Friday, December 5, 2014

பிரயாகை-37-பிச்சாடனன்.


 அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

கேட்டுப்பெறுவதுதான் மிகவும் கொடுமையான நிலை அதிலும் பிச்சை கேட்பது மரணத்தைவிடவும் மிகவும் கொடுமையான நிலை. ஆனால் இறைவன் பிச்சைக்காரன். 

பக்திக்கு கண்ணாமூச்சி ஆடுபவன், தவத்திற்கு மேலே மேலே சென்ற நிற்பவன், ஞானத்திற்கு அப்பால் அப்பால் போய்கொண்டு இருப்பவன் பிச்சைக்கேட்க மட்டும் வீடுவீடாய் தானாகவே வந்து நிற்கின்றான். அவனால் மட்டும் இது எப்படி முடிகிறது?. ஒன்றும் இல்லாத சீவன்களை ஒன்று என்று காட்டவா? ஒன்றானவன் ஒன்றமே இல்லாதவன் என்று காட்டவா?

கண்ணன் கேட்கவந்த இடத்தில் “கேட்டுப்பார்க்கிறேன்” என்றான் பாருங்கள். அந்த இடத்தில் தனக்காக நான் கேட்பவன் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறான். தவிப்பவர்களுக்காக, தன்னை புகலிடம் என்று கொண்டவர்களுக்காக, மண்வாரிதூற்றி தீச்சொல் இடுபவர்களுக்கும், தன்மீது எறிக்கொண்டு தன்னையே சுமக்க சொல்பவர்களுக்கும், தன் சொல் கேட்பவர்களுக்காக, மாடு, கன்று, பறவைக்கும் கண்ணன் கேட்பான்.  கண்ணன் நேரடியாக மகாபாரதத்தில் தான் யார் என்பதைக்காட்டும் அமுதவாசகம்.  

அன்புள்ள ஜெ இந்த இடத்தில் கண்ணன் மகாபாரதத்தில் யார்? என்பதை  ஒளிப்படுத்துகின்றீர்கள். இதுவரை இருந்த மகாபாரதம்மேடை முழுவதும்  இருட்டாக்கப்பட்டு கண்ணன் முகம் மட்டும் அந்த வார்த்தையோடு ஒளிப்படுத்தப்படுகின்றது. இந்த இடத்தில் உங்களுக்கு எனது  ராஜவணக்கம், ஏற்றுக்கொள்ளுங்கள் ஜெ.

கண்ணன் யாருக்காக அந்த இடத்தில் கேட்டுப்பார்க்கிறேன் என்கிறான்? நேரடிப்பார்வையில் மூன்று முட்டையும், சற்று கூர்ந்து நோக்கையில் நான்கு முட்டையும் இட்டு வாழத்துடிக்கும் தாய்பறவைக்காக கேட்டுப்பார்க்கிறான். அந்த தாய்ப்பறவை குந்தி. அது காட்டுக்குருவி இல்லை வீட்டுக்குருவி. யாதவன பெண்ணாக இருந்தாலும் அவன் அரசி அப்படித்தானே? 

தருமன் தாயின் எண்ணங்களால் வதைக்கப்படுகிறான். அவன் உண்மையில் அவனுக்கான நெறிகளை காண்கின்றானே தவிர, குந்திக்காகவோ, பாண்டுக்காகவோ, பாண்டவர்களுக்காகவோ அவன் கேட்க்கும் திறன் உடைவன் அல்ல. பிறருக்காக கேட்பவனும் பிச்சைக்காரன்தான் தருமன் பார்வையில் ஆனால் பிறருக்காக கேட்பவன் பிச்சைகாரனாக இருந்தாலும் இறைவன் கண்ணன் காட்டுவது அது.

சுற்றமிழந்து, குடியிழந்து, படையிழந்து, நாடிழந்து நாடோடியாக பிச்சைக்கேட்கும் நிலையில் நிற்கும் கண்ணன் ஒரு குருவியிடம் கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்வது எத்தனைபெரிய தாய்மை இதயத்தின் இருப்பிடம். அந்த இதயம் நகைப்பிற்கு உரியது. அர்ஜுனன் ஏளத்துடன் புன்னகைக்கிறான். தருமன் எரிச்சலுடன் புன்னகைக்கிறான். ஏளனமும் எரிச்சலும் கண்டு கொள்ளாத ஒன்றை திறந்த உதடும் வெளித்தெரியும் வெண்பற்களுடன் இருக்கும் வளர்ந்தும் குழந்தையென  மாறபுன்னகையுடன் இருக்கும் ஒருவன் தாய்மையின் உணர்வை புரிந்துக்கொள்கின்றான். குருவியும் மனிதனும் ஒன்று என்று கண்டுக்கொள்கின்றான். 

பாண்டவர்கள் கண்ட பறவையிடம் தாயை கண்டவன் கண்ணன். அந்த தாய் வாழ இடம் தந்தவன் கண்ணன். குழறுபவைஅறைகூவுபவை,ஏங்குபவைஇசைப்பவைதாளமிடுபவைவிம்முபவைஅழுபவைஅனைத்தும் பறவைகள் என்று நினைத்த அர்ஜுனன் இப்போது என்ன நினைப்பான்?

//கண்களை மூடியபோதுதான் அங்கே எத்தனை வகையான பறவைகள்இருக்கக்கூடும் என்ற வியப்பை அடைந்தான்பல்லாயிரம் பறவைகளின்விதவிதமான ஒலிகள் இணைந்து ஒற்றைப்பெருக்காகசென்றுகொண்டிருந்தனகுழறுபவைஅறைகூவுபவைஏங்குபவை,இசைப்பவைதாளமிடுபவைவிம்முபவைஅழுபவைஇத்தனைஉணர்ச்சிக்கொந்தளிப்புகள் சூழ நிகழ்கையில் மானுடர் அவற்றைஅறியாமல் தங்கள் உலகில் வாழ்கிறார்கள்//

அப்போது எல்லாம் பறவைகள் என்று நினைத்த அர்ஜுனன் இப்போது என்ன நினைப்பான்? அது என்னவாக நினைக்கவேண்டும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு காட்டிப்போகின்றான். தருமன் பறவைகளின் ஒலிகளை தத்துவார்த்தமாக விவரிப்பான் என்று அப்போது எண்ணிய அர்ஜுனன் இப்போது கண்ணால் அவை தன்னில் ஒரு அங்கம் அகம் என்று நினைக்கிறான். தாயின் முன் பறவையும் மனிதனும் என்ன வேறுபாடு? 

எப்போதும் எல்லோர் கண்களை நோக்கும் அர்ஜுனன் அவற்றில் உள்ள நடிப்பை உணர்ந்துக்கொள்கிறான். குந்தியின் கண்களில் உள்ள அரசாசையை காண்டு விலகுகின்றான். விதுரரின் கண்ணில் உள்ள காதல் சலனத்தை கண்டு வெறுக்கிறான். குருவான துரோணர் கண்களில் உள்ள நட்பென்னும் நடிப்பைக்கண்டு வெறுக்கிறான். தருமன் சிட்டுக்குருவியை விரட்டுங்கள் என்று சொன்லும்போது புன்னகைத்தாலும் அதில் உள்ள வாள்கூர்மையை கண்டு வெறுக்கிறான்.//இந்தச் சிட்டுக்குருவி இங்கே வரலாகாது என்று சொன்னேன்” என்றான்தருமன் மெல்லிய புன்னகையுடன்கண்களில் கத்திமுனையின் ஒளிதெரிந்தது//  இப்படியாக அர்ஜுனன் தான் காணும்  அனைவரும் வெளியில் நடிக்கிறார்கள் என்பதை அறிந்துக்கொண்டே வந்து மனிதர்களை வெறுக்கிறான். இந்த வாழ்க்கை ஒரு நடிப்பு என்பதை அறிந்து வெதும்புகிறான். அந்த வெதும்பலே அவனுக்குள் கேள்விகளாக உள்ளது. அதை யாரிடம் கேட்பது. நடிக்காத ஒருவனிடம். அகமும் புறமும் ஒன்றாக இருப்பவனிடம். உயிர் அனைத்தும் ஒன்று என்று நினைப்பவனிடம். அப்படி ஒருவன் கிடைப்பானா? அப்படி ஒருவன் கிடைத்தால் குருவாக ஏற்கலாம். அப்படி ஒருவன் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதால் அர்ஜுனன் கண்ணனை முதலில் பார்க்க விரும்பவில்லை. அந்த அர்ஜுனன் தான் கண்ணனிடம் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொள்கின்றான் என்பெயர் பார்த்தன் என்று.

கண்ணனை அவன் மட்டும்தான் பார்த்தவன் என்பதால் பார்த்தனா?  கண்ணனிடம் தோள்உரசிக்கொள்ளும் அளவுக்கு அர்ஜுனன் என்னப்பார்த்தான்? . தன்னை சக்கரவர்த்தி என்றே நினைத்துக்கொள்ளும் தர்மனை சொல்கேட்க வைத்தவன் என்பதை. ஒரு குருவியின் அரசைவிட நமது அரசு பெரிது இல்லை என்று காட்டியதை.

//“நாம் வேறு அறையில் சென்று பேசலாமே” என்றான் கிருஷ்ணன். “வஜ்ரமுகியின் அரசில் நம் அரசியல் பேச்சுக்களை அவர்கள்விரும்பவில்லை.” அர்ஜுனன் புன்னகைசெய்தான்தருமன் “ஆம்…”என்றபின் எழுந்து நடந்தான்அர்ஜுனன் கிருஷ்ணன் அருகே சென்று “என்பெயர் பார்த்தன்இளையபாண்டவன்… உங்களைப்பற்றி நிறையவேஅறிந்திருக்கிறேன்” என்றான்//

அர்ஜுனன் கண்ட கண்ணன் பிச்சைக்கேட்க வந்த இடத்தில் கூட ஒரு பறவைக்கு பிச்சைக்கேட்கிறான்.

தனக்கு தனக்கு என்று தாயை குழந்தையை கொல்லும் அரசியலில் இருந்துக்கொண்டு ஒரு குருவியையும் தாயென்று அறிந்து அதன் குரல் கேட்கும் ஜெவின் கண்ணன் என் கண்ணன்.

வாதத்தில் வென்றுவிட்டதாய் நினைத்து புன்னகைக்கும் தருமனைப்பார்த்து வாசகனும் கண்ணன் தோற்றுவிட்டதாய்தான் நினைக்கின்றான். கண்ணன் முன்னமே வென்றுவிட்டுதான் அமர்ந்திருக்கிறான் என்பதை தருமன் உணரவில்லை. கண்ணன் விட்ட பெருமூச்சில் அவன் வாதத்தில் தோற்றுவிட்டதாய் தருமன் அறிந்து புன்னகைத்தான். இவனிடம் “அச்சத்தை” தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை அந்த புன்னகை பெருமூச்சில் கண்ணன் சொல்கிறான்.

கண்ணன் சொல் “ஐயமே வேண்டாம்”

தருமனின் சொல் “அச்சம்”

கண்ணன் சொல்லை கேட்பவன் யார்?...

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.