இனிய ஜெயம்,
வெண் முரசு தொடரில் நெருப்பு கொள்ளும் வித விதமான வடிவங்களின் தலையாய சித்தரிப்பு இன்றைய அத்யாயம்.
தீர்க்க சியாமரின் சிதை தொடங்கி, துருபதனின் வஞ்சினம் தொடர்ந்து, 'மூன்று மகவுகளை இடையில் ஏந்திய அன்னையை எரிக்கும்' வேள்வியாக விஸ்வரூபம் கொள்கிறது நெருப்பு.
அர்ஜுனனுக்குள் தான் எத்தனை பறவைகள். பற்றி எரிந்து விதானம் நோக்கி எழுந்து பறக்கும் தழல் பறவைகள்.
மாளிகையை முதலில் கண்டதும் குந்தியின் அகங்காரம் கொள்ளும் நிறைவு, முற்றிலும் குந்தியை வேறு ஒருவளாக உருக்கி வார்த்து மாற்றுகிறது அந்த நெருப்பு.
தெஜோ மயம். எத்தனை கவித்துவமான பெயர். குரூரமான பெயர். ஒளிக்கு நேர் எதிராக இருக்கிறது வாரண வத குகை. அங்கே கொல்லும் ஒளி. இங்கே பிறப்பிக்கும் இருள். அங்கே நெருப்பின் ஓலம். இங்கே நீரின் கிசுகிசுப்பு.
குகைக்குள் பீமன் ஒரே ஒருவனின் இருப்பு, அவன் தேர்ந்த நுட்பங்கள் அனைவரையும் இலகுவாக வைத்திருக்கிறது. பீமனின் கசப்பு ஊறிய நகைச்சுவை நகுலன் வரை பற்றிக்கொண்டு விட்டது.
சதி குறித்து அறிந்ததும் தர்மனின் முதல் வார்த்தை 'இங்கிருந்து நாம் வெளியேறியதும் நாமனைவரும் நாடோடிகள்'
ஹும் பாவம் தருமன்.
கடலூர் சீனு