Thursday, December 4, 2014

போர்க்களத்தில் குழல்



பிரிய ஜெ,
// “ஆம் அமைச்சரே. மண்ணில் அவனறியாத ஏதேனும் உள்ளனவா என்று தோன்றிவிடும். ஆனால் ஏதுமறியாத சிறுவனாகவே எப்போதும் இருப்பான். போர்கூட அவனுக்கு விளையாட்டே. களத்தில் குருதி சிதறப் போரிடுகையில் வாய்க்குள் பாடலை முணுமுணுக்கும் ஒருவன் இருக்கமுடியும் என்றே என்னால் நம்பமுடியவில்லை” என்றான்.
“பாட்டா?” என்றார் விதுரர். “ஆம். போரில் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அது ஏதோ போர் மந்திரம் என எண்ணினேன். என்ன என்று கேட்டேன். அது சூதர்களின் காதல்பாடல். உன் கூர்முலைகளின் வேல்களால் என்னைக் குத்து. உன் இதழ்களின் விஷத்தால் என்னைக் கொல் என்று பாடிக்கொண்டிருக்கிறான். போரின்போது பக்கவாட்டில் அவன் முகத்தை நோக்கினால் இனிய இசையொன்றைக் கேட்டபடி தென்றல் தவழும் புல்வெளியில் அமர்ந்திருப்பவன் போலிருக்கிறான். நூற்றுக்கணக்கில் தலைகளைக் கொய்து வீழ்த்தியபின் தன் இடையிலிருந்து இனிப்புப்பண்டம் ஒன்றை எடுத்து வாயிலிட்டு சுவைக்கிறான்.”//
விஷநீலத்தின் பேரழகும் அதில் இருக்கும் கடுநஞ்சும் ஒரு சேர வெளிப்படும் இடம். அபாரம். நீலம் நாவலில் கிருஷ்ண சிம்மமாகவும் பெருங்காதலனாகவும் ஒரு சேர எழுந்த இடத்தை நினைவுபடுத்தியது. இதை ஒரு காட்சியாக எண்ணும்போது அதன் குரூரம் மனதை என்னவோ செய்கிறது. போர்களத்தில் குழலூதும் ஒருவன். ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தான் என சொல்வார்கள். இங்கே மனதில் பெருங்காதலுடன் உயிர்களை கொல்வதற்கு முடிகிறது. ஒருவன் வரலாற்றில் மாபெரும் கொடுங்கோலன், மற்றொருவன் இன்றும் மக்கள் தொழும் அவதார புருஷன். ஏன் இப்படி என்று யோசித்து கொண்டிருக்கிறேன். இந்திய மனம் நன்மைக்கும் தீமைக்குமான இடைவெளியை எப்படி புரிந்துகொள்கிறது? எப்படி அடையாளம் கொள்கிறது? சிக்கலான கேள்விகள் தான்....நீரோ பொறுப்பின்மையின் சித்திரம் என்றால் நேர்மாறாக அதை தன தர்மமாக செயலுக்கு முழு பொறுப்பேற்கிறான் கண்ணன்..இது இந்திய மனம் மட்டுமே புரிந்துகொள்ள கூடிய நுட்பம் என எண்ணிக்கொண்டேன். .ஓஷோ கிருஷ்ணனை மட்டுமே புது யுகத்தின் கடவுளாக சொல்கிறார்..அவனே யோகியாகவும் போகியாகவும் இருக்க கூடியவன். 
நன்றி 
சுனில் 


அன்புள்ள சுனில்,
நாம் இந்த விஷயங்களை இன்றைய ஜனநாயகச் சூழலில், போரில்லாத சூழலில் நின்று பார்க்கிறோம். கிருஷ்ணன் என்ன அத்தனை மன்னர்களும் இந்த முகம் கொண்டவர்களே

உலகையே சூறையாடிய ஜெங்கிஸ்கான் மங்கோலியர்கள் வழிபடும் தெய்வம். இலங்கையருக்கு ராஜராஜசோழன் பேரழிவை விளைவித்தவன். நமக்கு காவியநாயகன். அக்கால மன்னர்கள் அனைவருமே போரில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எதிரி வீரர்களை தங்கள் கைகளால்  கொன்றுகுவித்தவர்கள். சத்ருபயங்கரன், என்று மதுராந்தகன் என்றும் ராஜராஜசோழன் பட்டம் சூட்டிக்கொண்டான் என்பதை யோசித்துப்பாருங்கள். 

அப்படிக்கொல்லப்பட்டவர்கள் எதிரிகள், அயலவர்கள், கொல்லப்படவேண்டியவர்கள், கொல்வது தன் கடமை என்றே அம்மன்னர்கள் எண்ணினர். நம் கடவுள்களும் கொன்று குவித்தவர்களே. ராமாயணம் ராமனின் கொலைவெறியாட்டத்தை விரிவாக விவரிக்கிறது இல்லையா? நாம் அசுரர்களை தீயசக்திகள் என உருவகப்படுத்திக்கொண்டு அதைக்கடக்கிறோம்

போரை, கொலையை, அன்றைய யதார்த்தமாக இயல்பாக எடுத்துக்கொள்வோம். அதிலுள்ள உணர்ச்சிகளை தரிசனத்தை மட்டும் இப்போது கொள்வோம்

ஜெ