அன்புள்ள ஜெ
பீமனை நீங்கள் காட்டியிருக்கும் விதம் அழகாக இருக்கிறது. மழைப்பாடலில் அவன் சிறிய குட்டியாக இருக்கிறான். குரங்குகள் அவனை கொண்டுபோய் பால் கொடுத்ததனால் வளர்ந்து பலவானாக ஆகிறான் என்று எழுதியிருந்தீர்கள். அப்போது கொஞ்சம் காமிக் போல இருந்தது
ஆனால் அதை தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்டு செல்கிறீர்கள். அவன் மாருதன். காற்றின் மகன். அனுமனின் தம்பி. ஆகவே அவன் அப்படி இருப்பது சரிதான்.
அதோடு அவனுடைய குணாதிசயமும் அப்படித்தான் இருக்கிறது. அவன் குரங்குமாதிரியே இருக்கிறான். ஊரில் மனிதர்களுடன் ஒட்டுவதே இல்லை. ஆடையும் அணிகளும் இல்லை. காட்டில் சுதந்திரமாக இருக்கிறான். காட்டுமனிதனாகவே அவனைக் காட்டியிருக்கிறீர்கள்
ஆனால் அவன் அனுமனின் தம்பி. அனுமனை சொல்லின் செல்வன் என்று கம்பன் சொல்கிறான். ஆகவே பீமனும் எண்ணிய சொல்லை சரியாகச் சொல்பவனாகவே இருக்கிறான். நாவல் முழுக்க பீமன் ஒரு சொல்லை வீணாகச் சொல்லவில்லை
சண்முகம்