Thursday, December 25, 2014

பிரயாகை-58-துருவ தரிசனம்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இரவு தனிமையில் படுக்கையை  தலைகவிழ்ந்து பார்த்துக்கொண்டு இருட்டில் அமர்ந்திருந்த விதுரர் காலையில் மனைவி சுருதையை பின்னால் அனைத்து பின் கழுத்தில் முத்தமிடுகின்றார். வாழ்க்கை அவ்வளவுதான் என்பதா? ஆண் அவ்வளவுதான் என்பதா? அவ்வளவுதான் ஆண் என்றால் அதுதான் வாழ்க்கை. அப்படி ஆண் இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை.

நிழலின் அருமை வெயிலில் என்பார்கள். நிழலே கிடைக்காத வெயில் வரும் என்றால் அந்த நிழலின் அருமையை யார் தரமுடியும். மனம் மட்டும் அல்லவா அறியமுடியும். சுருதை என்னும் நிழலின் பதிலின் வழிவரும் அருமை. வாழ்வின் மெல்லிய சுவர்களில் அறைந்து அதிரச்செய்கிறது. //சினமா?” என்று சுருதைகேட்டாள். “ஆம்” என்றார் விதுரர். “இதற்கு நான் என்ன சொல்வது?நான் இறந்தபின்னர்தான் அதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்என்று அவள் இடறியகுரலில் சொன்னாள்//

நிழல் கிடைக்கும் வெயிலே தம்பதியரின் வாழ்க்கையில் இருக்கட்டும். இதைத்தான் வள்ளுவன் ஊடலுக்கு பின் கூடல் என்கின்றான்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்,
கூடி முயங்கப் பெறின்-திருக்குறள்.

துறவிக்கும் சம்சாரிக்கும் இடையில் எவ்வளவு தூரம் என்று நினைத்துப்பார்த்தேன், மனைவியின் வாசம் இருக்கும் தூரம்.

விடிஞ்சா விதுரன் துறவியாகிவிடுவான் என்று நினைத்தேன். காரணம் பெண் ஆணுக்கு துறவின் எல்லையை காட்டிக்காட்டி தாண்டிப்போகமலும் கட்டிவைக்கிறாள். இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்றும் நம்ப வைக்கிறாள். நான் செத்தா தெரியும் என்று பயமுறித்தியும் வைக்கிறாள்.

ஒரு அம்மா காட்டில் உண்மையை கதை கதையாய்  சொல்கிறாள். ஒரு மனைவி வீட்டில் கதையை உண்மையை உண்மையாய் செய்கிறாள். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் மாட்டிக்கொண்ட மத்தென்னும் ஆண் வாழ்க!

ருசியில் விழிந்து கொந்தளிக்கும் விதுரன் துருவ தரிசனத்திற்குபின் நீதியின் வழியில் திரும்பி வரும் படைப்பு அற்புதம் ஜெ.

//(துருவனை)அவனை மையமாக்கியே வானமும் பூமியும்இயங்குகின்றனஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில்அமர்ந்திருக்கிறான்யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனைபார்த்தாகவேண்டும்கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும்அவனைப் பார்க்கவேண்டும்படைக்கலமேந்திய வீரன்ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.”-பிரயாகை-5//

இந்த வரிகளை இன்று நினைத்துக்கொள்ளும்போது பேரானந்தம் ஏற்படுகின்றது. அசைந்துக்கொண்டே இருக்கும் மனம் ஏதோ ஒரு அசைவின்மையையில் தன்னை கட்டிக்கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை, ஈர்ப்பு விசையைவிட்டு விடுபட்ட கோல்போல அண்டவெளியில் வழிதப்பி சென்றுவிடும்.

பெரும் மனசஞ்சலத்திற்கு பிறகு துருவனை கண்ட விதுரன் அதை நீலவிண்மீனாக கண்டதும் ஆழ்மனத்தில் இருக்கும் சுருதை அதைக்கண்டு விலகிவிடுங்கள், வந்துவிடுங்கள் என்றபோது விதுரன் சுருதையை உணர்ந்து இருப்பான். காலையில் எழுந்தபோது அவளை அனைத்துக்கொள்ளவேண்டும் என்றும், என்றும் தன்னை குழந்தையாக உணரவேண்டும் என்றும் அறிந்து இருப்பான். அதுதான் சரியான உண்மையும் கூட. நடமுறை வாழ்க்கைக்கு அதுதான் வழியாகவும் இருக்கும்.

//விதுரர் அவள் கழுத்தில் முகம் சேர்த்து “அன்னையாகவே இருசுருதைசிலசமயம்…” என்றார். “ம்?” என்றாள் சுருதை. “சிறுமையும்கீழ்மையும் கொண்ட ஒருவனாகவே என்னை நீ அறிய நேரும்.அப்போதும் அன்னையாகவே இரு!” அவள் மெல்ல சிரித்து அவர்தலையை வருடி “என்ன பேச்சு இது?” என்றாள்சிலகணங்கள்இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தபடி இருந்தனர்//-மானிட வாழ்க்கை மாறா பாவனையும், இளகா கட்டமைப்பும் கொண்டது இல்லை. அப்படி இருந்தால் அது ஜடமாகவிடும் என்பதை காட்டும் இடங்களால் இந்த பகுதி அழகு பெருகின்றது. மீண்டும் வாழ்க்கை சுவையும், அர்த்தமும் கொண்டதாவது அதன் மாறும் தருணங்களால்தான். நதியின் ஓட்டமும், கடலின் அலைகளும்தான் அழகு.  

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களில் விழுந்து எழுந்து சென்றாலும் எனக்கு அச்சமில்லை, இது எனக்கு பிடித்தமானதே என்பதில் இருக்கும் அந்த அழுத்தம்தான் விதுரன் கண்ணனோடு கொண்டுள்ள பிணைப்பின் மூலத்தையும் அவனின் முழுமையின் அசைவின்மையையும் காட்டுகின்றது. துருவனை நீலமாக தரிசித்த விதுரனுக்கு வணக்கம். 

ஆடும் கங்கையும், அசையா துருவனும் படிமமாகி விதுரனில் இணையும் பிரயாகை-58.

நன்றி
வாழ்க வளமுடன்
ராமராஜன் மாணிக்கவேல்.