அன்புள்ள ஜெயமோகன்,
தற்போது நீங்கள் கிருஷ்ணனை உங்களின் பார்வையில் சொல்கிறீர்கள் அல்லது அர்ஜுனனின் அல்லது ஒரு கோணத்தில்.
இவனை பற்றி படித்த அத்தனையையும் கழட்டி வைத்து விட்டால், அவன் ஒரு மாபெரும் கூட்டத்தின், ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமே. ஆட்சி அமைத்து அரசன் ஆகி தோற்று வெல்ல வேண்டிய வெறியில் இருக்கும் ஒரு வேகம் கொண்ட , அறிவில் வேறு தளத்தில் இயங்கும் இளவயது அரசன். இதுவே மகத அரசனை பற்றி சொன்னாலும் அவன் ஒரு முக்கிய பாத்திரம் ஆவான்.
அப்படி பார்க்கையில், வியாசன் எழுதும் போது கிருஷ்ணனின் தப்புகளை அந்த காலத்தின், அரசியல் அடிப்படையில் செய்த தவறுகளை தவிர்த்து எழுதி இருக்காலம் அல்லவா? சூதர்கள் பாடாமல் போன, பதிய வைக்க வேண்டாமல் போன வேறு பகுதிகள் இருக்கலாம் அல்லவா? விரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த கிருஷ்ணன், சாணக்யன் தேர்ந்தெடுத்த குப்த அரசனை போல ஒரு பேரரசுடன் கூட்டு சேர்ந்து சேர்ந்த கூட்டணி தான் பாண்டவர் உறவு என்று எளிய பார்வை வந்து தொலைக்கிறது.
வியாச கதையில் அல்லது மிக பழைய மூல கதைகளில் இவனை பற்றிய குறிப்புகள், பதிவுகள் எங்கனம் உள்ளது?
அன்புடன்,
லிங்கராஜ்
அன்புள்ள லிங்கராஜ்
பாகவதத்திலும், பிறகும் நம் மதமரபில் தென்படும் கிருஷ்ணனை நாம் மகாபாரதத்தில் காணமுடியவில்லை. மகாபாரதம் தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டது என்பதனால் நேரடியாக கிருஷ்ணணை கடவுள் என்றே சொல்லும் இடங்களும் புகழ்மாலைகளும் ஏராளமாகவே மகாபாரதத்தில் உள்ளன. அவை கதையோட்டத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் பொருந்தாமல் பின்னாளில் இணைக்கப்பட்டவை என நன்றாகவே தெரிகிறது.
உதாரணமாக ஆதிபர்வத்தில் துருபதனை அர்ஜுனன் வென்றபின் உடனே வரும் பகுதியில் துரோணர் கிருஷ்ணன் தெய்வ அவதாரம், உலகையே ஆட்டிப்வைப்பவன் அவனை நீ சரண் அடை என்றெல்லாம் பேசுகிறார். ஆனால் மகாபாரதத்தின் கதையை மட்டும் வைத்துப்பார்த்தால் கிருஷ்ணன் தன் யாதவகுலத்தை அழிவில் இருந்து காக்க அஸ்தினபுரிக்கு அத்தையை பார்க்க வரும் இளைஞனாகவே அறிமுகமாகிறார்.
ஆனால் அசாதாரணமான மனிதன், ஞானியும் பெரும்போர்வீரனுமாக ஒருங்கே திகழ்பவன் என்ற விவரணையும் கதையோட்டம் வழியாகவே தெரிகிறது. எப்படி கதையோட்டத்தில் அர்ஜுனன் மாவீரனாக ஆனானோ அதேபோல கிருஷ்ணன் மாபெரும் ஞானியாக மலர்கிறான். பின்னர் அவன் குலம் அவனை தெய்வமாக்கியிருக்கலாம்
ஜெ