Monday, December 29, 2014

பிரேமையின் உடல்



ஜெ

நீலத்தை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இந்த நாநூறுபக்க நூலை நான் இரண்டு மாதமாக தினமும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதைப்போல முழுமையான பித்து நிறைந்த ஒரு ‘பித்தகத்தை’ நான் இதுவரைக்கும் வாசித்ததில்லை. கட்டுப்பாடில்லாமல் செல்லும் கற்பனையை ஒரு வடிவத்திர்குள் கொண்டுவந்ததனால்தான் இதை வாசிக்கவே முடிகிறது.

ராதை இங்கே பிரேமையாக இருக்கிறாள். இந்தப்பிரேமைதான் கிருஷ்ணனை உருவாக்கி எடுத்திருக்கிறது. ராதை என்ற பிரேமை ஏன் மனித மனதிலே உருவாகியது. அது செயற்கையானது அல்ல. அது பிரகிருதியிலே இருக்கிற ஒரு பாவம் . ஆனால் நிரந்தரமானது இல்லை. கொஞ்சநாள் கொஞ்சநேரம் மட்டுமே இருந்து மறைகிறது

அந்த பிரேமபாவத்தை நிரந்தரமான ஒரு நிலையாக ஆக்கிவிடமுடியுமா என்று பார்க்கிறார்கள் மனிதர்கள். அந்த முயற்சியில் இருந்துதான் இந்த ராதா பாவம் உருவாகி வருகிறது

ராதை என்றாள் ஆராதிப்பவள் என்ற அர்த்தம் எனக்கு ரொம்ப புதிசு. நினைக்க நினைக்க நெஞ்சை உருவக வைக்கும் நிலை அது. ராதாபாவத்தை அடைய மனசு நெகிழ வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு இது. எனது குரு சொல்வார். பெண் என்பதே பக்தனின் நிலை. அதுதான் தனக்குள் இன்னொன்றை உள்ளே விடுகிறது. தனக்குள் இன்னொன்று உருவாகவும் சம்மதிக்கிறது. அந்த இயல்பு ஆணுக்கு இல்லை என்று

அந்த மனநிலையே ராதையாக ஆகிவிடுகிறது என்று நினைக்கிறேன். இதை இன்னொருமுறை வாய்விட்டு வாசித்தாகவேண்டும்

மணவாளன்