வெண்முரசின் காலம் எது? இந்த கேள்வி முன்னரே கேட்கபட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் கவனிக்கவில்லை. வெண்முரசு கதை நிகழும் காலம் எது என்று ஆரம்பத்தில் இருந்தே எனக்கு கேள்வி இருந்து வந்தது. கதையில் பல இடங்களில் பல வேறு காலகட்டம் சுட்டிக்காட்ட படுகிறது. புராண வகையில் இது கலிகாலம் தொடங்குவதற்கு முன் நடந்த கதையாக சொல்லப்படுகிறது.
வரலாற்று வகையில் பார்த்தால் இது கப்பல் வாணிபம் தொடங்கிய காலகட்டத்தில் நடப்பது போல் தெரிகிறது. ஜன பதங்களும் அதற்குரிய பெரு மன்னர்களும் உருவாகிவிட்ட காலகட்டமாக இருக்கிறது. இரும்பு புழக்கத்தில் வந்து விட்ட காலகட்டம். வண்ணக்கடலில் வரும் அருக நெறி பற்றிய விவாதத்தில் மஹாவீரர் குறிப்பிட படவில்லை, அவருக்கு முந்தய காலக்கட்டம். பார்சவரின் பிற்காலகட்டம்.
விக்கிப்பீடியாவில் இருந்து கிடைக்கும் தகவலை வைத்து பார்த்தால் இந்தியாவின் இரும்பின் காலகட்டம் 1200–26 BC. வண்ணக்கடலில் சொல்லபடும் தீர்தங்கரர்களில் கடைசி தீர்தங்கரர் பார்சவரின் காலகட்டம் 877–777 BCE. மஹாவீரரின் காலகட்டம் 599 BCE–527 BCE. இதன் படி வெண்முரசு நடக்கும் காலகட்டத்தை கீ.மு. 7ம் நூற்றாண்டில் தான் வைக்கவேண்டியிருக்கும்.
அந்த காலத்தில் இவ்வளவு இரும்பு புழக்கத்தில் இருப்பதற்கு சாத்தியமா? கப்பல் வழி வணிகம் வெண்முரசில் காட்டப்படும் அளவுக்கு பிரமாண்டமாக இருந்திருக்குமா? இந்திய மண்ணர்களுக்கு யவன வீரர்கள் வேலை செய்வது போல் சொல்ல படுகிறது. இந்தியாவிற்கு யவனர்களின் வருகை எப்போது ஆரம்பித்தது?
மஹாபாரதம் மூன்று பகுதிகளாய் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதி சேர்க்கப்பட்டது என்று படித்திருக்கிறேன். ஆனால் வெண்முரசு அதை ஒட்டுமொத்தமாக தொகுத்து மறுஉருவாக்கம் செய்கிறது. அதில் கதைகளில் வரும் வரலாற்று தரவுகளும், கதை நடக்கும் காலகட்டமும், அதில் வரும் தொழில் நுட்பங்களும் ஒரே காலகட்டதிற்குரியதாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். இல்லை, புனைவுகளுக்கு இப்படி கறாரான காலகட்டம் சார்ந்த பார்வை தேவையில்லையா?
ஹரீஷ் [குழுமத்தில்]
அன்புள்ள ஹரீஷ்,
மகாபாரதத்தின் காலகட்டத்தை இரும்புக்காலகட்டம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிடலாம். அதில் இரும்பும் தங்கமும் திரும்பத்திரும்ப வர்ணிக்கப்படுகின்றன இரும்பாலான இயந்திரங்கள், இரும்பலான கோட்டை வாசல்கள், இரும்பு மாளிகைகள் கூட! கருடன் அமுதத்தை எடுக்கப்போகும் இடத்தில் மிக நுட்பமான ஓர் இரும்பு தானியங்கி இயந்திரம் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது
அதாவது கிமு 2000 வாக்கில். ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டிருக்கிறேன். கிருஷ்ணனின் நேரடியான உறவினராக, தாய்மாமனாகவே 22 ஆவது தீர்த்தங்காரர் ஆன நேமிநாதர் சொல்லப்படுகிறார். அவர்தான் மகாபாரதத்தின் சமகால தீர்த்தங்காரர்.[நேமி என்றால் சக்கரம்] வண்ணக்கடலில் மகாபாரதம் முழுமையாக நிகழ்ந்தபின்னர்தான் மிகப்பிந்தைய காலகட்டத்தில் இளநாகன் பயணம் செய்கிறான். ஆகவேதான் பார்ஸ்வர் வருகிறார்.
அக்காலகட்டத்தில் உள்ள துறைமுகங்களின் பெயர்கள் அடிக்கடி சுட்டப்படுகின்றன. கடலோர நாடுகள் வலிமை பெற்றன. இரண்டும் தெளிவாகவே சுட்டுகின்றன, கடல்வணிகம் பெருகியதை. அதுவே உண்மையான சிக்கல் என ஊகிக்கலாம்
ஆனால் அதற்கும் ஆயிரம் வருடம் முன்னரே யவன- சீன கடல்வணிகம் தொடங்கிவிட்டது. ஹரப்பன் நாகரீகம் மகாபாரதத்துக்கு முந்தைய வெண்கல யுகத்தைச் சார்ந்தது. லோத்தல் அதன் வணிக மையம், துறைமுகம். அங்குள்ள க்ல்மணிகள் மெசபடோமியாவுக்கும் இத்தாலிக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டிருக்கின் றன. ஹரப்பன் காலகட்டத்தின் கடல்வணிகம் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது
சீனாவின் கடல் வணிகம் என்பது உண்மையில் மகாபாரதத்திற்கும் முந்தையது.வெண்கலக்காலத்திலேயே அதுவும் ஆரம்பித்துவிட்டது.சீனாவின் முக்கியமான தாமிர உற்பத்தி மையம் இந்தியா. செம்பு மகாபாராஷ்டிரத்தில் உள்ள செம்புவயல்களில் அகழ்ந்து எடுக்கப்பட்டு கலிங்கத்தில் உள்ள தாம்ரலிப்தி துறைமுகம் வழியாக சீனாவுக்குச் சென்றது
இந்தச்சித்திரமே வெண்முரசில் உள்ளது. அதாவது காலம் ஏறத்தாட கிமு 2000 என வைக்கலாம். யுகக் கணக்கு நேரடியான காலக்கணக்கு அல்ல, அது ஒரு தோராயமான குணரீதியான கணக்கு. அல்லது புராணக்கணக்கு. இந்தக் காலவரையறையில் இருந்து கதை முன்னால் உள்ள பல காலகட்டங்களுக்குச் சென்று மீள்கிறது.
ஜெ.