Saturday, December 27, 2014

குண்டாசி கௌரவ மனதின் மனசாட்சி:



குண்டாசியின் பாத்திர உருவாக்கம் மிக அருமை. மொத்த கௌரவர்களையும் ஒரே மனம் என்று கொண்டால் நூறு சகோதரர்களும் அதன் நூறூ குரல்கள். அதில் துரியோதனன் முடிவெடுத்து செயல்படும் முதன்மை குரல். துச்சாதனன் முதலிய பெரும்பான்மை நபர்கள்  முதன்மை எண்ணத்தை வலுவாக்கிக் கொள்ளும் சுய தர்க்கங்கள். 

குண்டாசி மனதின் ஓரத்தில் எப்போதும் மெல்லிய ஒலியில் பேசும்  மனசாட்சியின் குரல், மனித மனதில் அறம் என்ற தெய்வத்தின் பிரதிபலிப்பு மனசாட்சி. கொன்றுவிடமுடியாத சிரஞ்சீவித்தன்மையுடன் கூடிய மனதின் குரல்.   மனம் வஞ்சத்தில் ஈடுபடும்போது  மனசாட்சி மற்ற தர்க்கங்களால் உதாசீனப்படுத்தப்பட்டு ஓரம்தள்ளப்படுகிறது. அதன் குரல் வெளிபடாவண்ணம் மற்றவை ஓங்கி ஒளிக்கின்றன. அதன்  குரலொலி  யாருக்கும் கேட்கா வண்ணம் மங்கி தேய்ந்து விடுகிறது. மீறி  ஒலிக்கும் சில சொற்களும் குடிகாரர்களின் உளரல்களாக அலட்சியப்படுத்தப்படுகின்றன. மற்ற குரல்கள் அவ்வப்போது மனசாட்சியை சற்றே திரும்பி பார்த்து  வருத்தப்பட்டு மீண்டும் தம் சொந்த தர்க்கங்களுக்கு திரும்பி விடுகின்றன. 

        ஒருவனின் மனம் வெறொருவரின் மனதை சந்திக்கும் போது அதன் மனசாட்சியின் குரலின் நலத்தை அறிய விழைகிறது. அதற்கேற்ப தன் எண்ண் ஓட்டத்தை அமைத்துகொள்கிறது. இங்கு கர்ணன் என்ற மனம் கௌரவ மனதின் மனசாட்சியின் நலிந்த நிலையை அறிந்துகொள்கிறது. அதற்கேற்ப கர்ண மனம் தன் எண்ண ஓட்டங்களை மைத்துகொள்கிறது.   

தண்டபாணி துரைவேல்