Thursday, December 4, 2014

துரியனின் சரிவு



இனிய ஜெயம்,

பூநாகம் துவங்கி  உருகும் இல்லம் 3 வரை மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.  இன்னும் எத்தனை அபாரமான தருணங்களை  இந்த நாவல் தனக்குள் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

திருதுராஸ்த்ரர் உண்டாட்டை புறக்கணிக்கும் கணம் வரை கூட  கணிகனின்  பிரித்தாளும் சூழ்ச்சி  வெற்றி பெற வில்லை.  மாறாக உருகும் இல்லம் 3 இல்  தனது முதல் வெற்றியை  கணிகனும் சகுனியும் பெற்றுவிடுகிறார்கள்.

எப்படி? மீண்டும் உருகும் இல்லம் வாசித்துப் பார்த்தேன். இதுவரை எழுதப்பட்ட அத்யாங்களிலேயே ஆகச் சிறந்தது  என இதையே சொல்வேன்.

சகுனியும் கணிகனும்  துல்லியமாகவே காய் நகர்த்துகின்றனர். ஆனால்  கௌரவர்களின்  சம்மதம்  எந்த அளவு?  கணிகன் பேசி முடித்ததும்  குண்டாசி முற்றிலும் கலங்கிக் கிடக்கிறான்.

துரியன் கண்ணில் தெரியும்  வெறுப்பைக் கண்டு  துச்சாதனன்  , துரியன்  கணிகனின் சிரம் கொய்யப்போகிறான் என்றே எண்ணுகிறான். 

ஆனால்  சகுனியின் கொலை திட்டத்தை  துரியன் மௌனமாக அங்கீகரிக்கிறான்.  துரியனால்  தந்தையை மீர முடியாது. ஆனால்  ஒரு படு கொலைக்கு சம்மதிக்க முடியும்.  யாதவனின்  போர்க் குற்றங்களைக் கண்டு கொதித்த துரியன்  நிகழவிருக்கும் ஒரு வஞ்சத்துக்கு  மௌனமாக  சம்மதிக்கிறான்.

துரியனின் இந்த மௌனத்தை  விளங்கிக் கொள்ளவே இயலவில்லை. கிட்ட தட்ட  வாழ்க்கைக்கு இணையான மர்மம். 

கூட்டம் முடிந்து தம்பியுடன் கிளம்பும்போது  துரியன் காறி காறி உமிழ்ந்தபடியே இருக்கிறான். திருதுராஸ்ட்ரரின் மைந்தன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றை ஏற்றுக் கொண்டான்.  அதை அவனது உள்ளம் போலவே உடலும் ஒவ்வாமை கொண்டு எதிர்க்கிறது.

இந்தப் புள்ளியில்தான் சகுனியும், கணிகனும் தங்களது முதல் வெற்றியைப் பெறுகிறார்கள்.  துச்சாதனன்  அமுதகலசம் தெரியாத வண்ணம் துவண்டு கிடக்கும்  கொடியை  பார்த்துக்கொண்டே  நகர்வது  மனதுக்குள்  இன்னதென்று  சொல்ல இயலாத துயரத்தை  உருவாக்குகிறது.

ஆக துரியன் சரிந்துவிட்டான்.

கட்லூர் சீனு