Friday, December 26, 2014

காட்டின் குரல்




அன்புள்ள ஜெ,

பிரயாகையின் இனியவன் பகுதி இதுவரை வந்த பாரத பகுதிகளிலேயே மிக மிக இனிமையான பகுதி. இளம் பானை மண்டையனை எனக்கும் மிக மிகப் பிடித்து விட்டது. நான் இளவயதில் படித்த மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக இருந்தது கடோத்கஜன் தான். இத்தனைக்கும் அவனைப் பற்றிய விவரங்கள் அந்த 300 பக்க புத்தகத்தில் மொத்தமே இரண்டு பக்கங்களுக்கு கூட வராது. இருந்தும் அவனின் இனிமை எனக்குப் பிடித்தது. (மற்ற கதாபாத்திரங்கள் கர்ணனும், அபிமன்யுவும். ஏனென்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.!!!) இங்கே தாங்களும் அவனை இனியவன் என்றே சொல்வது பெரும் உவப்பையளிக்கிறது.

இந்த அத்தியாயங்களில் பீமனின் மாற்றங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கின்றது. உண்மையில் தருமன் பாண்டுவின் அறம் குறித்த தேடல்களைத் தானாகக் கொண்டிருக்கின்றான் என்றால்,  பீமன் உண்மையிலேயே பாண்டுவாகவே தான் இருக்கிறான். பாண்டுவும் அரண்மனையிலிருக்கும் வரை கசப்புடன் தான் இருக்கிறான். அவன் சதசிருங்கம் வந்த பின்னர் தான் மகிழ்வையும் நிறைவையும் அடைகிறான். பீமனும் அவ்வாறே. பீமனின் ஒவ்வொரு அங்கதப் பதிலிலும் நான் பாண்டுவைத் தான் காண்கிறேன். அவன் தருமனுடன் கொண்டிருந்த உறவுக்கு சற்றும் குறைவில்லாதது பீமன் கடோத்கஜனுடன் கொண்டிருக்கும் உறவு.

இன்று பீமன் கடோத்கஜனைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வதைக் கண்ட போது எனக்கு பாண்டுவின் மேல் அமர்ந்திருந்த தருமனின் சித்திரம் தான் நினைவுக்கு வந்தது. இங்கே பீமன் திருதராஷ்டிரரைப் பற்றிச் சொல்வதும், அவரின் பெயரை கடோத்கஜன் திரும்ப சொல்வதும் அழகோ அழகு. அதிலும் பீமன் அவர் பெயரை கடோத்கஜன் முதல் முறை சரியாகச் சொன்ன உடன் உவகையில் மீண்டும் சொல்லச் சொல்கிறான். அதற்கு கடோத்கஜன் வெட்கப் படுகிறான் என்று எழுதியிருக்கிறீர்கள். குழந்தைகள் அப்படித் தான் பாராட்டுக்கு எதிர்வினையாற்றுவார்கள். அப்படியே எனக்கு என் மகனைப் பார்த்தது போலிருந்தது. பாண்டுவைப் போலவே பீமனும் திருதராஷ்டிரர் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறான்.

இங்கே திருதராஷ்டிரரை கடோத்கஜன் அனுமனுடன் இணைத்துப் பார்ப்பது மிகவும் நெகிழ்வடைய வைத்தது. பீமன் சொல்லாமலேயே அவரை அவன் தன் குல மூத்தவராக நினைக்கத் துவங்கி விடுகிறான். தன் மகனுக்கு தன் உறவுகளைச் சொல்வது தந்தையின் கடமை. அத்தகைய உறவுகளில் முதலாவதாக அவன் சொல்வது திருதராஷ்டிரரை. இந்த இடத்தில் பீமன் திருதராஷ்டிரர் மீது வைத்திருக்கும் பாசம் பரவசமூட்டியது. நஞ்சே தானாக இருக்கும் பீமனுக்குள் அவர் வகிக்கும் இடம் என்ன என்பதைக் காட்டியது.

பாரதத்தில் கடோத்கஜனும் திருதராஷ்டிரரும் சந்திக்கும் இடம் வரவே போவதில்லை என்பது எப்பேர்பட்ட விதியின் விளையாட்டு. உண்மையில் அவர் மிக மிக விரும்பிய பெயரனாக கடோத்கஜன் இருந்திருப்பான். அவரைப் போலவே அவன் தலையைத் தட்டிக் கொள்ளும் இடம், அற்புதம் ஜெ.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம்.