[வங்க சுடுமண் சிற்பம். பீமன் துரியோதனன் பிஷ்ணுபூர்]
“தந்தையே, இத்தனை அவமதிப்புக்கு நான் என்ன பிழை செய்தேன்? எதற்காக நான் இப்படி சிறுமைகொண்டு அழியவேண்டும்?”
இனிய ஜெயம், துரியோதனன் பிறப்பு துவங்கி இன்றைய அத்யாத்தின் இந்த வினா வரை துரியோதனன் கொள்ளும் வன்மத்திற்கு அனைத்து சூழலும் அதை நியாயம் என்றே உணரச் செய்கிறது.
மொத்த ஹச்தினாபுரியும் துரியன் பிறக்கையில் அவன் அந்த நிலத்துக்கு தீங்கைக் கொண்டு வரப்போகின்ற ஒருவனாகவே காண்கிறது.
தன்னளவில் பாண்டவர் உள்ளிட்ட சகோதரர் அனைவருக்கும் தானே ஒரே முதன்மை பாதுகாவலனாக இருக்க விழைகிறான். அங்கும் அவனுக்கு ''இரண்டாம் இடமே'' கிடைக்கிறது.
தந்தையின் சொல் ஏற்று தருமனுக்கு பட்டம் சூடுகையில் அவனுக்கு சகலமுமாக அவன் பின் நிற்கிறான். ஆனால் அவனது குருவுக்கு உதவி செய்ய தர்மன் மறுக்கிறான். அதற்க்கு தர்மன் சொல்லும் காரணம் துரியன் உள்ளிட்ட அனைவரையும் ஹஸ்தியின் இரண்டாம் தர குடி மக்கள் என எண்ணச் செய்கிறது.
அனைத்துக்கும் சிகரம் இன்றய துரியனின் குமுறல். எத்தனை உத்வேகத்துடன், அவன் படைகளை ஒருங்கு செய்திருப்பான், அது அத்தனையும் சும்மா ஒரு ஏமாற்றுக்கு என்று ஆகும்போது துரியனின் நிலை ?
ஒருபோதும் தர்மன் எதன் பொருட்டும் அர்ஜுனனை அந்நிலைக்கு ஆளாக்குவானா?
யுத்த தர்மம் குறித்த துரியனின் கொதிப்பு கவனம் கொள்ள வேண்டியது. அவனது குரு பலராமனும் குரு சேத்ரப் போர் முடிந்ததும், அதன் அநீதிகள் குறித்து கொதிக்கிறார்.
நியதிகள் மீதான துரியனின் பிடிப்பு அவனது குரு பலராமனிடம் இருந்து அவனக்கு வந்திருக்கலாம்.
தீர்க்க சியாமர் இறந்த அன்று துரியனை கையில் ஏந்தி திருதுராஸ்த்ரர் கதறுகிறார் ''எங்களுக்கு யாரும் இல்லை. கடவுள் கூட''.
இன்று அந்நிலை மேலும் பன்மடங்கு வீரியம் மிக்கதாக தெரிகிறது.
முதன் முதலாக கிருஷ்ணனை அத்தனை காதலுடன் நோக்கிய துரியன் சொற்களில் இன்று அந்த யாதவன் குறித்து எத்தனை கசப்பு.
விதுரன் இல்லாத சமயம் துரியன் தந்தையை காண விழைகிறான். அவனது தந்தையோ முதல் கேள்வியாக விதுரரின் மகன் குறித்து வினவுகிறார்.
எத்தனை மேன்மையான உள்ளம். அனைவரையும் தனது மைந்தர்களாக கருதும் மேன்மையில் இருந்து, தனது மைந்தர்களை மட்டுமே ''தன்''மைந்தர்களாக கருதும் கீழ்மைக்கு திருதுராஸ்த்ரர்ரை எத்தனை விதிகள் கூடி சரிக்கின்றன.
நிகரற்ற ஆளுமைகளின் பெருந்தன்மைக்கும் சிருமைக்குமிடையேயான ஊசலாட்டத்தில் விளையும் ஆற்றலில் நிகழ்ந்ததுதான் குரு சேத்ரப் போரோ?
யோசிக்க யோசிக்க பெருகும் அத்யாயம்.
விவாத தளத்தின் அத்தனை கடிதங்களும் புதிய புதிய வாசலை திறக்கின்றன.இனிய ஜெயம் தளத்தில் என்னை நினைவு கூறும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என சொல்வது சம்ப்ரதாயம் ஆக மாறிவிடும் எனினும், அவர்கள் வழி நிறைய கற்கிறேன் . அதற்க்கு நிச்சயம் எனது நன்றி.
குறிப்பாக எனது அண்ணன் ஈரோடு கிருஷ்ணன் அவர் என்னை நகர்த்தும் எல்லைகள் கூடிக்கொண்டே போகிறது.
எனது அவதானிப்புகளில் அவரும் என்னுடன் உறைந்தே இருக்கிறார்.
இனிய ஜெயம், பாரத மாந்தர்கள் குறித்து பேசாமல் இந்த வருடத்தில் எனது ஒரே ஒரு நாள் கூட கழிய வில்லை.
உவகையை பகிர வார்த்தைகள் இல்லை.
கடலூர் சீனு
கடலூர் சீனு