[முறையே நன்னயர், திக்கணர், எர்ரனர்]
அன்புள்ள சார்,
நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு கடிதம். கடைசியாக "வெள்ளையானை" படித்து விட்டு எழுதியது தான். ஆனாலும் உங்களை தினமும் விடாது படித்துகொண்டுதான் இருக்கிறேன்
.
உங்கள் தளத்தை நான் படிப்பது அலுவகத்தில் தான். இப்போது அதிக கெடுபிடிகள். நேரமின்மை. அதுவும் தாண்டி தமிழில் தட்டு தடுமாறி எழுதிக்கொண்டு இருந்தால் ஏதோ அன்டை நாட்டுக்கு உளவு சமாசாரம் அனுப்புவதுபோல் பார்த்துகொண்டு இருக்கிறார்கள்!
வென்முரசு தொடங்கியதும்.. தளத்திலேயே படிக்கதான் நினைத்தேன். முடியவில்லை. மற்ற கடிதங்கள், கட்டுரைகள் மாதிரி அல்ல அது. வென்முரசை படிக்க மனம் முழுவதும் அதிலேயே குவியவேண்டும். அலுவலகில் அது முடியாத காரியம். அதனால் தான், முதர்கனலை 17வது நாளுக்கு பிறகு என்னால் தாண்ட முடியவில்லை. புத்தகத்துக்காக காத்துகிடந்து தான் படித்தேன். அப்படியாக, இப்போது வன்னகடல் வரை வந்துவிட்டேன். ஒரு புத்தகம் முடித்து, மற்றுதுக்காக காத்துகொண்டு இருக்கையில் உங்களின் இதர படைப்புகளை வாசிக்கிறேன்.
சொல்வனம், சங்க சித்திரங்கள் அப்படி வாசித்துதான்.
வென்முரசு பற்றி என்ன சொல்ல? தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மாணவர்கள் செய்யுள் பகுதி முழுக்க கம்ப ராமாயணமும், சிலப்பதிகாரமும் படிப்பார்கள் என்று நினைக்கிறேன். அங்கியே உள்ள எங்களை போன்ற தெலுங்கு மாணவர்கள் மகாபாரதத்தை தான் படிப்போம்.
தெலுங்கில் அதுதான் ஆதிகாவியம்! நன்னய்யா, திக்கன, எர்றன என்ற மூவர் எழுதிய மகா காவியம். அதில் மூன்று பக்கம் உள்ள செய்யுள் தான்.. அம்பையின் கதை! அதை மிக அற்புதமான ஒரு நவீன் நாவலாக படிப்பது ஒரு பாக்கியம் தான்! முக்கியமாக வேசரநாட்டு நாகர்களை.. ஸ்ரீசைலத்தில் வைத்து பார்த்தது இருக்கே.. ஒரு திடுக்கிடல். ஒரு இன்ப அதிர்ச்சி.
நாவல் முடித்தவுடன் எழுதியிருந்தால் பக்கம் பக்கமாக ஆகி இருக்கும். எழுத முடியாமை மிகவும் ஆதங்கமாகதான் இருக்கிறது
ராஜு
அன்புள்ள ராஜு
பொதுவாக வாசிப்பனுபவத்தை எழுதுவது நாமே தொகுத்துக்கொள்ள உதவும். எழுதியவற்றை நாம் தெளிவாக பேசமுடியும், அவை நினைவிலிருந்து அகல்வதில்லை
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? தெலுங்கு மகாபாரதம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். [கன்னடத்தில் குமாரவியாசனின் மகாபாரதமும் ஏறத்தாழ முழுமையானது] பிராகிருதத்தில் மகாபாரதத்தை எழுதிய பொன்ன ரன்ன இருவரும் பிறந்த ஹலசி ஊருக்கு நாங்கள் சமணப்பயணத்தில் சென்றோம். அந்த மகாபாரதத்தை ஒட்டியே நன்னய்யா, திக்கன எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறேன்
ஜெ