Friday, December 26, 2014

பாவம் பீமன்



இனிய ஜெயம்,

சில தினங்கள் முன்பு ஒரு துண்டுக் கட்சி கண்டேன். கண்டு கடந்து செல்லும் ஒரு கோடி பிம்பத் துனுகுகளில் ஒன்றுதான் அதுவும் என எண்ணி இருந்தேன்.  ஆனால் அக் காட்சி  கொஞ்சம் கொஞ்சமாக  உள்ளே கிடந்தது உறுத்தத் துவங்கி, பாத தசைக்குள் சென்று புதைந்த மணல் துகள்  கொஞ்சம் கொஞ்சமாக கால் ஆணியாக மாறி, ஒவ்வொரு எட்டு வைப்பையும் வலியின் தந்தி மீட்டலாக மாற்றுவது போல  அக் காட்சி  ஒவ்வொரு கணமும்  ப்ரக்ன்ஜையை கூர் ஆணி போல மோதிக் கொண்டே இருந்தது.

யாரோ இருவரை  அண்டை எல்லை வனக் காவலர்கள்  நிர்வாணமாக்கி சுற்றி நின்று  லத்திகளால் தாக்குகிறார்கள்.   கையில் லத்திக்கு பதில்  வீட்டு தண்ணீர்க் குழாய் பைப். லத்தி அளவே.  அதனால் அடி வாங்கிப் பார்த்தால் புரியும்.  கழி வந்து மோதும் இடம் உடல் நரம்புகள் கிழிவது போல இழுபட்டு , அடி விழும் தசை  பழுக்க காய்ந்த இரும்பால் அழுத்தப் பட்டது போல உணர்ந்து...  உடலின் ஒவ்வொரு அணுவும் தங்களை வலியாக மட்டுமே முன்வைக்கும். 

ஒருவனை சுற்றி நின்று தாக்குகிறார்கள். அவன் ஒற்றைக் காலில் நின்று   வலியின் சாட்டை சொடுக்கலில் பம்பரம் போல சுற்றுகிறான்.  ஆ ஐயோ  எனும் கூச்சலுக்கு மேலே அவன் அதிகம் கதறிய சொல் அம்மா. அம்மா அம்மா அம்மா  வலியில் பிரக்ஞ்சயின் கட்டுக்கள் அனைத்தும் தளர்ந்தபின்னும்  எஞ்சும் ஒரே சொல்.  மண் புதையும் வயது கண்ட  உடலும்  வலி மீறுகையில் தேடும் மடி அம்மா. பிறந்து விழி திறக்கையில் காணும் முதல் முகம் அம்மா.  அமுதம் என   அகம் உணரும் உயிர்ப் பசி தீர்க்கும் முலைக்கருணை  அம்மா. அம்மா அம்மா. அவர்களை அடிப்பவர்களில் ஒருவன்  அடித்தபடியே  கைகளை நீட்ட சொல்லி கூவுகிறான். அடி வாங்குபவன் தாழ இயலா வேதனயிலும் கைகளை நீட்டுகிறான்.  யாசகம் கேட்பது போல ஏந்திய கைகளில் விழுகிறது பிரம்படி.  

 இக் கணம் ஏனோ எனக்குள்  மிகுந்த வலியை விதைத்தது.  அடி மேல் அடி வைத்து ஒரு மனிதனை மிருகம் போல 'கீழ் படிய' செய்த அந்த நிலை. என் சித்தத்தை உலைந்து பறக்க வைத்து விட்டது.  ஒரு மனிதன் வீழும்போது தோற்பதில்லை. கீழ்படியும்போதே தோற்கிறான். வலி மனிதனை மண்டி இட செய்து மிருகம் போல கீழ் படிய செய்யும்.  இந்த நிலை  சொல்லவே இயலாத உறுத்தலாக எனக்குள்  வளர்ந்து கொண்டே இருந்தது,.. அல்லது பிரமையா? எதிலும் மனம் தரிக்கவில்லை.எங்கேனும் இரு நாட்கள் செல்லலாம்  எனத் தோன்றியது. ஸ்ரீவில்லிபுத்தூர்  வரலாம் என்ற யோசனை திருவண்ணா மலை பேருந்தைப் பார்த்ததும் மாறியது.

சென்று இறங்கிய போது   மொத்த கோவிலும்  பஞ்சுப் பொதிக்குள் பொதிந்த  தந்த சிலை  போல  பிரும்மாண்ட பனிமெத்தைக்குள் புதைந்திருந்தது. காலை வெயில் உயர  உயர  நீருக்குள் இருந்து எழும் வெள்ளை யானை போல ராஜ கோபுரம்  உயர்ந்து உயர்ந்து வந்தது. மேகமே வடிவம் கொண்டு  மண்ணில் கால் ஊன்றியது போலொரு தோற்றம். உள்ளே சென்றேன். ஐயப்ப கோவில் பத்த சிரோன்மணிகள்  இத்தனை பெரிய கோவிலை  பிரும்மாண்ட குப்பை தொட்டியாக்கி வைத்திருக்கிறார்கள். தன்னார்வலர்கள்  அதை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். சுற்றி வந்தேன் ஏன் ஏன்  எனக்கு என்ன தேவை என்ன தேடுகிறேன்? தெரிய வில்லை

. சுற்றி சுற்றி வந்து விட்டு வெளியேறினேன். கால்கள் தன்னிச்சையாக ரமணர் ஆசிரமம் நோக்கி  நகர்ந்தது.  வழியில் எதோ அமைப்பு அன்ன தானம்  செய்துகொண்டிருந்தது. கண்டதும் பசித்தது. அதற்குள் மதியம் வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு  ஆசிரமம் சென்றேன்.  வழமை போல  ஆசிரமத்தின் பின் வழியே  விருபாட்ச குகை  நோக்கிய பாதையில் மலை ஏறத் துவங்கினேன். வழியில் ஒரு சிறு இடைவழி கண்டு சிறு நீர்  கழிக்க ஒதுங்கினேன்.  புதர்கள் மண்டிய பாதையின் முடிவில் எதோ ஒரு அரவம். பொதுவாக அங்கே ஏதேனும் முள்ளம் பன்றி  காணக் கிடைக்கும். ஓசை இன்றி  பதுங்கி சென்று பார்த்தேன்.  ஒரு யுவனும் யுவதியும்  அரை நிர்வாணம் கொண்டு பின்னணிப் பிணைந்து பரஸ்பரம் உடலால் உரையாடிக் கொண்டிருந்தனர்.  இனிய ஜெயம், அக் கணம் அக் காட்சி அளித்த உவகை சொல்லில் எழுத முடியாது.  ஒரு பெண் ஒரு ஆணுக்கு அளிக்கக் கூடிய ஆகச் சிறந்த பரிசு அவளது உடல்தானே. ஒரு ஆண் பெண்ணுக்கு அளிக்கக் கூடிய ஆகச் சிறந்த பரிசு அவளது உடலின் இன்ப சாத்தியங்களை அவளுக்கு அறிமுகம் செய்வதுதானே.

ஓசை இன்றி பின் வாங்கி  மீண்டும் மலை ஏறினேன்.  பாதை இரு புறமும் நட்டு வளர்க்கப் பட்ட செயற்கை வனம். ஆரஞ்சு வண்ண பட்டுப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. மேலிருந்து அருவியாக கீழிறங்கிய குளிர் காற்றில் பனியின் தூவல். இடதுபுறமாக பாதை வெட்டி திரும்பிய ஒரு புள்ளியில் வெற்றுத் திடல் என பெரிய பாறை.  ஏறி நின்றேன்.  குளிர் வெண்மையால் போர்த்தப்பட்ட நகரம். மையத்தில் மௌன வெண்மையாக விரிந்து கிடந்தது அண்ணா மலையார்  கோவில். என் முப்பாட்டன் நியண்டர்தால் மனிதனுடன் சேர்ந்து என் பின் நின்று அவனும் கீழே நோக்கிக் கொண்டிருக்கிறான்.  கிடை கல் மேல் நிறுத்தி வைக்கப்பட்ட நடுகல்.  அர்ணகிரி நாதர்  தன் தமிழால்  அர்ச்சித்த ஆவுடை. ரமணர் வந்து வணங்கி நின்ற திரு உரு.  ஒரு கணம் அக் கலவிக் காட்சியின் ஒரு துணுக்கு  மனதில் வந்து மறைந்தது. முலை உண்ணும் குழவியின் கால் விரல்கள் சுருங்கி மலர்வது போல அவளது கால் விரல்களும் சுருங்கி மலர்ந்தது.  

பல்லாண்டு கழித்து  நாளையும் ஒரு மனம் இங்கு இப்படி நின்று  அந்த உருவை நோக்கி இருக்கும்.  எதோ ஒரு பறவையின் கூவல். மனம் முற்றிலும் இலகு அடைந்திருந்தது. இன்னும் மலை ஏறினேன். ரமணர் தவம் செய்த குகை.  அருகே சலசலக்கும் சிற்றருவி.  மலையின் ஊற்று நீர்.  சாரல் தெறிக்கா வண்ணம்  காம்பௌண்டு சுவர் கட்டி அதை குடிநீர்  குழாய் போல மாற்றி இருந்தார்கள்.  குகைக்குள் ரமணர் படம் முன்னே சிறு சுடர். அருணா அசலம்  மேலே ஒரு குகைக்குள் சிறு சுடர். ஆம் மனிதன் அதுவே.  ரமணர் தனக்கு ரண சிகிச்சை நிகழ்த்தும் போது மயக்க மருந்தை ஏற்றுக் கொள்ள வில்லை. ரணத்தை ஆயுதம் கொண்டு சுத்தம் செய்கையில்  அவர் முகம் சிறு வாட்டமும் கொள்ள வில்லை. ஆம் ஜெயம் அப்போது புரிந்தது  அடி வாங்கி ஊளை இடுபவன் மட்டுமே மனிதன் அல்ல. இதோ இங்கு  ரமணராக  த்யானம் கொண்டிருக்கிறது  மனிதனின் ஆகச் சிறந்த சாத்தியம்.  இனிய ஜெயம்  மானுடம் ஒரு முடிவிலி. இந்த காலம் அளவே முடிவிலி.

ஆஸ்ரம வாயிலில் உறங்கி விழித்து, காலை எதிர் கடையில் தேநீர் அருந்துகையில் ஆச்சர்யம் என் தம்பி வந்திருந்தான். நானும் அவனும் வேறு வேறல்ல அதற்க்கு மேல் அவனை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.  மீண்டும் ஆஸ்ரமம்.  பேக் பைப்பர் கதா பாத்திரம்  உயிர் கொண்டது போல ஒரு வெள்ளையர் நின்றிருந்தார்.  பறவைகள் அடி வயிற்றை உரசும் அபார உயரம். அரக்கு வண்ண பேகி பாண்ட். ஆரஞ்சு வண்ண சட்டை. அரக்கு வண்ண கை இல்லாத மேல் கோட். காப்பிக் கோட்டை வண்ண குறுந்தாடி. முறுக்கு மீசை. வான் நீலக் கண்கள். அரக்கு வண்ண தொப்பி. அதில் ஒரு மயில் பீலி. காலரில் ஒரு பக்கிள் அமைத்து அதில் கரு நீல வண்ண, தங்க கோடுகள் போட்ட புல்லாங் குழலை செருகி இருந்தார். புதிதாக அமைந்த வட்ட வடிவ கண்ணாடி தியான அரங்கை தீர்க்கமாக உற்று நோக்கியவாறு நின்றிருந்தார்.  

மீண்டும் கோவிலை சுற்றி வந்தோம். என்பது கடந்த ஜடாமுடி சாமியார் ஒருவர் கையில் யோக தண்டம், கமண்டலத்துடன்  வெள்ளையர் ஒருவர் அவரது கேமராவை நகர்த்தும் கோணங்கள் அனைத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். காந்த முள் போல. வெளி வந்து கிரி வலம் போனோம்.  வழியில் மாக் கல்லில் சிற்பம் செய்து விற்கும்  நிறைய கடைகள். ஒருவர் அந்த நொடியே சிற்றுளி கொண்டு கையால் தட்டி தட்டியே புத்தரின் முகம் ஒன்றை வடித்துக் காட்டினார்  தியான பாவம்  துல்லியமாக  வந்திருந்தது.  அவரிடம் பேசினோம். இப்படி இங்கு பல குடும்பங்கள். ஒரு நாள் நூறு ரூபாய் வருமானம் பார்த்தால் அதுவே பெரிது என்றார். சாலை ஓரம் கலைஞர்கள். இவர் கலைஞன் எனும் நினைவே எதோ செய்தது.

கிரி வலப் பாதையில் புதிது புதிதாக  கோவில்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.. பிரும்மாண்ட சிலைகள். எல்லாம் சினிமா செட்டுகள் போல படு கேவலமாக .. சிவ சித்தர் தான் கட்டும் கோவிலுக்கு  இரண்டு கோடி கேட்டு பக்தர்களை அறைகூவி தந்து செல் நம்பரை டிஜிடல் பேனர் அமைத்திருந்தார்.  நித்யானநந்தருக்கு  ஐமாக்ஸ் திரை அளவு டிஜிடல் பாணர்.  கோவில்கள், அன்னதானங்கள், சிவ மந்திரங்கள் , காவி வரிசைகள், தம்பி விசனத்துடன்   ''இது மதச் சார்பற்ற தேசமான்னே சந்தேகமா இருக்கு. எல்லாம் வெறும் காவியா கிடக்கே, அங்கன அங்கன கொஞ்சம், சர்ச்சு, மசூதி இதெல்லாம் இருந்து ஏதாவது பண்டிகை விசேஷம்நா, நாலு பயக்க வெட்டிகிட்டு செத்தாதான்  அது இந்தியா. இங்கன சிறு பான்மையினர்  ஒடுக்கப் படுற மாதிரி தெரியுது. மனுஷ்ய புத்திரன் கிட்ட சொல்லி நல்லா 'வைய' சொல்லு'' என்றான்.

இரவு சாய  மசால்வடை வாங்கி தின்றபடி சாலை ஓர காவி யாசகர் ஒரவர் வசம் பேசிக் கொண்டிருந்தோம். நட்பு இறுகியது. பொதுவாக ஆண்கள் வசம் அவர்கள் வருமானத்தை விசாரிக்கக் கூடாது என்பார்கள். நட்பின் பலத்தில்  ஐயாவுக்கு இன்னைக்கு வசூல் என்ன என வினவினோம். எங்க தம்பி ஆள் வரத்து கம்மி என்று சொல்லி விட்டு காசுகளை எண்ணினார். இருநூற்று ஏழு ரூபாய்.  சிற்பியின் கை புத்தரின் சிலை நினைவுக்கு வந்தது.

இடையில் வனத்துறை பலகையில்  அருவி இங்கு என்ற அறிவிப்பு கண்டு  திருவண்ணமலை என்னும் பாலை நிலத்தில் அருவி தேடி நடந்தோம். அருவி என பெயர் கண்ட இடத்தில் மொட்டை பாறை சில உயர்ந்து நின்றது. யானையின் கண்ணீர் போல  ஒரு நீர் ஒழுக்கு. அடப் போங்கடா என திரும்பிநோம்.

வேதாளம் போல இந்த வெண் முரசு விடாது போல அருவியின் பெயர் பீமன் அருவி. வெண் முரசில் சீடர்கள் வசம் துரோணர் சொல்வது போல ஒரு வரி வருகிறது 'நான் எதுவோ, அதுவாக உணர்வது இந்த அஸ்தினாபுரியில் மட்டும் தான்'  அது போல பீமன் அடிப்படயில் யாரோ அதை இடும்ப வனத்தில்தான் அவன் மீட்டுக் கொள்கிறான். மகனை மடியில் ஏந்தும்போது சொல்லிக் கொள்கிறான். நான் உன்னிடம் மட்டுமே தோற்பேன். பீமனின் அகங்காரத்தின் முதல் சரணாகதி அங்கே நிகழ்ந்து விடுகிறது.  தந்தையை முடிவின்றி மன்னித்துக் கொண்டிரு என மகன் வசம் கலங்குகிறான். ஆம் கடோத்கஜன் சிறுமை தீண்டாதவன். வாழ்நாளெல்லாம் நஞ்சை மட்டுமே கண்ட பீமன், இடும்பியின் முலைகளிலும், மகனின் கண்களிலும் அமுதத்தைக் காண்கிறான்.  இனியன் அத்யாத்தில்  பீமனுக்கும் கடோத்கஜனுக்கும் இடையில் நடக்கும் இறுதி உரையாடல் அதிக கூர்மை வாய்ந்தது.

முதலில் பீமன் கர்ணனை கொல்லக்கூடாது என்கிறான். கடோத்கஜன் தங்கள் ஆணை என்கிறான். அடுத்து பீமன்  கர்ணனால் தான் கொல்லப் பட்டால் அதன் பொருட்டு நீ வஞ்சம் தீர்க்க வேண்டும்' என்கிறான் இப்போதும் பீமன் கொல்ல வேண்டும் என சொல்ல வில்லை. கடோத்கஜன் சொல்கிறான் 'கர்ணனை வெல்வேன்' அவனும் கொல்வேன் என சொல்ல வில்லை. என்ன ஒரு இடம். கர்ணனால் தன் மகன் கொல்லப் படுவான் என  பீமனின் மனதில் துளி சஞ்சலம் கூட இல்லை. மகனின் பலம் மேல் அப்படி சந்தேகமே இல்லாத ஒரு நம்பிக்கை.

கடோத்கஜன் வனத்திருக்குள் சென்று மறைகையில் விக்கித்து விட்டது. தாய் வசமிருந்து குட்டியைப் பிரிப்பது பாவம். குட்டி வசமிருந்து தந்தையைப் பிரிப்பது பெரும் பாவம். குந்தி அதைதான் செய்கிறாள். குந்திக்கு பீமன் செய்த வாழ்நாள் தியாகம் இது.  கடோத்கஜன் மரணத்துக்குப் பிறகு பீமன் தன் கதையால் தட்டி எரியும் எந்தத் தலைகளும் இதன் பொருட்டு நியாமே. 

பாவம் பீமன்.  

கடலூர் சீனு