ற நிலத்தில்  துரோணர்  முதல்  காந்தாரி வரை எத்தனை அரியணைக் கனவுகள். பீஷ்மர் தனது உடைவாளை  வருடிப் பார்க்கும் சித்திரம் இப்போது பேரழுத்தம் கொள்கிறது

கடலூர் சீனு