அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
ஒரு பெண் எப்போது நூறு மதிப்பெண்கள் பெறுகின்றாள்?
இயக்குனர் கே.பாக்கியராஜ் சுந்தரகாண்டம் படத்தில் சொல்வதுபோல் ஒரு பெண் தாயாகும்போது நூறு மதிப்பெண்கள் பெற்று முழுமையாகிறாள் என்று சொல்லலாம். ஆனால்,அம்மா ஆனபின்புதான் ஒரு பெண் முதல் மதிப்பெண்ணே பெறுகின்றாள் என்பதுபோல் உள்ளது வாழ்க்கை. அம்மாவிற்கு முன்பு ஒரு சுற்று முடிந்து, அம்மாவானபின்பு ஆரம்பத்திலிருந்து ஒரு முழு சுற்று தொடங்குகின்றது பெண்ணின் வாழ்வில்.
பெரும் கற்பனையின் வழியாக ஆதிமனிதர்களின் வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி ஆதி காலத்திற்குள் நம்மை கதை இழுத்துக்கொண்டாலும் அதில் உள்ள உணர்ச்சிகள் மெய் சிலர்க்க வைத்தது.
கடோத்கஜன் ஒரு கலப்பு திருமணத்தின் சாட்சியாக நிற்கின்றான் ஆனால் அவன் யாராக வாழ்வது? அரக்கனாகவா? மனிதனாகவா? அரக்கனாக வாழவேண்டும் என்றால் பறக்கவேண்டும், மனிதனாக வாழவேண்டும் என்றால் சராசரி உடம்போடு இருக்கவேண்டும். கடோத்கஜன் அரக்கர்களின் அரக்கன். அன்னையும் தந்தையும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் அகம்படும் பாடு கனமான வலி நிரம்பியதாகும்.
உங்களைப்போல எனக்கு ஒரு குழந்தைவேண்டும் என்று நினைத்த இடும்பி, கடோத்கஜன் பிறந்தபின்பு முற்றும் புதிய வட்டத்தின் ஆரம்பத்தில் வந்து பூஜியத்தில் நிற்கிறாள்.
மகன் குறைந்தப்பட்சம் பறந்தால் போதும் என்று இடும்பி நினைத்திருக்கையில் அவன் குலத்தின முதல் இடும்பனாக ஆகிவிடும்போது அவள் அன்னையாகவும், குழந்தையாகவும் மாறிமாறி தத்தளிக்கிறாள். அன்னைகளின் அன்னையாக நூறுமதிப்பெண்கள் பெற்றுவிடுகின்றாள். ஒவ்வொரு அன்னையும் தன் குழந்தையை மையமாக வைத்து அந்த மதிப்பெண்ணுக்கு காத்திருக்கிறார்கள்.
ஜனமேஜயன் செய்த சர்பயாகவேள்வியை ஆஸ்திகர் நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது மானஸாதேவி அந்த மதிப்பெண்ணை பெருகின்றாள்.
கண்ணில்லாத மகனைப்பெற்று அவன் எப்படி வாழ்வான் என்று ஏங்கித்தவிக்கும் அம்பாலிகை, திருதராஸ்டிரன் காந்தாரியை வென்று மணந்துவரும் நாளில் அந்த மதிப்பெண்ணைப்பெருகின்றாள்.
பாண்டவர்கள் முதல் படையெடுப்பில் வென்று கொண்டுவந்த மணிமகுடத்தை தன்பாதத்தில் வைத்தபோது குந்தி அந்த மதிப்பெண்ணை அடைகின்றாள்.
கண்ணன் கோவர்த்தனகிரியை தூக்கியபோது யசோதை அந்த மதிப்பெண்ணைப்பெறுகிறாள். கம்சனை வென்றபோது தேவகி அந்த மதிப்பெண்ணைப்பெறுகிறாள்.
இதோ இன்று இடும்பி அந்த மதிப்பெண்ணை பெறுகின்றாள். அந்த மதிப்பெண்ணை பெறும் கணத்தில் அன்னைகள் அனைவரும் குழந்தைகள் ஆகிவிடுகின்றாள்.
//பின்னர் துள்ளலுடன் பீமனிடம் ஓடிவந்து “இந்தக்குடியிலேயே மிகவிரைவாக வேட்டையாடி வந்தவன் இவன்தான். என் மூத்தவர் கூடமூன்று குவளை நேரம் எடுத்துக்கொண்டார்” என்றாள். அவளுடையபெரிய கரிய உடல் உவகையின் துள்ளலில் சிறுகுழந்தைபோலத்தெரியும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டு புன்னகைத்தான்.இடும்பி ”அதுவும் எருமைக்கன்று! எடைமிக்கது!” என்று கூவினாள்.அவன் மறுமொழி பேசுமுன் அவனைக் கட்டிப்பிடித்து அவன் மார்பில்தன் தலையால் மோதியபின் சிரித்தபடியே திரும்பி ஓடி தன் குலத்துப்பெண்களுடன் சேர்ந்துகொண்டாள். அவளால் ஓரிடத்தில் நிற்கமுடியவில்லை. அங்குமிங்கும் அலைக்கழிந்தாள். மீண்டும்மைந்தனை நோக்கி வந்தாள். அவன் தலையை தன் தலையால் முட்டிசிரித்தாள்//
அன்னைகள்போல தந்தைகள் அடைவது என்ன? தந்தைகள் அப்போது என்ன ஆகின்றார்கள்.பெண்கள்போல ஆண்கள் மதிப்பெண்கள் பெறமுடிவதில்லை. ஆண் பிறந்த நாளில் இருந்தே நூறுமதிப்பெண்ணில் இருப்பதாக அவன் அகங்காரம் சொல்கின்றது. அவன் அகங்காரம் உடைந்து சிதற சிதற அவனின் விழுக்காடு குறைந்துக்கொண்டே வந்து மகன் முன்னால் பூஜியமாகிவிடுகின்றான்.
தன் மகன் பறக்கவேண்டும், பெரியவனாக வேண்டும் ஹனுமான்போல ஆகவேண்டும் என்று நினைக்கும் பீமன்தான் கடோத்கஜனை போருக்கு அழைக்கவேண்டும் என்று நினைக்கின்றான். முழுவதும் வளர்ந்த பின்பு திருதராஷ்டிரனைவிட பெரியவனாக இருப்பான் என்று எண்ணும்போது அந்த எண்ணம் வருகின்றது அவனுக்கு. பீமனின் அகங்காரம் அலைகழிக்கும் நேரம். மகன் வளரவளர தனது இடம் இல்லாமல் ஆகும் என்று உணரும் தருணம்.
மகனின் வெற்றிக்கு முன் அன்னையை வளர வைக்கும் தெய்வம், தந்தையை தேயவைப்பது முரண் இணைப்பு.
வாழ்க்கையில் எப்போதும் தனக்கு இரண்டாம் இடம்தான் என்று உணர்ந்து இருந்த பீமன் இன்று மகனால் முதல்இடம் பெறுகின்றான். தெய்வம் பெரியது. மகனை நூறாக்கி தந்தையை பூஜியமாக்கும் இறைவன் அந்த பூஜியம் ஒன்று முன்னால் விழும் பூஜியம் என்று காட்டுவது கவிதை. ஒன்று என்பது பத்துமடங்கு, நூறுமடங்கு, ஆயிரம் மங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு என்று அந்த பூஜியம் தன்னை பெரிதாக்கிக்கொண்டே செல்கிறது.
மகன் ஒன்றாகும்போது தந்தை பூஜியம் ஆவது இயற்கை என்றாலும் அந்த பூஜியம் பூஜியம் இல்லை.
//ஊனும் மதுவுமாக அவன் விலகி நின்ற பீமனை அணுகி “தந்தையே,தங்களுக்கு” என்றான். பீமன் திடுக்கிட்டு குலமூத்தாரை நோக்கினான்.கண்கள் சுருங்க அவர்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தனர். “அவர்களுக்குக் கொடு!” என்றான் பீமன். “தாங்கள்தான் முதலில்”என்றான் கடோத்கஜன். பீமன் திரும்பி இடும்பியை நோக்க அவள்நகைத்தபடி “இனிமேல் அவன்தான் முதல்இடும்பன். அவனை எவரும்மறுக்க முடியாது” என்றாள். பீமன் திரும்பி தன் மைந்தனின் பெரியவிழிகளையும் இனிய சிரிப்பையும் ஏறிட்டுப் பார்த்தான். அவன் அகம்பொங்கி கண்களில் நீர் பரவியது//
அன்னைத்தந்தைகளின் அகம் வழியாக இந்த உணர்வுகளை நான் பகிர்ந்துக்கொண்டாலும், இன்றைய தருணம் பீமன் அடைந்தது வாழ்க்கையின் பெறுதற்கரிய பெரும்பேற்றுத்தருணம். மலையையே வைத்தாலும் சாப்பிட்டுவிடக்கூடியவன் ஒரு துண்டு மாமிசத்தை திங்கமுடியாமல் தவித்த அந்த தருணம் இனி வாழ்வில் எது கிடைத்தாலும் அது இதற்கு ஈடில்லை என்று காட்டும் அற்புத தருணம். தவமாய் தவமிருந்தும் பெறமுடியாத தவப்பயன் தருணம். அஸ்தினபுரிக்கே அரசனானாலும் இனி இதற்கு ஈடாகாது என்று சொல்லாமல் சொல்லும் தந்தையின் ஆனந்த கண்ணீர் தருணம்.
மகன் வெல்லும்போது அம்மா சிரிக்கிறாள் அப்பா அழுகின்றார் அது தன்னைத்தானே வென்று முதலிடம் பெற்று சுகம்காணும் தந்தையின் தருணம்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.