அன்புள்ள ஜெ
பிரயாகையின் வேகமான கதைசொல்லல் எங்கே முடியும் என்றே ஆச்சரியம் ஏற்பட்டுவிட்டது. உண்மையில் பரபரப்பான ஒன்றும் நடக்கவில்லை. நேரடியாக கதை ஓடிக்கொண்டிருக்கிறது. வெறும் அரண்மனைச் சதிகள். தப்பான புரிதள்கள்தான் நடக்கின்றன. ஆனால் ஒருபதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஏனென்றால் இதெல்லாம் நாம் வாழ்க்கையில் அனுபவித்தவற்றின் இன்னொரு வடிவங்கள்.
பார்ட்னர்ஷிப்பில் ஒரு பிசினஸ் செய்தவன் நான். அது நஷ்டமாகி பிரிந்து தரைமட்டமாக கிடந்து மெதுவாக எழுந்து வந்தேன். நஷ்டத்தை விட்டு எழுந்து வருவதற்கு நீண்டநாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது அந்தப்பிரச்சினைகளின் ஆரம்பத்தை எல்லாம் நன்றாகப்பார்க்கமுடிகிறது. அதில் உள்ள பிரச்சினையே ஒரு பிளவை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதுதான். அதோடு அதை விலகி நின்றுபார்க்காமல் எல்லாரிடமும் பேசி எல்லாரையும் உள்ளே வர விட்டுவிட்டோம். அதில் ஈடுபட்ட சிலர் தவிர அத்தனைபேருமே அந்தப்பிளவை கூட்டி எங்களை பிரிக்கவே முயற்சி செய்தார்கள்.
மனிதர்களின் இயல்பு அது. அப்படித்தான் செய்வார்கள் என்று கணிகர் சொல்லும்போது கைகூப்பி ஆசானே என்று கூவத் தோன்றுகிறது
சாரதி