இனிய ஜெயம்,
நம்மிடம் உள்ள ஆகப் பழமையான இந்திய இலக்கியம் வேதங்கள். சாரத்தில் அவைகள் பல்வேறு வழிபாடுகளின், சடங்குகளின், ஞானத் தேட்டத்தின் தொகுப்புகள். அவற்றின் உத்தேசமான பிரிவு ஞான காண்டம் கர்ம காண்டம்.
அதற்க்கு அடுத்த காலகட்ட இலக்கியம் மகாபாரதம். அன்று முதல் இன்றைய வெண் முரசு வரை நமது இந்தியப் பண்பாடு என்பதை இத்தகு வழிபாடுகளின் இடையேயான முரண்கள் சமரசங்கள் இவற்றின் இயங்கியல் வரலாறு என்று சொல்லி விடலாம்.
முதற்க் கனலின் நாகர்கள் வழிபாடு தொடங்கி இன்றைய இடும்பாவன வழிபாடு வரை எத்தனை எத்தனை சடங்குகள். வழிபாடுகள். முதற்க்கனலின் நாகங்கள் பின்னர் வண்ணக் கடலின் இள நாகனின் பெயராகி, சமண மதத்துக்குள் கரைவதைக் காண்கிறோம்.
வைதீக அவைதீக போக்குகளின் முரண்களை காண்கிறோம். தால்ப்போலி துவங்கி, ஹயக்ரீவ வழிபாடு தொடர்ந்து, துருவ நட்சத்திரம் வரை அனைத்து தொன்மங்களும், சடங்குகளும், புராணங்களும் , பல்வேறு நில அமைப்பு மக்களின் வாழ்க்கை முறை வழியே துலங்கி வந்து ஒன்று கலப்பதை காண்கிறோம். விதுர நீதி துவங்கி, பீஷ்மரின் ராஜரீகம் தொடர்ந்து, கிருஷ்ணனின் கீதை முடிய வண்ணமயமான பார்வைகள் மோதி முயங்கி, நதிகள் கூடி உருவாகும் கடல் போல இருக்கிறது வெண் முரசு.
இனிய ஜெயம் 'இந்திய பண்பாட்டை மீள எழுதுகிறேன்' என்று சொன்னீர்கள். பேராண்மை கொண்ட படைப்பாளுமையின் சிம்ம கர்ஜனை இச் சொல். ஆம் முதற்க் கனல். எது இது வரையிலான இந்தியப் பண்பாடோ அதேதான். எது இனியும் இந்தியப் பண்பாட்டின் பன்மையை தக்கவைக்குமோ அதேதான்.
இந்தக் கடலை குடித்து முடித்துவிட பேராசை, கையிலோ சிறு தோண்டி. பார்ப்போம்.
இவன் மனிதனிலும் சேராதவன், அரக்கனிலும் சேராதவன் என காட்ட்டாளர்களால் கணிக்கப் படுகிறான் கடோத்கஜன். ஆனால் அவன் மனிதர்களை மிஞ்சியவனாக, காட்டாளர்களில் இணையற்ற சிறந்தவனாக மிளிர்கிறான்.
பீமன் மயங்கி சரிவது, அந்த எருமையின் இடத்தில் அவனைப் பொறுத்திப் பார்ப்பதால் தான். ஆகையால்தான் மீண்டதும் கடோத்கஜனுடன் போர் புரிய விழைகிறான். மடியில் அமர்ந்து மழலை மொழியும் கடோத்கஜனிடம் தோற்க விழையும் பீமன், வனத்தின் தலைவனாகும் மகிஷமர்தனை வெல்ல விழைகிறான்.
வெண் முரசு வரிசையில் பிரயாகை மிக அதிக நிகழ்ச்சி களுடன், அதி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது, துருவனின் கதை இப்போது எதோ தூரத்து எதிரொலி போல தோன்றுகிறது.
கடலூர் சீனு