Tuesday, December 23, 2014

வால்!




எங்கள் கம்பராமாயண வகுப்பில் நாங்கள் மிகவும் ரசித்த பகுதிகளுள் ஒன்று
கிட்கிந்தா காண்டத்தின் இறுதியில் ஜாம்பவான் அனுமனுக்கு அவன் ஆற்றல்களை
எடுத்துச்சொல்லும் பாடல்கள். கிட்டத்தட்ட 12 பாடல்களில் ஜாம்பவான் அனுமனை
நோக்கிக் கடல்கடந்து இலங்கை செல்லவேண்டியவர் அவரே என்பதை விளக்குவார்.
ஒருபாடலில்

"மேரு மலைக்கும் மீதுற நிற்கும் பெருமெய்யீர்
 மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வரவல்லீர்"

என்று காற்றின் குணங்களே அனுமனுக்கும் இருப்பதாக வரும். இந்த வரிகளையே
விரித்து எழுதியதுபோன்ற கீழ்க்கண்ட வரிகளைப் படித்தபோது உடல்
சிலிர்த்தது:

//அவன் பஞ்சுத்துகள்களுடன் பறந்து விளையாடும் குழந்தையாக இருக்க
வேண்டும். மரங்களை வெறிநடனமிடச்செய்யும் அரக்கனாகவும் இருக்கவேண்டும்.
காட்டுநெருப்பை அள்ளிச்செல்லவேண்டும். அகல் சுடருடன் விளையாடும்
தென்றலாகவும் இருக்கவேண்டும். பெருங்கடல்களில் அலைகளை கொந்தளிக்க
வைப்பவனாகவும் மென்மலரிதழ்களைத் தொட்டு மலரச்செய்பவனாகவும் அவன் விளங்க
வேண்டும்.//

இன்றைய அத்தியாயம் உண்மையிலேயே பேருருவம் எடுத்துநின்ற அனுமனைப்
பார்த்ததுபோலிருந்தது ‍- நீங்கள் குழந்தை அனுமனையே காட்டியிருந்தபோதும்.
அவன் வால் குறித்து மட்டும் எத்தனை கற்பனைகள்? உண்மையில் வால் என்பதே
வாலுத்தனத்துக்கான படிமமா என்ன? வண்ணக்கடலிலும் வாலி சுக்ரீவன்
வால்களைக்கொண்டு சூதர்கள் விளையாட்டு காட்டுகிறார்கள். இன்று அனுமனும்
அதை வைத்துக்கொண்டு தன் அன்னையையே 'டபாய்க்கிறான்'. சிங்கத்தை
அழச்செய்கிறான். உச்சைசிரவசைத் தும்மச்செய்கிறான். அதனால்தானோ என்னவோ
கடோத்கஜனும் தனக்கு இன்னும் வால்முளைக்கவில்லையே என்று வருந்துகிறான்.
இன்னும் பலரும் கதையில் வாலுத்தனம் செய்கிறார்கள். சரஸ்வதியும்
பிரம்மனின் தாடிபிடித்து இழுத்தல்லவா ஆணையிடுகிறாள்?

இவையனைத்திற்கும் உச்சமாக அனுமன் தீபோலிருந்ததாக வருணித்திருக்கிறீர்கள்.
தீ காட்டுக்கு எதிரானது என்று முதுஇடும்பர் சொல்லியதை நினைவுகூர்கிறேன்.
கடோத்கஜனுக்குள் தீயும் காடும் இணைந்திருக்கிறதா என்ன? அவன் தீயும்
காடும் ஆக்கப்பூர்வமாக இணைந்ததன் சான்று போலும். தீயாக மட்டும் இருந்த
அவன் காட்டை அறிந்துகொள்வதன் (அல்லது காடு அவனை அறிந்துகொள்வதன்)
சித்திரமாகவே இன்றைய அத்தியாயத்தை வாசித்தேன். பொருத்தமானதாகவே
இருக்கிறது.

இன்று என் பிறந்தநாளன்று அற்புதமான ஓர் அத்தியாயத்தை அளித்தற்கு நன்றி.

அன்புடன்,
த.திருமூலநாதன்.