Saturday, December 6, 2014

நீலம் எனும் கவிதை

 
 
 
அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். வெண்முரசு விழாவிற்கான எனது வாழ்த்துக் காணொளியை தங்கள் தளத்தில் பதிந்தமைக்கு நன்றி. என்னவோ சொல்ல வந்து  என்னென்னவோ பேசியிருக்கிறேன். 

நூல்கள் கிடைத்தவுடன், ஏற்கனவே பேசிவைத்த ஒப்பந்தத்தின்படி, மழைப்பாடலை என் மனைவி எடுத்துக்கொண்டாள். எனக்கு நீலம்.

ஓரளவு வேகமாகவே வாசிக்கும் பழக்கம் உள்ளவன் நான். எனது பருப்பு நீலத்தில் வேகவில்லை. எதோ ஒரு வரியோ அல்லது கருத்தோ மீண்டும் மீண்டும் அதே அத்தியாத்தில் உழற்றுகிறது.

நம்புவீர்களா? “மைந்தர்கள் எவருக்கும் பெயரில்லை மாதரசியே. அவை அன்னையரும் தந்தையரும் தங்கள் பேரன்புக்குச் சூட்டிக்கொள்ளும் பெயர்கள் மட்டுமே” என்ற ஒரு வரியில் மட்டுமே இரவு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை படித்துக் கொண்டிருந்தேன். அந்த வரிகள் புத்தகத்திலிருந்து இறங்கி என்னருகே உறங்கிக் கொண்டிருந்த என் மகளின் முகத்தில் நிலைபெற்றதை பின்னரே உணர்ந்தேன்.

"அணிநகையீர், அச்சத்தால் கட்டுண்டோன் மானுடன். 
ஐயத்தால் கட்டுண்டோன், அவற்றை வென்றாலும் மெல்லுணர்வுகளால் கட்டுண்டோன். 
அனைத்தையும் வென்றாலும் அறத்தால் கட்டுண்டோன். 
அதையும் வென்று நின்றவர் கம்சர். " என்ற வரிகளைப் படித்தபோது ஏனோ எனக்கு கடல் பர்க்மான்ஸ் நியாபம் வந்தது.

கவிதையைப் போல ஒவ்வொரு வார்த்தையையும் அணுக வைக்கும் மொழிநடை.

"மண்கனக்கும் கரும்பாறை மடிப்புகளைப் பிளந்தமைக்கும் கண்விழியா சிறுவிதைக்குள் வாழும் முளைக்கருவை வாழ்த்துங்கள். மணிக்குரல் பறவை ஒன்று மெல்விரல்பற்றி சுமந்துசெல்லும் அளவுக்கே சிறியது இப்புவியென்றனர் மெய்யறிந்தோர். சின்னஞ்சிறியது வாழ்க! மலரினும் மெல்லியது நலம் வாழ்க!"

நீலம் ஒரு புதிய அனுபவமாக உள்ளது. நன்றி.

முதற்கனல் செம்பதிப்பு மீண்டும் அச்சடிக்கும் வாய்ப்புள்ளதா?  
முன்பதிவுத் திட்டம் போல் செய்து தேவையைப் பார்த்து மீண்டும் அச்சடிக்கலாமெனில் செய்து பாருங்களேன். என்னைப் போல தவற விட்டவர்களுக்கு ஒரு மறுவாய்ப்பு. புத்தகக் கண்காட்சி வேறு வருகிறது.  

செம்பதிப்பு நூலை இன்னும் சற்று பெரிய வடிவில் பதிப்பித்தால் ஷண்முகவேலின் ஓவியங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். முதல் அத்தியாயத்தில் ராதையைத் தீண்டும் தென்றலின் கைகள் சரியாக வரவில்லை. இன்னும் சில படங்களும் கூட. படத்தை மிகவும் சுருக்குவதால் இவ்வாறு நடக்கலாம். எஸ்.ரா வின் "நிமித்தம்" நாவல் அளவில் வந்தால் நன்றாக இருக்கலாம். 

நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இருக்கலாம். ஒரு யோசனையாகவே இதைக் கூறுகிறேன்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்,
மூர்திஜி
பெங்களூரு