Monday, December 15, 2014

பிரயாகை-46-உலகத்து இயற்கை.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒன்று வாழவேண்டுமா சாகவேண்டுமா என்பதை யார் முடிவு செய்வது? அதை நாம் என்னவென்று சொல்வோம்? இயற்கையா? இறைவனா?

இயற்கை என்றால் இயற்கையும் இயற்கை அழிய பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இறைவன் என்றால் வாழும்போதும் இறக்கும்போதும் அது எங்கே இருக்கிறது?. பிரயாகை-46 இப்படி எல்லாம் கேள்விக்கேட்க வைத்தாலும் நான் எந்த கேள்வியையும் கேட்கவிரும்பவில்லை.

நம்பு..நம்பிக்கேயே இறைவன் என்ற பெரியோர்களின் சொற்களை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு ஒன்று வாழவேண்டும் என்றோ சாகவேண்டும் என்றோ இறைவனே முடிவெடுக்கிறான் என்று நம்பிவிடுகின்றேன்.

நதி, வேர் இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுக்கும் முட்டிக்கொள்ளும் இடம்  இயற்கையாகவே உருவாகிறது அல்லது அவற்றின் பாதையிலேயே இருக்கிறது. நதியும், வேரும் அதற்காக வருந்துவதில்லை அங்கிருந்தே தனது புதிய பாதையை அவைகள் உருவாக்கிக்கொள்கின்றன. நதியும் வேரும் முழுவதும் பெண்களுக்கு பொருந்தும். குறிப்பாக குந்திக்கு பொருந்துகின்றது.  தான் முட்டிக்கொண்ட வாரணவதம் அரண்மனையில் இருந்து அவள் திசைமாற்றம் கொள்ளும் இடம். அற்புதம். நான்கு முட்டை இட்ட சிறுகுருவிக்கு வஜ்ரமுகி என்னும் பெயர் எவ்வளவு அழகாக பொருந்துகின்றது. இனிமேல் குகைக்குள் இருளில் இருந்தாள் அவள் அழமாட்டாள் என்று அர்ஜுனன் எண்ணுவது பெரும் உளவியல் தரிசனம்.

வஜ்ரமுகி சிறுகுருவி துரத்த துரத்த அந்த அறைக்கு ஒடிவருவது அறையின்மீது கொண்ட ஆசையால் இல்லை தனது முட்டைகளுக்காக, அதன் முட்டையோடு அது இருக்கையில் அதன் சிறுகூடே அதற்கு பெரும் பேரரசுதான். அந்த கூட்டில் இருக்கும் தனது முட்டைகள் பொரித்து அதன் குஞ்சுகளோடு அது பெரும் படையாக வரலாம்.

சகுனி, கணிகன் போன்ற சதியாளர்களின் பேரறிவு. புரோசனனின் பெரும் செயல் திட்டம் இவற்றில் சிக்கிக்கொள்ளும் முட்டையிட்ட சிறுகுருவிக்கு சாவது ஒன்றுதான் வழியா?      

நான் முன்பே கேட்ட ஒன்று வாழவேண்டுமா சாகவேண்டுமா என்பதை யார் முடிவு செய்வது? அதை நாம் என்னவென்று சொல்வோம்? இயற்கையா? இறைவனா?  இந்த கேள்வி இப்போதுதான் எழுகின்றது.

விதுரர் போன்ற நுண்ணறிவு ஞானிகள் புதிர்களை உருவாக்கிவிடுகின்றார்கள். புதிர்களும் இன்னொரு புதிராகிவிடுகின்றது அதனாலேயே உண்மை உணரமுடியாமலும் போய்விடுகின்றது. குந்திமுதல்,  பாண்டவர்கள்வரை அனைவரும் வாரணாவத அரண்மனையைப்பார்த்து மகிழ்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியின் வழியாக அனைவரையும் நம்புகிறார்கள். அதற்கும் அப்பால் உள்ள சதி அதன் உண்மை எப்படித்தான் வெளிப்படுகின்றது?. இறைவன் இயற்கையாக வெளிப்படுகின்றான். // காவலர்களின் பந்தங்கள் நீருக்குள் போல மங்கலாக கரைந்து தெரிந்தன// “இளையவனே, இந்த இல்லம் எதனால் ஆனது?” என்றாள் குந்தி//

குந்தி நீரில் தீப்பந்தத்தை கண்ட அந்த கணத்தை இயற்கை என்பதா? இறைவன் என்பதா? குந்தியின் அகக்கண்ணுக்கு தென்பட்டது என்ன? குந்தியின் அகக்கண் அந்த நேரத்தில் திறந்துக்கொண்டது எப்படி?

இரு வேறு  உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு-திருக்குறள்.

பாண்டவர்கள் வாழ்க்கையில் திருவெல்லாம் இழந்து ஊழின் வலியால்  வளையில் வாழும் எலிபோல் ஆகிவிட்டார்கள் என்றாலும் அவர்களை தெள்ளியர் ஆக்கியது எது? குந்தியன் அகத்தில் இருக்கும் உண்மையும், புறத்தில் வெளிப்படும் உண்மையும் ஒருபுள்ளியல் ஒரு கணத்தில் ஒன்றிவிடுகின்றது. அந்த உண்மையின் தரிசனம் இறைவனா? அதை குந்தி வாழ்க்கை என்கிறாள். ஞானிகள் அறிவு என்கிறார்கள். பக்தன் இறைவன் என்கிறான்.

அன்புள்ள திரு.ஜெ  வணக்கம். ஒரு பெரும் சிக்கலான கணத்தை, பொருளாக ஒரு பார்வையின் நுண்கணத்தில் வெளிப்படும் உண்மையின் வழியாக வாழக்கையின் தரிசனம் உள்ளது என்பதை காட்டும் இன்றைய பதிவு. மாபெரும ஞானத்தின் மின்னல்கீற்று. கண்களை பறிக்கிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்