Sunday, December 7, 2014

சிபியும் சோழர்களும்



[சிபி கதை ஜாவாவில் உள்ள சிற்பம்]

ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

வியாசர் பீஷ்மர்க்கு கூறும் கதையில், சந்திரவம்சத்து  சிபி மன்னன் பீஷ்மரின் குலமூதாதையர் என்றும்,  பிரபை என்னும் புறாவை காக்கும் பொருட்டு தன்னையே காணிக்கையாக கொடுக்க முன்வந்ததை கூறுவார்.
 எங்கள் குடியிருப்பில் இருக்கும் சில மாணவர்களுக்கு தமிழ் பாடம் சொல்லிகொடுத்து வருகிறேன் . ஒன்பதாம் வகுப்பு தமிழ் நூலில் "முத்தொள்ளாயிரம்" என்ற பாடத்தில்  சேர, சோழ, பாண்டிய மன்னர்களை புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று,
"சேர்ந்த புறவின் நிறைதன் திருமேனி
ஈர்ந்திட்(டு) உயர்துலைதான் ஏறினான் – நேர்ந்த
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோசென்னி பண்பு.”

புறாவிற்காக தானே துலாக்கோலில் ஏறினான் என்று வருகிறது.
சில கதைகளை தங்கள் பகுதிக்கு, நபர்களுக்கு உரிய கதைகளாக மாற்றி கூறுவது வழக்கம் ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரால் செய்யப்பட்ட  குறிப்பிட்ட செயலை இப்படி மாற்றி கூறுவார்களா ? அல்லது இதில் எது உண்மை?

செந்தில்குமார் 
சென்னை 


அன்புள்ள செந்தில்,

மகாபாரதத்தில் அந்தக் கதை உள்ளது. சமணநூல்களிலும் உள்ளது. பிற்காலத்திலேயே அது தமிழகம் வந்திருக்கலாம். அது தொன்மையான ஒரு நீதிக்கதை என தோன்றுகிறது
இந்தக்கதை அமராவதி பௌத்த ஸ்துபியின் சிற்பங்களிலும் நாகார்ஜுனகோண்டாவிலும் எல்லாம் புடைப்புற்சிற்பமாக உள்ளது.

சோழர்கள் சில புராணங்களில் சந்திரகுலத்தவர் என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் சிபி சோழர்களின் முன்னோர் என்று சொல்லப்பட்டிருக்கலாம்
ஜெ