ஆசிரியருக்கு ,
தாஸ்தயவஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்
'ல் ஒரு இடம் வரும் , அதன் நாயகன் ரஸ்கல்நிகோவ் பத்திரிகையில் ஒரு கட்டுரை
எழுதியிருப்பான், மனிதர்களில் கூர் மதி படைத்தத ஆற்றல் மிக்கவர்கள் மிகச்
சிலரே, அவர்களுக்கு சிறப்புத் தகுதிகள் உள்ளது, அவர்களே இச்சமூகத்தை
வழி நடத்துபவர்கள், அவர்களின் உயிருக்கு கூடுதல் மதிப்பு உண்டு ஆகவே
சராசரிகளின் உயிரை விலையாகக் கொடுத்து அவர்களை வாழவைக்கலாம்.
கொல்லப்படும் சராசரிகள் மீது இந்த கோட்பாட்டு நம்பிக்கையாளனுக்கு
தனிப்பட்ட வன்மமும் வெறுப்பும் இருந்திருக்காது என நான் கணிக்கிறேன்.
ஒரு கோட்பாட்டு கற்பிதம் கருணையற்ற கொலைகளுக்கு வழிவகுத்துவிடும்.
இது கோட்பாட்டின் குரூரம்.
பின் தொடரும்
நிழலின் குரலில் ஒரு சித்தாந்த நம்பிக்கை கருணையற்ற
கொலைகளுக்கு வழிவகுத்துவிடும் எனக் கூறும் இடம் உண்டு. ஹிட்லரோ , மாவோவோ ,
போல்பாட்டோ கொலையானை பிறப்பிக்கும் போது கொல்லப்படுபவர்கள் மீது வன்மமும்
வெறுப்பும் இருந்திருக்காது என நான் கணிக்கிறேன். இது சித்தாந்தத்தின்
குரூரம்.
பிரயாகையில் கிருஷ்ணன்
பாட்டுப் பாடிக்கொண்டே , இனிப்பை சுவைத்துக் கொண்டே களத்தில் கொலை
புரிகிறான், இது கர்மம் அல்லது விதித்தருணம். இங்கும் கொல்லப்படுபவர்கள்
மீது கிருஷ்ணனுக்கு வன்மமும் வெறுப்பும் இல்லை. இது மகா தர்மத்தின் அல்லது
விதியின் அல்லது பெரிய பிரபஞ்ச வலைபின்னலை கற்பனை செய்தலில்
உள்ள நம்பிக்கை. இது தர்மத்தின் குரூரம்.
அன்பும்
கருணையும் மானுட குணம் என்றால் வஞ்சமும் குரோதமும் கூட மானுட குணமே.
கோட்பாடோ, சித்தாந்தமோ, தர்மமோ மானுட குணம் எனச் சொல்ல முடியாது என
கணிக்கிறேன்.
ஒரு மானுட குணத்தின் கொலைவாள் முன்
நாம் இரக்கத்தை இறைஞ்ச முடியும் ஆனால் தர்மத்தின் முன் அவ்வாறு முடியுமா ?
கொலை புரியும் மகாதர்ம நம்பிக்கை எவ்வாறு கொலை புரியும் சித்தாந்த
நம்பிக்கையில் இருந்து வேறுபடுகிறது ?
அன்புள்ள கிருஷ்ணன்,
வெண்முரசைப் பொறுத்தவரை இவையெல்லாம் அந்த நாவல் எழுப்பும் ஆதராமான கேள்விகள். இதை ஒட்டி வாசகர்கள் விவாதிக்க, விரித்தெடுக்க வேண்டுமென்று அது எண்ணுகிறது. ஆசிரியர் இப்படிச் சொல்கிறார், இது சரியா என்பதல்ல கோணம். இப்படி என்றால் இதன் உள்ளடக்கம் என்ன என்பதே. அது ஆசிரியர் புனைவுக்கு வெளியே வந்து சொல்லிமுடிப்பது அல்ல.
போர் தேவையா என்ற வினா இன்றையது. அது போரில்லாது வாழ்க்கை இல்லாதிருந்த காலம். போரை ஒரு புனிதவேள்வியாகக் கருதிய காலம். கிருஷ்ணன் உள்பட அனைவருமே மாபெரும் போர்வீரர்களே.
அப்படியென்றால் அந்தப்போரை எப்படி நிகழ்த்துவது? அதை கிருஷ்ணன் கீதையில் ‘தனிப்பட்ட உணர்ச்சிகள் அற்று, தன் நலம் சார்ந்த எதிர்பார்ப்புகள் அற்று, யோகம் போல’ செய்யவேண்டும் என்கிறார்
கொல்லவேண்டும். அப்படியென்றால் எப்படி? கொல்பவர்களை வெறுக்காமல், அவர்கள் நம்மைக்கொல்வதைப்பற்றி அஞ்சாமல், கொன்றபின் மனம் வருந்தாமல், அது அலகிலா ஆடலின் ஒரு பகுதி எனும் தெளிவுடன் செய்வதா நல்லது?
அதை யோசிக்கலாம். பொதுவாக ஒன்றுண்டு. உணர்ச்சிகளால் ஆளப்பட்டவர்களே குரூரமானவர்கள். எந்தக்குரூரங்களையும் செய்யும் அளவுக்கு அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வளர்க்கமுடியும். அவர்களால் அத்தனை நியாயங்களையு பார்க்கமுடியாது. முழுமைநோக்கை அடையவும் முடியாது
இந்த அத்தியாயங்கள் உங்களுக்கு அளிப்பதென்ன? இயந்திரத்தனமாக கீதாசாரம் என நாம் கடந்துபோகும் தரிசனத்தை அப்படியே சித்தரித்துக் காட்டுவதுதான். அது அளிக்கும் அதிர்ச்சி ஒரு திறப்பு
ஜெ