Thursday, December 18, 2014

பிரயாகை-50-முழுப்பெண்அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இடும்பி பாத்திரம் வழியாக வெண்முரசின் அர்ஜுனன், பீமன், குந்தியை நோக்க வைத்து பெண்களைப்பற்றிய நுண்ணிய அகக்காட்சிகளை படம்பிடித்தது அழகாகவும் அற்புதமாகவும் இருந்தது.

காங்கையைத்தாண்டி காட்டுக்குள் நுழைந்ததுமே குரங்குகள் பீமனிடம் காட்டின் தன்மைகளை கூறுகின்றன அதன்வழியாக அவன் முன்னேறுகின்றான் இது பீமனின் நுண் உணர்வு வெளிப்படும் தருணம்.

அர்ஜுனன் மட்டும் யாரோ தங்களை பின்தொடர்வதாகவும், கவனிப்பதாகவும் உணர்கின்றான். அர்ஜுனன் நுண்ணிய அவதானிப்பு வெளிப்படும் தருணம் இது.

நாங்கள் குரங்குகள் அறியாமல் பயணிப்பவர்கள் என்று இடும்பி சொல்வதன் மூலம் பீமனின் நுண்ணுர்வு செல்லுப்படியாகாத ஒரு தருணத்தில் அர்ஜுனன் நுண்ணுர்வு உயர்ந்து உள்ளது என்பது தெரிகின்றது. அந்த நுண்ணுர்வால் அவன் இரவெல்லாம் துயிலாமல் இருந்தான் என்பதை இடும்பியின் மூலம் அறியும்போது அர்ஜுனன் ஏன் பீமனின் மேன் பட்டவன் என்பது தெரிகின்றது.

//இடும்பி. “ஆகவே நான் காத்திருந்தேன்… உங்களுக்கு மிக அருகே… நான் அருகே இருக்கும் உணர்வு உங்கள் இளையோனுக்கு இருந்தது. ஆகவே அவர் துயிலவேயில்லை//

காற்றில் பறக்கும் குப்பைபோல் வாழும் தெருவோர எளிய மக்களிடம் “பிறப்பிலிருந்து வெளியேற துறவைத்தவிர வேறு வழியில்லை“ என்று சொல்லும் பீமன். அஸ்தினபுரம் விட்டு வாரணவதம் வந்தபோது அந்த துறவுநிலை கிடைத்ததுபோல் உணர்ந்து முட்டுச்சந்தில் தவித்து நிற்பதே வாழ்க்கை என்று நினைத்து ஓய்ந்துபோகும்  பீமன் முன் குந்தி தமோகுணம், ரஜோகுணம், சத்வகுணம் என்னும் மூன்று பெரும்பாதையின் கதவுகளை திறந்து வைக்கிறாள். குந்தி இந்த இடத்தில் பெண் என்னும் படியில் அன்னை என்னும் பீடமாகி குருவென்னும் கோயிலாகி நிற்கின்றாள். இது குந்தியின் அகலமும் உயரமும். அவளுக்கு மருமகளாக வரநினைக்கும் இடும்பி சொல்கின்றாள். //அவர்களை நான் மற்போருக்கு அழைக்கலாமா?” என்றாள் இடும்பி//வாசகன் தவிர்க்கநினைத்தாலும் தவிர்க்கமுடியாத நகை ஒலிக்கும் இடம். 

யதார்த்தமான வாழ்க்கை எப்போதும் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்தான் இருக்கிறது. செயற்கையான வாழ்க்கை விண்ணுக்கும் விண்ணுக்கும், மண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் இருப்பதாக கற்பகை செய்கிறது. 
மாமியார், மருமகள் உளவியல் காட்சி வெளிப்படும் தருணம். தன்னைப்போன்ற மருமகளைத்தான் மாமியார்தேடுவாள். தன்னைப்போன்ற மாமியாரைத்தான் மருமகள்தேடுவாள். தெரிந்தோ தெரியாமலோ அவர்களை ஆடிப்பிம்பமாக்குவதில் இறைவனுக்கு நிம்மதி. அவர்களும் அப்படி ஆகிவிடுவார்கள். குந்தியிம் இடும்பியும் மலையும் மடுவும் எப்படி ஒன்றாவார்கள்?.
//பீமன்இடும்பி “நான் அவர்களுடன் இருப்பேன்அவர்களுக்குபணிவிடைகள் செய்வேன்அவர்கள் என் மேல் கருணைகொள்ளச்செய்வேன்” என்றாள்// 
குந்திபோஜனின் அரண்மனையில் பட்டாம்பூச்சிப்போல் துள்ளித்திரிந்த யாதவப்பெண் பிருதை துர்வாசமுனிவரை எதிர்க்கொண்டதுபோல் உள்ளது இடும்பி குந்தியை எதிர்க்கொள்ள நினைப்பது. உடம்பும் உடம்பும் மோதமுடியாதபோது அகமும் அகமும் மோத தயாராகிவிடுகின்றது.
நவினயுகத்தின் பெண்கள் மாமியாருடன் மற்போர் செய்ய நினைக்கின்றார்களே தவிர ஏன் அகப்போர் செய்ய தயாராவதில்லை? பெரும் உடம்புக்கொண்ட இடும்பிக்கு காதல் உடம்பில் இல்லை. உள்ளத்தில் உள்ளது. ஒரு துளிநேரத்தில் இடும்பியின் உடலையும் உள்ளத்தை செதுக்கிவிட்டீர்கள் ஜெ. //அவ்வாறு உங்களுக்கு குலமுறைஇருந்தால் அன்னையை மீறி நீங்கள் என்னை மணக்க நான் ஒப்புவேனாஎன்ன?” என்றாள்//
அறம் என்பது எந்தப்பள்ளியிலும் சொல்லிக்கொடுத்து படிக்க வேண்டிய ஒன்ற அல்ல? படித்தாலும் அது அறம் செயல்படவேண்டிய தருணத்தில் பயன்படுவதும் இல்லை. அந்த அந்த கணத்தில் அறம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டிய சூழலை அறம் உருவாக்கி வைத்து உள்ளது.

அன்றிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை-என்கிறார் வள்ளுவர்.  இடும்பி எந்தப்பள்ளியில் இந்தக்குறளைப்படித்திருப்பாள். ஒரு மற்போரை அகக்கருணையாக ஆக்கிவிடுகின்றது அறம். அறத்தால் அடையும் ஒரு விரும்பம் வாழ்க்கையை பூந்தோட்டமாக்கி அதில் வண்ணத்துப்பூச்சியாக உலவ வைக்கின்றது. அறம் மறந்த மறவிருப்பம் குருதியில் பிசைந்த கம்பங்கூழாக்கிவிடுகின்றது.

ஒரு மிருக அகத்தோடு பேய்போல் இறங்கிவந்து பீமனோடு மோதி விளையாடும் இடும்பி தெய்வகத்தோடு மனிதபெண்ணாக ஒளிரும் காட்சியில் உள்ளம் நிறைகிறது.

//அவர்கள் சிரித்தபடியே சென்றனர்பீமன் “அன்னை இருக்குமிடம்சிரிக்காதே” என்றான்அவள் உதட்டை அழுத்திக்கொண்டு “ஏன்?” என்றாள். “சிரிப்பது எங்கள் குலத்தில் பெண்மையல்ல என்று கருதப்படுகிறதுஎன்றான் பீமன்அவள் வெடித்துச்சிரித்து நின்றுவிட்டாள்பீமனும் நகைத்துஉண்மை…” என்றான்இடும்பி “அழவேண்டும் என்பார்களா?” என்றாள். “அழும்பெண்களே அழகானவர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்றான்.அவள் உடல் குலுங்க சிரித்தாள்கைகளால் சிரிப்பை அடக்கமுயன்றுமீண்டும் சிரித்தாள்//

காலம் காலமாக பெண்கள்மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொய்முகங்களை உடைத்துக்கொண்டு வெளிவந்து சிரிக்கும் இடும்பி நம்மை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறாள்.

முன்னும் பின்னும்,  மேலும் கீழும், உள்ளம் புறமும் இடும்பி என்னும் முழுபெண்ணைக்கண்டு வியக்கிறேன் ஜெ. நன்றி.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.