Thursday, December 4, 2014

பிரயாகை-35-மிருகம் மனிதனாகிறது.




பெரும் பாசத்தில் நம்மீது பாயும் நாயை அச்சத்தில்  அருவருப்பில் முகம் இறுகி விழித்து நோக்கும்போது அது தனது முன்னங்கால் இரண்டையும் நமது காலுக்கு முன்வைத்து அதில் தலையும் வைத்து வாலாட்டும்போது நமது பிம்பம் உடைந்து உடைந்து விழும். எலும்பு துண்டுக்கு வாலாட்டும் நாய் என்பது சரியா? நாம் அப்படி நினைத்துக்கொள்கின்றோம். நாய் என்ன நினைத்துக்கொள்ளும்? இந்த மனுசபயலுக்கு நாம் அன்பை போடுறோம் அவன் வெறும் எலும்பை போடுறான்.

மனித அறிவு எலும்பைபோடுவதைப்பற்றி அறிந்து இருக்கிறது. எவ்வளவு போடுவது, எப்படிப்போடுவது என்பதை தீர்மானிக்கிறது. காலில் பணிந்து தலைவைத்து அன்பைபோடகிளம்பிவிடும் மனிதன் எல்லாம் நாய்தான் என்பதை எலும்புபோடும் மனிதன் காட்டிவிடுகின்றான்.

பிரயாகை-35ல் இறங்குவதற்கு முன்பு ஆசிரியர் திரு.ஜெவுக்கு அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டுவிடுகின்றேன். கடிதத்திற்குள் இறங்கிவிட்டப்பின்பு கடிதத்தை அருக்கு எழுதுகின்றேனா? அவருக்கு எழுதுவதாய் நினைத்துக்கொண்டு  எனக்கே எழுதிக்கொண்டு இருக்கின்றேனா? என்பதே தெரியமாட்டேன் என்கிறது.

துரியோதனன் குரு பலராமர் திருவடிகளில் ஒரு நாய். அவன் தனது அன்பை அவர் காலடியில் வைக்கின்றான். மனிதன் என்பதால் உணர்வுப்பூர்வமாக வைக்க நினைக்கின்றான். துரியோதன் காட்டும் அன்பும், உணர்வும் நாய் வைக்கும் அன்புபோன்றதுதான் என்பதை அஸ்தினபுரம் காட்டுகின்றது. காரணம் அஸ்தினபுரியில் உள்ள அறிவும் நூலும் குலமூதாதை பீஷ்மரின் அனுபவமும் அன்பை போடுவதை விட எலும்பை போடுவது நல்லது என்பதை மனிதத்தன்மையோடு சொல்கிறது.

தந்தையாகிய திருதராஷ்டிரன், அமைச்சராகிய விதுரர் மற்றும் உள்ள அமைச்சர்கள், இளவரசனாகிய தருமன் தாங்கள் மனிதர்களாக இருக்க, அறிவுள்ள மனிதர்கள் என்பதை நிறுபி்க்க எலும்பு துண்டு எறிய அறிவாராட்சி செய்து முடிவெடுக்கிறார்கள். முடித்தும் விட்டார்கள்.

//நாம் யாதவர்கள் அங்கே ஒரு நகரை அமைப்பதற்கான செல்வத்தை அளிப்போம். அதை எவரும் அறியவேண்டியதில்லை. இப்போது நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி இது ஒன்றேயாகும்என்றார் விதுரர். சௌனகர்ஆம், அமைச்சர் சொல்வதை நானும் முழுமையாக ஏற்கிறேன். இத்தருணத்தில் நாம் செய்யவேண்டியது அது ஒன்றேஎன்றார். முடிவுக்கு வந்துவிட்டது போல அமைச்சர் உடல்களில் ஒரு மெல்லிய அசைவு நிகழ்ந்தது. கூட்டமான மூச்சொலிகள் எழுந்தன. அவை திருதராஷ்டிரருக்கு அவர்களின் உள்ளத்தை உணர்த்தின. அவர் தன் கைகளைத் தூக்கி தலைக்குமேல் வளைத்து சோம்பல் முறித்தார்//

துரியோதனன் வேண்டுவது எலும்பை அல்ல அவன் வேண்டுவது தனது அன்பை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம். அன்பை உணர்ச்சி என்றும், அறிவை விவேகம் என்றும் ஆடைக்கட்டி மண்ணில் அலையவிடுகின்றோம். அன்பின் ஆடை வாழை இலையில் செய்ததுபோல் காற்றிலேயே கிழிந்து நிர்வாணமாக்கிவிடுகின்து. விவேகத்தின் ஆடை உலோக தகட்டில் செய்ததுபோல் கழட்டி வைக்கும்வரை நிர்வாணமாக்குவதில்லை.

துரியோதனின் தனது அன்பு ஆடை அத்தனை எளிதில் கிழிந்து நிர்வாணமாக்கப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டான். மகாபாரதம் என்னும் பெரும் ஆலமரத்தை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம் அதன் விதை என்ன என்பதை இன்று ஆசிரியர் காட்டுவது அற்புதம். விவேகத்தின் முன்பு அன்பு நாயாவதுதான் அது.

//உன் செயலால் இருசாம்ராஜ்யங்கள் நடுவே ஒரு பெரும்போர் தொடங்கி பல்லாயிரம்பேர் இறப்பார்களென்றால் அதற்கு நானல்லவா பொறுப்பேற்கவேண்டும்? நான் இந்நகர மக்களின் எதிர்கால அரசன். இம்மக்களின் நலனை மட்டுமே கருத்தில்கொள்ளமுடியும். நீ செய்வது உன் சொல்லுக்காக. அதன் விளைவாக இம்மக்கள் அழிவார்கள் என்றால் நான் அதை ஒப்பமாட்டேன்…”//

துரியோதனன் தனது முன்னங்கால்கள்மீது தலையையும் வைத்து தருமன் முன் வாலாட்டியது லொள்..லொள் என்ற குரைப்பாகப்போய்விட்டதுபோல் “நீ உன் சொல்லுக்காக” என்று கூறும் தருமன், தன் விவேகத்தால் நாளை நான் இந்நாட்டு மன்னன் என்கிறான்.  இந்த சொல்லை ஜெ எப்படி அமைத்தார் என்று வியக்கிறேன். எதுவுமே நடக்காததுபோல் வந்து விழுந்த எளிய இரண்டு சொற்கள். இதற்கு தருமன் கொடுக்கும் விலையை நினைத்தால் விதியின் கூர்மை அச்சதை ஏற்படுத்துகின்றது. அஸ்தினபுரியின் மன்னாக தருமன் ஆட்சி ஏற முடியாமலே போனது. பெரும் சம்பங்கள் எல்லாம் எளிமையாக நடந்ததே தெரியாமல் நடந்து சரித்திரமாகிவிடுகின்றன என்பது இதுதானா? வாழ்க்கை விபத்து. 

தருமன் செய்த தவறு தருமனுக்கு தெரியவில்லை. எதையும் துள்ளியமாக அறியும் அர்ஜுனன், அறிந்த உடனே அதற்கு உரிய உணர்ச்சியோடு அதை வெளியிடும் அர்ஜுனன் அந்த நேர உண்மைதரும் உணர்ச்சியால் துரியோதனன் அகம் இறந்து செல்வதற்காக சீறுகிறான். எப்போதும் போல மனிதர்களின் அகம் அறிந்து அதற்கும் அப்பால் மனிதர்கள் இடம் உள்ள விடத்தை அறிந்திருக்கும் பீமன் தனது பகடியின் மூலமாக முன்செல்கின்றான்.

இளையவனே, அறம் கற்றவர்களின் அகம் அறநூல்களை போர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறது. பிற அகங்களை அது அறிவதில்லை…” என்றான். அர்ஜுனனின் தோளைத் தொட்டுவா, கதை முடிந்துவிட்டதுஎன்றான்.

ஒரு பெரும் சிக்கலான வாழ்க்கை தருணத்தை, ஒரு அன்பின் விபத்தை கதை என்று சொல்லிச்செல்லும் பீமன்தான் எத்தனை பெரிய ஞானி. அறம் கற்றவர்களின் அகம், அகம் அறிய முடியாமல் போய்விடுவது என்பது எத்தனை பெரிய நடைமுறை முரண்.

நாயின் அறம் அன்பை போடுகின்றது, மனிதனின் அறம் எலும்பை போடுகின்றது அதுவும் எச்சில் எலும்பை.  

மனிதன் பெரும் கொடுமைகள் செய்யும்போது மிருகம் என்கின்றோம், உண்மையில் மனிதன் பெரும் கொடுமைகள் செய்யும்போதுதான் மனிதனாக இருக்கிறான். அறிவு ஆயுதத்தை 360 பாகை கோணத்திலும் சுற்றுகின்றான். வரைபடம் வரைந்து திட்டம் தீட்டி அழிக்கிறான். எந்த மிருகமும் இப்படி செய்வது இல்லை.

சகுனி ஒரு பாசக்கார நாய். அக்கா காந்தாரிக்காக காந்தரம்விட்டு வந்து அஸ்தினபுரியில் வாலாட்டியது. அது மனிதனாகிவிட்டது ஆனால் நாம் ஓநாய் ஆகிவிட்டது என்கிறோம். திருதராஷ்டிரன் ஒரு பாசக்கார வேழம் அதுவும் கண்ணில்லா மனிதனாகிவிடது. துரியோதனன் ஒரு பாசக்கார நாய் அதுவும் மனிதர்களால் மனிதனாகிவிட்டது நாம் மிருகமாகிவிட்டது என்கிறோம்.
//அவர்கள் செல்லச்செல்ல துரியோதனன் ஒரு பெரிய பாதாளநாகம் போல வழிந்து சென்றபடியே இருப்பதாகத் தோன்றியது அர்ஜுனனுக்கு// 

அன்பு மனிதனை மனிதனாக வைத்திருக்கவில்லை மாறாக செல்லப்பிராணியாக வைத்திருக்கிறது. அதற்கு அறிவு, வேகம், காலம் கடந்த பார்வை எதுவும் தேவை இல்லை. அறிவு மனிதனை மனிதனாக்கிவிடுகிறது. அவன் தன்னை யார் என்பதை கண்டுவிடுகின்றான். அவனால் பழுத்த புளிபோல ஓட்டோடு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியவில்லை. தனித்துவிடுகின்றான் பலமற்றுவிடுகின்றான் உதிர்ந்துவிடுகின்றான்.
புளியோ மனிதனோ பழுக்கவும் உதிரவும் வேண்டும் என்றே விரும்புகின்றது இயங்கை. தானாக விழுந்தாலும், அடித்து வீழ்த்தினாலும் இயற்கைக்கு சம்மதமே.  

துரியோதனன் பற்றி நினைக்கும் இவ்வேளையில் ஆசிரியர் திரு.ஜெ அன்பைப்பற்றி கூறுவதை இங்கு சிந்திப்பது தகும். அதன் தாக்கம் நெஞ்சை கீழ் வைத்து அதன்மேல் மலையை  தூக்கி வைத்ததுபோல் உள்ளது.

//அன்பு ஒவ்வொரு கணமும் தன் எதிரொலிக்காக செவிகூர்கிறது. நிகரான எதிரொலி எழாதபோது ஏமாற்றம் கொள்கிறது. சினமடைகிறது. அது வன்மமாகவும் வெறுப்பாகவும் திரிகிறது.”-பிரயாகை-31

எழுதி எழுதி தீராத பகுதி பிரயாகை-35 அதனால் இங்கு  முடித்துக்கொள்கின்றேன் வேறு ஒரு திசையில் இருந்து தொடங்க.

மிருகம் மனிதனாகிறது என்று தலைப்பு வைத்ததால் ஒன்று தோன்றுகின்றது. கூட்டுக்குடும்பங்கள் குலைந்து தனிக்குடும்ப வாழ்க்கை வாழ்வது மனிதன் எவ்வளவு தூரம் மனிதன் அறிவாளியாகிவிட்டான் என்பதை காட்டுகிறது. அறிவாளி ஆகும்தோறும் மனிதன் கொஞ்சம் பாசத்தை அரிந்து  அரிந்து உண்டு வளர்கிறான். அஸ்தினாபுரி என்னும் பெரும் குடும்பம் இப்படி நினைக்க வைத்தது.   

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.