Thursday, December 4, 2014

மகாபாரதத்தின் சாமானியர்கள்




அன்புள்ள ஜெ,

வெண்முரசின் ஒரு முக்கியமான தனித்தன்மை அதில் வரும் உப கதாபாத்திரங்கள். பெரும்பாலானவர்கள் சாமானியர்கள். பெயர் தெரியாதவர்கள். அவர்களை ஜெ பயன்படுத்தும் விதம் குறிக்கத் தக்கது. 

உதாரணத்துக்கு நீராட்டும் மாருதரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரே ஒரு அத்தியாயத்தில் மட்டும் தான் வருகிறார். அதிலேயே அவரைப் பற்றிய ஓர் தெளிவான வரையறை வந்து விடுகிறது. அதே போன்று தான் அரசிகளின் பிரதான அணுக்க சேடிகள். பெரும்பாலும் அவர்களின் பெயர்கள் மட்டும் தான் இருக்கும். விதிவிலக்குகள் இருவர். 

1. அனகை - குந்தியின் தோழியாக வந்து பிரதான அணுக்க சேடியாக மாறியவள். இள வயது குந்தி தன்னுடைய அகம் திறக்கும் சாளரமாக இவளையே கொண்டிருந்தாள். கர்ணனின் பிறப்பு முதல், குந்தியின் அனைத்து மனக்குகை மர்மங்களையும் அறிந்தவள். மழைப்பாடலில் பாண்டுவுக்கு மகன்களின் வகைகளை எடுத்துக் கூறுபவள். அவ்வகையில் பாண்டவர்களின் பிறப்புக்கு காரணமாக இருந்தவள். பீமனின் வளர்ப்பு தாய். கடைசியில் வண்ணக்கடலில் பீமன் தன்னை விட்டு விலகிக் கொண்டிருப்பதை ஏற்க இயலாதவளாக வருகிறாள். அதன் பிறகு என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. நான் ஏதேனும் பகுதியை படிக்காமல் விட்டு விட்டேனா என்பதும் தெரியவில்லை. பிறகு ஏதேனும் ஓர் பகுதியில் வருவாள் என நம்புகிறேன். 

2. சியாமை - சத்தியவதியின் பிரதான அணுக்கச் சேடி. இவளும் அனகையைப் போன்றவள் தான். சத்தியவதியின் இளமையிலிருந்தே அவளுடன் இருப்பவள். அவளை ஏன் சத்தியவதி பிரதான சேடியாக வைத்திருக்கிறாள் என்பதற்கு குந்திக்கு மணிமுடி வரும் அத்தியாயத்தில் ஒரு சம்பவத்தை ஜெ எழுதியிருப்பார். காந்தரிகளிடம் அவர்களின் மூத்தவளுக்கு மணிமுடி இல்லை என்பதைச் சொல்ல சியாமை வருகிறாள். காந்தாரிகள் கொந்தளிக்கிறார்கள். ஆனால் அவை எதுவுமே சியாமையைத் தீண்டுவதில்லை. மிகுந்த சமநிலையோடே அவள் சென்று சகுனியை அழைத்து வருகிறாள். ஆனால் அவளும் கூட யாதவ குந்திக்கு மணிமுடி வழங்கப் படும் போது ஓர் வன்மம், கண நேரமென்றாலும் கூட, கொள்கிறாள். ஒரு மச்ச குலத்தவள் யாதவ குலத்தவள் அரசியாவதை ஒப்புவதில்லை. பின்னாளில் துரியனின் பக்கத்தில்


பெரும்பாலானவர்கள் சென்று சேர்ந்ததன் காரணத்தை அந்த ஒரு காட்சியிலேயே காட்டி விடுகிறார் ஜெ. அனகையைப் போலல்லாமல் சியாமைக்கு ஒரு தெளிவான முடிவு மழைப்பாடலில் இருக்கிறது. சத்தியவதிக்கு புன்னகையுடன் விடைகொடுக்கும் சியாமையைக் காண்கிறோம். சத்தியவதி அவளிடம் யமுனைக் கரைக்கு சென்று வாழச் சொல்கிறாள்.

அதே போன்று மற்றுமொரு பாத்திரம் திருதராஷ்டிரரின் அமைச்சர் விப்ரர். மிகச் சாதாரண அறிமுகம் தான் அவருக்கு இருந்தது. ஆனால் பிரயாகையின் ஒரு அத்தியாயத்தில் விபரரின் மொழிகளை திருதராஷ்டிரரின் மொழிகளாகவே கொள்ள வேண்டும் என்பது அஸ்தினபுரியின் எழுதப் படாத விதி. விதுரர் கூட விப்ரர் அரசரின் ஆன்மாவின் துணைவர். அவர் மனம் விழைவதையே அவர் செய்வார் என்று சொல்வதன் மூலம் அவரின் இடத்தை சந்தேகத்துகிடமின்றி நிறுவுகிறார்.

உண்மையில் சில பகுதிகள் இவர்களின் பார்வையிலேயே சொல்லப்படுகின்றன. அவ்வகையில் இது சாமானியர்களின் பார்வையிலான பாரதம் தான்.

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம், நெதர்லாந்து