ஜெ
அரக்குமாளிகை அத்தியாயத்தை வாசித்து திகைப்படைந்தேன். அதை பலமுறை வாசித்திருக்கிறேன். கதை கேட்டிருக்கிறேன். நாடகங்களில் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இத்தனை கிராஃபிக் டீடெயிலுடன் பார்க்க நேர்ந்ததே இல்லை. அற்புதமான சித்தரிப்பு
அதிலும் அது எரிவதை பார்க்கும்போது அர்ஜுனனுக்கு வரும் மன எழுச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவனால் கண்ணை எடுக்கவே முடியவில்லை. தீ பசியுடன் எரிவதை அவன் சாகவும் துணிந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்
அந்தமாளிகையின் வர்ணனை அற்புதமானது. அதை கட்டியிருக்கும் விதமும் அது எரியாத தீ மாதிரி அவர்களைச் சூழ்ந்திருக்கும் விதமும் பிரமிப்பை அளிக்கிறது
அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை போகி மாதிரி கொளுத்திவிட்டு எதிர்காலம் நோக்கிச் செல்வதை அதில் காணமுடிகிறது. ஆகவேதான் அர்ஜுனன் அதை ஒரு யாகம் என்று சொல்கிறான். அவர்கள் அதில் எதை அவியாக போட்டார்கள் என்பது ஊகிக்கவைக்கிறது
சாரதி