Wednesday, December 24, 2014

அறிவின் முழுமை



அன்புள்ள ஜெ,

அர்ஜுனன் தேகமுத்ராதரங்கிணியில் உள்ள ஒரு பாடல், "உடலசைவுகளை நம் சித்தத்தால் அறிந்துகொள்ளக் கூடாது. நம் சித்தத்தின் அச்சம், விருப்பம், ஐயம் ஆகியவற்றை நாம் அந்த அசைவுகள் மேல் ஏற்றி புரிந்துகொள்வோம். பிற உடலின் அசைவுகளை நம் அகம் காண்கையில் முற்றிலும் சித்தத்தை அகற்றுவதையே இந்நூல் கற்பிக்கிறது. சித்தமில்லா நிலையில் நாம் அவர்களின் உடலை உள்ளமெனவே அறிகிறோம். மானுட உடலை மானுட உடல் அறியமுடியும். ஏனென்றால் மண்ணிலுள்ள மானுட உடல்களெல்லாம் ஒன்றோடொன்று இணைந்து ஒற்றைப்பிண்டமாகவே இங்கே இயங்குகின்றன" என்று சொல்வதாக கூறுகிறான். இதை அந்த சாலிஹோத்ர குருகுலம் ஆயிரமாண்டுகளாகப் பயின்று வந்திருக்கின்றனர் என்றும் சொல்கிறான்.

அங்கு கடோத்கஜன் தன் தந்தையிடம் அவன் ஏன் அகச்சோர்வடைந்தான் என்பதைப் புரிந்துகொண்டதாகக் கூறுகிறான். "ஆம், அப்பாலிருந்து என்னை நோக்கினீர்கள். ஒருகணம் தங்கள் உடல் என்னை நோக்கித் திரும்பியது. என்னைத் தாக்க வரப்போகிறீர்கள் என எண்ணினேன். திரும்பிச் சென்றுவிட்டீர்கள். அதன் பின் நான் சிந்தித்தேன். உங்கள் உணர்வை அறிந்தேன்." மேலும் "தந்தையே, நீங்கள் என் உடலைக் கண்டு உள்ளூர அஞ்சினீர்கள். நான் உங்கள் குலத்து மானுடரைவிட இருமடங்கு பெரியவனாவேன் என்று உங்கள் உடன்பிறந்தாரை காண்கையில் உணர்கிறேன். எங்கள் மொழியில் சொற்கள் குறைவு என்பதனால் நாங்கள் எதையும் மறைக்கமுடியாது. ஆகவே அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் எங்களால் முடியும்…", என்று பீமனை அவனுக்கே அடையாளம் காட்டுகிறான்.

மானுட உடல்கள் எல்லாம் ஒற்றைப் பிண்டமாகவே இயங்குகின்றன என்பது நம் நவீன உளவியலின் கூட்டு நனவிலி தானே. அங்கே மறுநாள் கிளம்ப வேண்டும் என்று குந்தி எடுத்த முடிவு பருவடிவில் அல்லாது மனக்கிலேசமாக விராட வடிவில் பீமனின் உடலசைவில் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆம். அந்த சூரிய அஸ்தமனம் மிகவும் துயரம் நிரம்பியதாகவே அவர்கள் அனைவருக்கும் தெரிகின்றது. பீமன் பிரியப் போகிறான் என்பதை அந்த சூரியன் அணையுமிடத்தில் இடும்பியும், கடோத்கஜனும் அதனால் தான் புரிந்து கொண்டார்கள்!! கர்ணனைக் கொல்லலாகாது என்று பீமன் சொல்வதன் காரணத்தைக் கூட உடனடியாக புரிந்து கொள்கிறான் கடோத்கஜன். 

இங்கே ஆயிரம் ஆண்டுகளாகப் பயின்று பயிற்சி செய்து அடைவதை அவர்கள்  இயல்பிலேயே அடைந்திருக்கிறார்கள். மெய்யசைவிலேயே உள்ளத்தை ஊடுருவிப் பார்த்து விடுகிறார்கள். அவர்களும் அவர்கள் குலமும் காட்டில் இயற்கையோடு இணைந்திருப்பதால் இது சாத்தியமாயிற்றா? அவர்கள் இயற்கையில் இருந்து விலகினால் அவர்களுக்கு அழிவு எஞ்சும் என்பதைத் தான் தன் குடியை விட்டு மாறுவேடங்களில் தன் காட்டை விட்டு சென்று வரும் இடும்பனின் மரணம் உணர்த்துகிறதோ?! 

இரண்டு பத்திகளில் கடந்து செல்லப்படும் இடும்பியின் கதையை ஓர் தனிக் குறுநாவலாகவே படைத்திருக்கிறீர்கள் ஜெ. தனித் திரைப்படமாகவே எடுக்கலாம். இப்பகுதி முழுமையும் இனிமை மட்டுமே நிரம்பியிருக்கிறது. இடும்பனின் மரணம் கூட இடும்பியை பாதிக்கவில்லை. நடுகல் நாட்டப் பட்ட உடனேயே தமையன் நம்மை ஏற்றுக் கொண்டார் என்று மகிழ்வோடு சொல்கிறாள். மரணத்தைப் பற்றிய அச்சம் விலகியவர்கள் தான் எத்தனை பாக்கியவான்கள்!!! அவர்களாலும் பிரிவை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடிவதில்லை என்னும் போது காதல் செய்யும் மாயம் தான் என்ன?? 

பாண்டவர்களிலேயே நிறை வாழ்வை சிறிதேனும் வாழ்ந்தவன் பீமன் மட்டும் தான் போல!!! அங்கு கூட அவன் நஞ்சை இழக்க முடியவில்லை என்று வருந்துவது மிகச் சரி. அது பீமனுக்கு பேரிழப்பு தான். முழுமையாக கடந்து செல்லப்படாத எதுவும் நஞ்சாகத் தான் எஞ்சும் என்பது எவ்வளவு பெரிய தரிசனம். முழுமையான அழிவோ அல்லது மனப்பூர்வமான மன்னிப்போ மட்டும் தான் தீர்வு என்றல்லவா வருகிறது!!! பீமன் மட்டுமல்ல, நஞ்சு ஊறிப் போன மனங்களால் அல்லவா பாரதப் போரே நடக்கப் போகிறது. இன்றைக்கும் நஞ்சு ஊறிய மனங்களால் தானே குடும்பங்களிலும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. எவ்வளவு எளிமையாக மண்டையன் சொல்லிவிடுகிறான். அதனால் தான் குந்தி, அவனை பிறவியிலேயே பேரறிஞன் என்று சொல்கிறாள். மேலும் அவனை எந்த குருகுலத்திலும் சேர்ந்து படிக்கவேண்டாம் என்று அறிவுறுத்துகிறாள்.

இங்கு இவ்வுலகில் நாம் கற்றுக் கொள்ளும் அனைத்தும், நம் சித்தத்தைத் துறப்பதற்காகத் தானா? மீண்டும் சொல்லிலழந்து, நம்மைப் படைத்த பேரியற்கையுடன் இணைவதற்குத் தானா? நாம் அறிவதெல்லாம் அறிந்தவற்றைத் துறக்கத்தானா? இதைத் தான் வெண்முரசின் துவக்கத்திலிருந்தே சொல்லி வருகிறீர்களா? பீஷ்மர் விசித்திர வீரியனிடம், "நூல்கள் அறத்தை சொல்கின்றன என்பது பொய். அறத்தை வளைப்பதையே சொல்கின்றன.", என்று சொல்வதும் அவர் இந்த உண்மையை அறிந்து விட்டார் என்பதால் தானா? எளிமையான குழந்தை சாகசக் கதை தான் இப்பகுதி. ஆனால் எவ்வளவு அர்த்தங்கள் அதில்!!! 

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்