அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
வெண்முரசை படிக்கும்தோறும் அது வேறு ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கிறது.
பிரயாகை-40ல் ஒரு எளிய காட்சி. இருளில் கங்கையில் படகுகள் இறங்கின. கண்ணனும் அர்ஜுனனும் ஒரு படகில் ஏறிக்கொண்டனர். பீமன் மட்டும் ஒரு படகில் ஏறிக்கொண்டான். இதில் என்ன இருக்கு?.
//இரண்டாம் முறை கிருஷ்ணன் கையசைத்ததும் வீரர்கள் மூங்கில் உருளைகள் மேல்வைக்கப்பட்டிருந்த சிறிய படகுகளைத் தள்ளி கங்கையில் இறக்கினார்கள். கங்கையில் அவைஇறங்குவது இருளில் எருமைகள் இறங்குவதுபோல ஒலித்தது. நீரில் துடுப்புகளால் தள்ளிஒழுக்குமையத்தை அடைந்தனர். தொடர்ந்து படகுகள் இறங்கிக்கொண்டே இருந்தன. முன்னால் சென்றபடகு அப்பால் சிறிய கட்டை நீரில் மிதப்பதுபோலத் தெரிந்தது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒரே படகில்ஏறிக்கொண்டனர். அவர்கள் நீரில் இறங்கிய பின்னர் பீமனின் படகு நீரில் இறங்கியது//
இருளில் படகு கங்கையில் இறங்குவது எருமைகள் இறங்குவதுபோல் ஒலித்தது என்று ஜெயமோகன் சொல்கின்றாரே, இருட்டில் கருப்பு காளைமாடு இறங்கினால் வேறுமாதரி ஒலிக்குமோ?
ஒலிக்கும்…. காளைமாடு தண்ணீரில் அடியெடுத்து வைத்து சத்தம் எழுப்பி, சிலநேரம் தண்ணீரை புறக்கணித்து கரையேறி, துள்ளிக்குதித்து அமர்க்கலம் செய்யும். எருமை தண்ணீரைக்கண்டதும் ஒலியெழுப்பாது இறங்கியதே தெரியாமல் வழுக்கிச்செல்லும். வெண்முரசு காவியம் ஜெ..
நீங்கள் எருமையை இதற்காகத்தான் உவமையாக்கினீர்களா? தெரியாது. ஆனால் அதில் இன்னும் பல செய்திகள் இருக்கிறது. எருமைபோல கங்கையில் இறங்கும் படகில் செல்வது மதுரா நகருக்கு உரிய எமன்கள். பீமன் மட்டும் தனிப்படகில் ஏறினான் என்னும்போது அந்த எருமையும் அதில் உள்ள எமனும் மாபெரும் காட்சியாக எழுந்து வருகின்றது. முன்னம் வெறுமனே படிக்கும்போது கொடிமரத்தை இணைக்கும் கயிறுகள் எல்லாம் ஒரு காட்சியின் நுட்பம்போல்தான் தெரிந்தது. இப்போது இந்த எருமை எமன் அந்த கயிறு ஒரு கூட்டாக நினைத்துப்பார்த்தால் அது பாட்சக்கயிறாகி நெளிகிறது.
உங்களிடம் ஒரு கேள்வி? வெண்முரசை எப்படி சிந்தித்துதான் எழுதுகின்றீர்களா? இதை சிந்தித்து எப்படி எழுத முடியும். 25 ஆண்டுகளாக வெண்முரசை ஆராச்சி செய்கின்றேன் என்பது எல்லாம் ஒரு மனக்கணக்குக்கு அப்படித்தானே? உங்களைப்பற்றிய ஆராட்சி வேண்டாம். நாம் படகுக்கே சென்றுவிடுவோம்.
அர்ஜுனன் கர்ணன் மட்டும் ஏன் ஒரே படகில்? ஒரு எருமையில் இரண்டு எமன்காளா? அதுவும் நிஜம்தான். அதையும் தாண்டி. நம்பியவருக்கு நடராஜா நம்பாதவர்க்கு எமராஜா என்று ஒரு பழமொழி இருக்கு. இருவருமே நடராஜாக்கள்தான். எமராஜவும்தான். அதுமட்டும்தானா? அதையும்தாண்டி ஒன்று உள்ளது.
வஜ்ரமுகி குருவிக்கு இடத்தை கொடுத்துவிட்டு வேறு அறைக்கு மாறும்போது அர்ஜுனன் நின்று கண்ணன் முன்னால் உள்ளே செல்ல வழிவிட கண்ணன் இல்லை என்று மறுத்து அர்ஜுனனை முன்னே உள்ளே செல்லக் கைக்காட்டுகிறான். அர்ஜுனன் சென்ற பின்பு கண்ணன் செல்கிறான். அர்ஜுனனால் கண்ணனை சொற்கவாசலுக்குள் அனுப்ப முடியாது ஆனால் கண்ணனால் அர்ஜுனனை சொற்கவாசலுக்கு அனுப்பமுடியும். என்ன ஒரு ஞான நுணுக்கம். போகிறப்போக்கில் மின்னிப்போகும் ஞானவானவிற்கள்.
சொற்கத்திற்கு வழிகாட்டும் கண்ணன் அர்ஜுனனை வெறும் எமனாக மட்டும்தான் ஆக்கப்போகின்றானா? இந்த படகு பீமனுக்கு எருமை. அர்ஜுனனுக்கும் எருமை மட்டும்தானா?
இறைவன் திருப்பாதத்திற்கும், குருவின் திருபாதத்திற்கும் படகு என்ற குறியீடு உண்டு. அது கடக்கமுடியாத பிறவிக்கடலை கடக்கவைத்துவிடும்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது -என்கிறார் வள்ளுவர்.
“யாது நிலையற்றலையும் ஏழுபிறவிக் கடலை
எறவிடு நற்கருணை ஓடக்காரனும்” -திருவகுப்பு.
எறவிடு நற்கருணை ஓடக்காரனும்” -தி
------------------------இன்பக் கடல் ஊடே
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து
அம் பொன் தண்டைக் கழல் தாராய் - என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள் குகர மேவுமெய் திருச்செந்தூர் திருப்புகழில்.
‘கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நம சிவாயவே’ என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
இதன்வாழியாக நாம் அறிவது இறைவன், குரு திருவடிகள். அவர்களின் நாமங்கள் படகாகுகின்றன என்பதுதான் அது.
கண்ணனும் அர்ஜுனனும் செல்லும்படகு மதுராவில் இருப்பவருக்கு எமனின் எருமை. நமக்கு மகிஷாசுரமர்த்தினி நிற்கும் பீடமாகிய எருமைத்தலை. நன்றி ஜெ.
வெண்முரசில் ஒன்றுமே இல்லை. ஆப்பை என்று நினைத்துக்கொண்டு நூடுல்ஸ் திங்கும் குச்சியால் அதை அள்ள நினைத்தால் அதற்குள் ஒன்றுமே இல்லை.
ஆப்பை பெரியதாக இருந்தால் அது அட்சயப்பாத்திரம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.