இனிய ஜெயம்,
வேட்டை சமூகம் வாழும் எல்லையில் மேய்ச்சல் சமூகம் வாழ்கிறது. சாலி ஹோத்ரரின் ஆசிரமம் குறித்த வர்ணனை மற்றும் ஹயக்ரீவர் கோவில் குறித்த சித்திரங்கள் அழகு.
இங்கு கடலூரிலும் ஹயக்ரீவர் கோவில் இருக்கிறது ஆனால் கடலூரில் இன்று ஒரு குதிரை கூட இல்லை. எனது நினைவு தெளிகையில் கடலூரில் மஞ்சக் குப்பம் தண்ணீர்த் தொட்டி நிறுத்தம் [தண்ணீர் தொட்டி குதிரைகள் நீர் அருந்த] குத்தூசி சாலை நிறுத்தம், துறை முகம் குதிரை லாயம் என மூன்று பெரும் குதிரை நிறுத்தங்கள் உண்டு. கடலூரின் உள் பயணக் கட்டமைப்பு குதிரைகளால் மட்டுமே நிலை பெற்று இருந்தது. வெகு எளிதாக நூற்றுக் கணக்கான குதிரைகளை காண முடியும். பின் அவை ஒழிந்து ரிக்க்ஷா வந்தது. அவையும் மறைந்து ஆட்டோ.
இன்று எல்லாம் கலைந்த கனவு போல இருக்கிறது. நகுலன் அஸ்வ சாஸ்திரம் என்ற தனது நிறைவை இந்த ஆஸ்ரமத்தில் கண்டடைவது அழகு. சமகாலத்தில் பீமன் காட்டைப் பயிலுகிறான். குல மூதாதை சாமியாடி அனைத்துக்குப் பிறகும் இடும்பனின் குரலாக வந்து வண்ண மனிதர்களுக்கு நெறிகள் வகுப்பது முக்கிய இடம். வந்தது இடும்பனின் ஆவியா அல்லது அந்த மூதாதை மிமிக்ரி வழியே தன் குடியின் அடி மன அச்சத்தை நியதியாக்கி முன்வைத்தாரா?
மண்ணுக்குள் இருந்து பிரும்மாண்ட நடுகல் பிறந்து வந்து, வராகத்தின் உடலமும் குருதியும் சுவைத்து எழுந்து நிற்கும் சித்திரம் பீதி அளிக்கும்படி உருவாகி வருகிறது.
காட்டின் ஒவ்வொரு அணுவையும் தன் அகமாக அறிந்த பீமன் இப் பெருங் கற்கள் முன் திகைத்து நிற்கிறான். நினைக்கவே விதிர்க்கிறது. அக் கற்களில் ஒன்று அவனால் உருவானது. அவனை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
பீதி அளிக்கும் நடுகல் வாழ்க்கை.
கடலூர் சீனு