வணக்கத்திற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் இணையதளத்தை தினமும் வாசிப்பவள் நான்.
அதைத்தாண்டி நான் உங்களைப் போன்ற மிகப் பெரிய இலக்கிய வாதிகளோடு தொடர்பு கொண்டதில்லை. எனவே, இந்தக் கடிதத்தில் தவறேனும் இருக்குமாயின் மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.
வெண்முரசு பற்றி எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன். உங்கள் மதிப்பு மிக்க நேரத்தைக் கருத்தில் கொண்டு சுருக்கமாகக் கேட்கிறேன்.
வெண்முரசு பற்றிய உங்கள் அறிமுகத்தில் முதல் இது நாகர்களின் பார்வையிலும், பின்னர் வேதவழிப் பார்வையிலும் சொல்லப்படும் என்று சொன்னீர்கள். இந்த நாகர்கள் என்பவர் ஒரு இனமா என்று கூகிள் செய்து பார்த்ததில் நாகர்கள் இனம் பற்றி அம்பேத்கார் பேசி இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இந்த நாகர்கள் இனம் பற்றியும் அவர்களை மற்ற இனத்தவர்கள் அழித்தது பற்றியும் அறிய ஆசைப்படுகிறேன்.
கேள்வி 1: இந்த நாகர்கள் ஒரு இனத்தைச் சேர்ந்தவர் என்று அம்பேத்கார் தவிர வேறு யாரேனும் சொல்லி இருக்கிறார்களா?
கேள்வி 2: அம்பேத்கர் மட்டும்தான் சொல்லி இருக்கிறார் என்றால், அவர் என்ன சொல்லி இருக்கிறார்?
கேள்வி 3: வேதப் பார்வையானது இந்த நாகர்களின் பார்வையில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
இவற்றை அறிய ஆவலோடு இருக்கிறேன். நீங்கள் தயவு செய்து பதில் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் அனுப்பியதில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.
இவற்றை அறிய ஆவலோடு இருக்கிறேன். நீங்கள் தயவு செய்து பதில் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் அனுப்பியதில் தவறு இருந்தால் மன்னியுங்கள்.
இப்படிக்கு,
ராணி முருகன்
அன்புள்ள ராணி முருகன்
ஒரு நாவல் என்ன சொல்கிறது - சொல்லப்போகிறது என்று ஆசிரியரிடம் கேட்பது பிழை. அதை நாவலை வாசித்தே அறியமுற்படவேண்டும்
நாகர்கள் என்பவர்கள் இந்தியப்பெருநிலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த பழங்குடிகளின் திரளைச் சுட்ட பயன்படுத்தப்பட்ட பொது அடையாளமாக இருக்கலாம். நாக இலச்சினை கொண்டவர்களோ நாகத்தை வழிபட்டவர்களோ ஆக அவர்கள் இருந்திருக்கலாம்
இந்தியாவின் தொன்மையான நூல்கள், தொன்மங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இன்றுள்ள மானுடவியல் தரவுகளின் அடிப்படையிலும் பொதுவான சில ஊகங்களையே செய்யமுடியும். எவையும் நிரூபிக்கத்தக்க உண்மைகள் அல்ல
1. நாகர்கள் என்பவர்கள் புராதனமான ஒரு இனத்தொகை
2 அவர்கள் இந்தியா முழுக்க இருந்திருக்கிறார்கள்.
3 அவர்களுக்கும் பிற இனக்குழுக்களுக்கும் இடையே தொடர்ச்சியான மோதலும் சமரசமும் இணையும் நடந்துகொண்டிருந்தது
4 நாகர்களின் பெரும்பாலான பண்பாட்டுக்கூறுகள் இந்து மதப்பிரிவுகளாலும் சமணத்தாலும் உள்ளிழுக்கப்பட்டன. அதற்குக் காரணம் நாகர்கள் இந்த மதங்களுக்குள் சென்றதுதான்
5 அப்படி மைய மதப்போக்குகளில் இணையாத நாகர்களின் குழுக்கள் தங்களை நாகர்கள் என்ற அடையாளத்துடன் முன்வைத்தபடி மேலும் பற்பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தனர்
6 இன்றுள்ள நாகர்கள் அப்படி நீடித்தவர்களின் தொடர்ச்சி
7 நாகர்களில் அரசகுலங்களும் உண்டு. நாகவன்ஷி போன்ற பெயர்கள் அதைச் சுட்டுகின்றன
8 இந்த யதார்த்தம் பாம்பு என்ற குறியீடுடன் கலந்து பலவகையான தொன்மங்களை உருவாக்கியிருக்கலாம்
9 பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய பல தொன்மங்கள் நாகர்களுடையவை [கத்ரு- வினதை போன்ற கதைகள்] அவை மகாபாரதத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன
10 அம்பேத்கர் இதைப்புரிந்துகொள்வதற்கான ஒரு முன்வரைவை உருவாக்கினார். பின்னர் டி டி கோஸாம்பி உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் விரிவாகப்பேசியிருக்கிறார்கள்.
ஜெ